திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 08:03
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பங்குனி உத்திர திருவிழாவிற்கான கொடியேற்றம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் நடந்தது. காலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிப் பட்டம் வீதியுலா நடந்தது. மஞ்சள் வாசனை பொடி பால் தயிர் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி நடந்தது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 4ம் திருநாளன்று வேணுவனநாதர் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடக்கிறது. இரவு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பத்தாம் திருநாளில் ஏப்.4ல் இரவு 7:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் திருவிழா நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆத்மார்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய உடையவர்லிங்கம் கருவறையிலிருந்து வெளிவந்து பங்குனி உத்திர திருவிழா காலத்தில் மட்டுமே உற்சவர் மண்டபத்தில் அபிஷேக ஆராதனை நடக்கிறது. இந்த அபிசேகத்தை காணும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வார்கள் என்ற ஐதீகம் நிலவுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.