பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
05:04
தேவிபட்டினம், தேவிபட்டினம் நவபாஷாண நடைமேடையில், சூட்டை தணிக்கும் விதமாக, நடைபாதை டைல்ஸ் கற்கள் மீது ஊழியர்கள் தண்ணீர் தெளித்து பக்தர்களை மகிழ்வித்தனர்.
தேவிபட்டினம் கடலுக்குள் நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தை பாக்கியம், திருமண தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு, தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை, பக்தர்கள் எளிதாக வழிபடும் வகையில், கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்துள்ள கடல் பகுதி வரை, நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் சுட்டெரித்து வரும் கடும் வெயிலால், காலை 11:00 மணிக்கு மேல் நடைமேடையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் சூரிய வெப்பத்தால் சூடாகி விடுகின்றன. நடைபாதை சூட்டில் இருந்து பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, நவபாஷாண ஊழியர்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை,மாலைவரை, நடைமேடையில் தண்ணீரை தெளித்து, நடைமேடையை குளிர வைத்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து சென்றனர்.