பதிவு செய்த நாள்
27
மார்
2023
08:03
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று சங்கொலி முழங்க கொடியேற்றம் நடந்தது.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம், வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு சங்கொலி முழங்க கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புஷ்பவனேஷ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் மற்றும் பிரியாவிடை தாயாருடன் அலங்கார கோலத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்தை செந்தில் பட்டர், கண்ணன் பட்டர், சுப்ரமணிய பட்டர், பரமசிவம் பட்டர், விவேக் பட்டர், ராஜா பட்டர், விக்னேஷ் பட்டர், ரமேஷ் பட்டர் உள்ளிட்டோர் நடத்தி வைத்தனர். வரும் ஞாயிறு அன்று திருக்கல்யாணமும், திங்கள்கிழமை தேரோட்டமும் நடைபெற உள்ளது. தினசரி புஷ்பவனேஷ்வரரும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.