காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று தெலுங்கு புது வருடப் பிறப்பு சோபகிருது நாம யுகாதியை முன்னிட்டு காளஹஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி - அம்மையார்களின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தவனத்தால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தேவஸ்தானம் தயாரித்துள்ள தெலுங்கு புத்தாண்டின் புதிய பஞ்சாங்கத்தை எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு சீனிவாசுலு ஆகியோர் வெளியிட்டனர். மேலும் தேவஸ்தானம் சார்பில், உகாதி பண்டிகையை முன்னிட்டு, தேர் வீதியில் வீற்றிருக்கும் பக்த கண்ணப்ப சுவாமிக்கு, பட்டு வஸ்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு ஆகியோர் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களையும் பூஜைப் பொருட்களையும் ஊர்வலமாக தலை மீது சசுமந்தபடி எடுத்து வந்து ஸ்ரீ பக்த கண்ணப்ப சுவாமிக்கு ஊர்வலமாக சமர்ப்பித்தனர்.
பக்த கண்ணப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடந்தன. உகாதி தினத்தன்று ஸ்ரீ பக்த கண்ணப்ப சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் பூஜை பொருட்கள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது என்று சிவன் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். காளஹஸ்தி (காலி ) ராஜகோபுரம் அருகில் உகாதி பண்டிகையை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் உகாதி பச்சடி வழங்கும் நிகழ்ச்சியை, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் கோலா.ஆனந்த் துவக்கி வைத்து, வழங்கினார். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் நல் ஆரோக்கியமாக இருக்க கோலா. ஆனந்த் வாழ்த்து தெரிவித்தார். நாட்டு மக்களுக்கும் உகாதி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.