நிலக்கோட்டை: நிலக்கோட்டை நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளிக்கிறார். ஏப்ரல் 2ல் சிம்ம வாகனத்தில் நகர் வலம் வருகிறார். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி, அபிஷேகம் ஆராதனை, ஏப்ரல் 4ல் பால்குடம் கரும்புத் தொட்டில் நேர்த்திக்கடன் ஆகியவை நடக்கிறது. ஏப்ரல் 5ல் பூப்பல்லக்கில் அம்மன் விடிய விடிய வீதி உலா வருகிறார். ஆறாம் தேதி முளைப்பாரி ஊர்வலம் பொன்னூஞ்சலில் தாலாட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. நேற்று முன்தினம் நாடார் உறவின்முறை சார்பில் அன்னதானம் நடந்தது. மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பில் பூச்சொறிதல் விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு, கருமலை பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.