பதிவு செய்த நாள்
23
மார்
2023
03:03
நத்தம், நத்தம் அருகே செங்குறிச்சியில் 18ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட முடி மலை ஆண்டவர் சிவன் கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், மாநகராட்சி வார்டு உறுப்பினர் ஆர்.ஆனந்த் ஆகியோர் இப்பகுதியில் வரலாற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில் நத்தம் அருகே செங்குறிச்சி பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து முடிமலை ஆண்டவர் எனும் சிவன் கோயில் பற்றியும் அங்குள்ள கல்வெட்டை பற்றியும் வரலாற்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 1792ம் ஆண்டு 3ம் மைசூர் போருக்கு முன் திண்டுக்கல் சீமை கன்னிவாடி நத்தம், இடையக்கோட்டை விருப்பாட்சி பாளையங்கள் கப்பம் கட்டாததால் மைசூர் அரசர் திப்பு இந்த பாளையங்களை ஜப்தி செய்தார். 1792 மூன்றாம் மைசூர் போரின் முடிவில் திண்டுக்கல் சீமை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிவசம் வந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி திண்டுக்கல் சீமை பாளையங்கள் நிர்வகிக்க பழைய பாளையக்காரர்களிடமே ஒப்படைத்தனர். பாளையக்காரர்கள் கப்பத்தொகையை ஆங்கிலேயருக்கு கட்டினர். பின் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட மோதல்களால் பாளையக்காரர்கள் விருப்பாட்சி கோபால் நாயக்கர் தலைமையில் ஆங்கிலேயருடன் போரிட்டனர். இறுதியாக 1801ம் ஆண்டு கோபால் நாயக்கர் ஆங்கிலேயர்களால் வெல்லப்பட்டு தூக்கிலிப்பட்டார். திண்டுக்கல் சீமை பாளையங்கள் அடக்கப்பட்டன. பாளையங்களின் படைகள் கலைக்கப்பட்டன. ஆயுதம்வைத்திருப்பதும் குற்றமாக்கப்பட்டது. மேலும் பாளையங்களின் வலிமையை குறைக்க பாளையங்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு மிட்டா எனப்படும் ஜமீன்களாக உருவாக்கப்பட்டது. விருப்பாச்சி பாளையத்தின் கிழக்கு எல்லை கோபால்பட்டி வரை இருந்தது. நத்தம் லிங்கம் நாயக்கரின் வடக்கு எல்லை மணக்காட்டூர் செந்துறை வரை இருந்தது.
அம்மையநாயக்கனூர் பாளைய எல்லை சிறுமலை, சிறுமலை அடிவாரப் பகுதி முழுவதுமாக, வடமதுரை அய்யலூர் பகுதி முழுவதும் மணப்பாறை லட்சுமி நாயக்கர் பாளையத்தின் வையம்பட்டியின் தெற்கு, மேற்குப் பகுதிகளும், பாளையங்கள் பிரிக்கப்பட்டு செங்குறிச்சி, மடூர் ,எமக்களாபுரம், வடமதுரை, எரியோடு என பல மிட்டாக்கள் பிரிக்கப்பட்டு ஜமீன்தாரர்கள் உருவாக்கப்பட்டு வரி நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தினார். மதுரை ஆங்கில கலெக்டர் ஹர்திஷ் 1804-ல் மிட்டாக்களின் வரிவிதிப்பு முறையையும், சென்னை வருவாய் நிர்வாக சபை அங்கீகரித்தது முன் ஏற்பட்ட பாளையக்காரர்கள் மோதல்களால், வெறுப்புற்ற ஆங்கிலேயர்கள் திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களை தவிர்த்து, திருச்சி மாவட்ட பாளையம் மருங்காபுரி பாளையத்தின் உரிமையாளர்களைக் கொண்டு செங்குறிச்சி,மடூர் மிட்டாக்கள் நிர்வகிக்கப்பட்டன. இம்மிட்டாக்கள் உருவாக்கப்படுவதற்கு முன் மருங்காப்புரி பாளைய மேற்கு எல்லை, தற்போதைய திருச்சி மாவட்ட மேற்கு பகுதியும், திண்டுக்கல் மாவட்ட கிழக்குப்பகுதியும், சந்திக்கும் செந்துறை கோட்டைப்பட்டி வரை இருந்து, செங்குறிச்சி மிட்டா கரந்தை மலையின் மேற்கு சரிவில் உள்ளது. தற்போது செங்குறிச்சியில் அரண்மனையார் என சொல்லப்படும் நாயக்கர் ஜமீன்தாரர்கள் கல்வெட்டு படி முத்து வெங்கடசாமி நாயக்கர் வாரிசுகள் நல்ல முறையில் பராமரித்து சிறப்பாக வரி,நாட்டு நிர்வாகம் செய்தனர். இச்ஜமீன்தாரர்களே முடிமலை ஆண்டவர் கோயில் கட்டினர்.
தமிழில் முடி என்பது உச்சி, சிகரம், தலை, உயரமான பகுதி எனப் பொருள் கொள்ளும், இக்கரந்தைமலைத் தொடரை திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கிழக்குப்பகுதியிலும், அல்லது மலைக்கேணி சாலை பில்லமநாயக்கன்பட்டி பிரிவு, எளப்பாரிமேடு, முகிலம், அகடாமி மேட்டில் இருந்து பார்த்தால் அய்யலூர் முதல் நத்தம் கணவாய் வரை இக்கரந்தை மலை தொடர் நீண்டு இருக்கும். இதில் முடிமலையே உயர்ந்த மலையாக இருக்கும். இம்முடிமலையின் மேற்கு சரிவு முடிமலையாண்டவர் என்னும் சிவன் கோயில் செங்குறிச்சி அரண்மனையார் கட்டியுள்ளனர். ) முடிமலை ஆண்டவர் கோயில் இக்கோயில் 10 X 10 சதுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல் அஸ்திவாரம், செங்கல், சுண்ணாம்பு காரை, கொண்டு அதிஷ்டானம் பிரஸ்தரம் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கலசமும் செங்கல் சுதையிலே உள்ளது. விமானத்தில் கிரிவலத்தில் பூத கணங்களும், அதன் 4 புறமும் திக்பாலகர்களும், காளைகளும் அமர்ந்த நிலையில் ஒற்றை கருவறையாக உள்ளது. உள்ளே லிங்க படிமம் இல்லை. கோயில் சிதிலமடைந்து வருகிறது.
பெரிய சுதை சிற்ப காவல் ஆண்/பெண் பூதகணங்கள் :- ஆண்பூதம் – தலைமுதல் பிடம் வரை 25 அடி உயர ஆண் பூதகணம் தலையில் அக்கினி கிரீடமும் நெற்றியில் குங்குமமும் நீண்ட புருவங்களும் மிரட்டும் உருண்ட விழிகள் அகன்ற நாசிகள் முறுக்கிய மீசையும் இரு காதுகளிலும் காதுக்கு நான்கு விதம் நீள்வட்ட ஒலைகுண்டமும், வலது கை தூக்கிய நிலையில் மணிகட்டில் வளையும் தோளில் லாகுவளையமும், கழுத்தில் கண்டிகையும் நெஞ்சில் கழுத்தணி ஆரமும், இடது கை கீழ் நோக்கி மழு ஆயுதத்தை பிடித்த நிலையில் உள்ளது. இடுப்பில் வாளும் இடை சுற்று ஆடையும், நீண்ட கால்களில் தண்டையும் உள்ளது. செங்கல் சுண்ணாம்பு மணல் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய சுதை சிற்பம் சிற்பமும் உள்ளது என கூறினர்.