பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
பேரையூர்: பேரையூரில் பல வரலாற்று சுவடுகளை சுமந்து கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வீற்றிருக்கும் மேலப்பரங்கிரி மலை என்று அழைக்கக்கூடிய பேரையூர் மொட்டமலை.
மதுரை மாவட்டம் பேரையூர் ஊரின் மேற்கு புறம் மேற்கு தொடர்ச்சி மலை தொடக்கமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆதிகால மனிதன் வாழ்ந்ததுக்கான வரலாற்று சான்றாக இயற்கையான குகை, வாழ்விடம் எச்சங்கள் மற்றும் முதுமக்கள் தாழி நிறைந்து காணப்படுகின்றன. பேரையூரின் மேற்கு பகுதியில் மேலப் பரங்கிரி என்று அழைக்கக்கூடிய மலைப்பகுதி ஒன்று உள்ளது. மலையின் கீழ் பகுதியில் சுப்பிரமணியன் சுவாமி கோவில் ஒன்று அமைந்துள்ளது. மேலப்பரங்கிரி மலையின் பின்புறம் புடவு பகுதியில் ஆதி கால மனிதன் உருவம் வெள்ளை நிற பாறை ஓவியம் அழகாகத் தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை நிற பாறை ஓவியம் காலத்தால் பின்பு இருந்தாலும், மனித இனக்குழு இப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றாக அமைந்துள்ளது. பாறை ஓவியங்களில் மனிதன் நடனமாடும் காட்சி, மிருகங்கள், இனக்குழு போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பேரையூர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் சேர நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையே வணிக பாதையில் முக்கியத்துவம் பெற்றவை இவ்வூர். சங்க கால பாண்டிய மன்னன் பேரில் கடுங்கோன் மங்கலம் என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் கடுங்கோ மங்கலம் பேரையூர் என்று மருவியது. குறிப்பாக கிபி 13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் செங்குடி நாட்டு பிரிவின் உட்பகுதியாக காணப்பட்டது.
மலை: மேலப்பரங்கிரி மலை கிட்டத்தட்ட 5238 அடி உயரம் கொண்டவை. மலையின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வெட்டப்பட்டு இரண்டு பக்கம் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் ஒற்றை கருவறை கொண்ட கற்றளி கோவில் கட்டப்பட்டுள்ளது. கற்றளி(கல்+ தளி) என்பது கற்களால் கட்டப்பட்ட கோவில். தளி என்பது கோவில் என்று பொருள். கோவிலில் சிறிய முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் சிவலிங்கம் உருவாக்கப்பட்டு தற்போது மல்லிகார்ஜுனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் வெளிப்புறத்தில் உபபீடம், உபாணம், பத்மம், குமுதம், காந்தம், அக்ரபட்டியல், வேதிகை, கண்டம், நாகப்பந்தம், கால், கலசம், குடம், பலகை, போதிகை, உத்திரம், கபோதம், தேவகோட்டம், கோட்ட பஞ்சாரம் மற்றும் சாலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கோபுரம் முற்றிலுமாக சேதம் ஏற்பட்டுள்ளது.
கல்வெட்டு: மலையின் உச்சியில் கோவிலின் பின்புறம் 1280, 27 ஆம் ஆட்சி ஆண்டு முதலாம் சடைவர்மன் வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் வெட்டவெளி பாறையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கிட்டத்தட்ட 51 வரி கொண்ட தமிழ் எழுத்தில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பேரையூரின் பழைய பெயர் கடுங்கோன்மங்கலம் என்றும், இவ்வூர் செங்குடி நாட்டு எல்லைக்குட்பட்டவை என்றும் இவ்வூரின் நான்கு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து நிலங்களையும் விளையும் விளைச்சல் மற்றும் மலையடிவாரத்தில் இருக்கும் குளத்தையும் முத்து உடையார் விக்ரம சிங்கதேவன் என்ற சிற்றரசன் பேரையூரில் வீற்றிருக்கும் மேலப்பரங்கிரி மல்லிகார்ஜுனர் என்று அழைக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு கால பூஜை மற்றும் திருவிழாக்கள் கோவில் பராமரிப்பு போன்ற பணிக்காக நில தானங்கள் கொடுக்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. குறிப்பாக கல்வெட்டில் நிலதானம் வழங்கியவரின் பெயர் அவர்களின் வம்சம் மற்றும் கல்வெட்டு பொறித்தவரின் பெயர் வெட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை கண்டறிந்து ஆவணமாக வெளியிடப்பட்டது.
கல்வெட்டின் கிழக்கு திசையில் ஆறு வரி கொண்ட பாடல்கள் ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் சிவனைப் போற்றியும் தீராத நோய் இப்பாடலை பாடினால் தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளது. இவ்விரண்டு கல்வெட்டும் எழுத்து அமைதியை பொறுத்து கிபி 13ம் நூற்றாண்டு சேர்ந்த பாண்டிய காலத்து கல்வெட்டாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது இப்பாறை கல்வெட்டு மழை மற்றும் வெயிலால் பாறை சிதைந்து பல எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்படுகின்றது. மதுரை மாவட்டத்தில் தனிப்பாறையில் 51 வரி கொண்ட கல்வெட்டு இருப்பது தனிச்சிறப்பு தான். இக்கல்வெட்டை சுற்றி சுவர் எழுப்பி தகரம் கொண்டகை அமைத்தால் வருங்கால இளைய சமுதாயத்திற்கு நமது ஊரின் பழமை மற்றும் பண்பாடு நினைவுச்சின்னங்களை பாதுகாக்க முடியும்.