பதிவு செய்த நாள்
21
மார்
2023
10:03
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில், 400 ஆண்டுகள் பழமையான மண்டபத்தில், வீர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இம்மண்டபத்தை, வழிபாட்டு தலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், மண்டபத்தின் முன்பகுதி, கடந்த மாதம் சிலரால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன் தினம், சுவாமி சிலையை அகற்ற முயற்சி நடந்ததால், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த தாசில்தார் புவனேஸ்வரன், இம்மண்டபத்தில் நேற்று பார்வையிட்டார். அப்போது, மண்டபம் யார் பெயரில் இருக்கிறதோ, அவர்கள் பெயரில் அறிவிப்பு பலகை வைக்கப்படும். மேற்கொண்டு எந்த பணியும் செய்யக் கூடாது என தெரிவித்தார். தொடர்ந்து, விஷ்ணு காஞ்சி போலீசார், மண்டபம் வெளியில் பள்ளம் தோண்டிய நபரை விசாரித்தனர். இது தொடர்பாக, மதுராந்தகம் அடுத்த மலைவையாவூரைச் சேர்ந்த இளையராஜா, 49, என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே , சம்பத் தனபால் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, இரண்டாவது டிவிஷன், நகர சர்வே எண்கள்: 49/1 மற்றும் 49/2 ஆகியவை தற்போது வரை, அரசு புறம்போக்கு என்றும், விசுவபிராமினர் சத்திரம் என்றும் தாக்கலாகி உள்ளது. இந்த இடத்துக்கு, தனி நபர்கள் போலி பத்திரம் பதிவு செய்து, கோவில் சார்ந்த நிலத்தையும், அரசு நிலத்தையும், அபகரிக்க முயற்சிக்கின்றனர். உரிய ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.