நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருமருகலில் பிரசித்திப் பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கலெக்டர் அருண் தம்புராஜ் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டம் திருமருகலில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஆமோதளநாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்திப் பெற்ற இக்கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 23 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் மற்றும் ராஜகோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.