திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நாளை திருக்கல்யாண உற்சவமும், திங்கள்கிழமை தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா கடந்த ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மனும் சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 8ம் நாளான நாளை காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு இரவு ஏழு மணிக்கு யானை வாகனத்தில் அம்மனும் சுவாமியும் வீதியுலா வர உள்ளனர். திங்கள் கிழமை காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் நான்கு ரத வீதிகளும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன், மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.