பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
திருப்புவனம்: திருப்புவனம் பூமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் நிறைவு நாள் விழாவான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான பூமாரி ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மற்ற விழாக்களை காட்டிலும் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு திருப்புவனம் நகர மக்கள் எங்கிருந்தாலும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம், திருமணம் கை கூடவும், குழந்தை வரம் வேண்டியும், உடல்நலம் பெறவும் வேண்டி கொண்ட பக்தர்கள் அக்னிசட்டி, கரும்புள்ளி, பொம்மை ஏந்தியும் அம்மனை தரிசனம் செய்தனர். எட்டாம் நாளான இன்று அதிகாலை மூன்று மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் ஏந்தியும், கோயிலில் உருண்டு கொடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் தினசரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் கிராம மக்கள் மற்றும் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.