பதிவு செய்த நாள்
28
மார்
2023
11:03
பெரம்பலுார் : சிறுவாச்சூரில் திருப்பணி முழுமையாக முடிக்காமல், அவரசகதியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தியதால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான மலையில் உள்ள பெரியசாமி, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம், 2015ல் நடந்தது. இந்நிலையில், 2021 நவம்பரில் பெரியசாமி கோவிலில் வைத்திருந்த சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், மர்ம நபரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய, 2021 நவம்பர் இறுதியில் பாலாலயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில், புதிய சுவாமி சிலைகள் செய்யும் பணி நடந்தது. சிறுவாச்சூர் மலைக்கோவில் கும்பாபிஷேகம், மார்ச் 27 காலை 7:30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவுக்காக யாகசாலை, பந்தல் அமைக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஒன்பது லாரிகளில், 25 மற்றும் 26ம் தேதிகளில் கொண்டு வரப்பட்டன. ஆனால், நேற்று காலை 8:00 மணி வரை, இக்கோவிலில் புதிய சுவாமி சிலைகள் வைக்கப்படவில்லை. பரிவார தெய்வங்களின் சிலைகள் லாரியிலேயே வைக்கப்பட்டிருந்தன. கைகள் இணைக்கப்படாத பெரியசாமி சிலை மட்டும், நேற்று காலை, கிரேன் உதவியுடன் கோவிலில் வைக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. புதிய சுவாமி சிலைகள் வைக்கப்படாததால் கும்பாபிஷேகத்துக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள், காலை 9:30 மணி வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று மாலை 5:00 மணி வரை, இக்கோவிலின் அனைத்து சுவாமி சிலைகளும் வைக்கப்படவில்லை. கோவில் திருப்பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் அவசரகதியில் விழா நடத்தியதால், விபரீதம் ஏதும் ஏற்படுமோ என பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் கூறுகையில், இங்கு மூன்று கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலிலும் அடுத்தடுத்து சிலைகள் வைக்கப்படும். மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு முன், இந்த கோவில்களில், 29 சிலைகளும் அமைக்கப்படும், என்றார்.
ஹிந்து முன்னணி திருச்சி கோட்ட செயலர் குணசேகர் கூறியதாவது: சிறுவாச்சூரில், ஏற்கனவே சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி கோவில்களுக்கு அவசரகதியில் குடமுழுக்கு நடந்தது. அங்கு, பெரியசாமி மற்றும் பரிவார தெய்வங்களின் முழு உருவங்கள் பூர்த்தி அடையாத நிலையில், அவசர அகதியில் குடமுழுக்கு நடத்தி, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளனர். பிரச்னைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, கோவில் அலுவலரிடம் மனு கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.