பதிவு செய்த நாள்
18
மார்
2023
09:03
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், ஆண்டுக்கு ஒருமுறை உற்சவர் முருக பெருமான் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அந்த வகையில், நேற்று திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து காலை 9:30 மணிக்கு உற்சவர் முருக பெருமான் படிகள் வழியாக, நல்லாங்குளம் வந்து, அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், உற்சவர் முருக பெருமான், சித்துார் சாலை, சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை 11:30 மணிக்கு பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தார். அங்கு, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வரவேற்பு அளித்தனர். மதியம் 12:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, முருக பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருக பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகர் திருவீதியுலாவை ஒட்டி, பட்டாபிராமபுரம் கிராமம் முழுதும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீதியுலா முடிந்தவுடன், உற்சவர் மீண்டும் மலைக்கோவிலை சென்றடைந்தார். முருக பெருமான் வீதியுலா காரணமாக, பட்டாபிராமபுரம் கிராமத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.