பதிவு செய்த நாள்
31
மார்
2023
07:03
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள குண்டத்து காளியாதேவி கோவிலில், 35ம் ஆண்டு குண்டம் திருவிழா துவங்கியது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையம், காளியாதேவிபுரத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலின், 35ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த, 21ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 28ம் தேதி ஆடு குண்டம் திறக்கப்பட்டது. ஏப்., 3ம் தேதி அம்மன் அழைப்பும், 4ல் ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகம், அக்னி சட்டி ஆகியவை அழைத்து வரப்பட்டுள்ளது. அன்று இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்படுகிறது. 5ம் தேதி அதிகாலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அம்மனுக்கும், மகா முனிஸ்வரருக்கும் அக்னி அபிஷேக பூஜை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், பொங்கல் வைத்து மகனுக்கு எடுத்தலும், கிடா வெட்டு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏழாம் தேதி இளநீர் அபிஷேகமும், பத்தாம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. பூஜை மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா கமிட்டினர் செய்து வருகின்றனர்.