பதிவு செய்த நாள்
03
ஏப்
2023
03:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் ஏப். 9ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க பாரம்பரிய முறைப்படி கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் ஏப். 8 மதியம் 12:20 முதல் 12:40மணிக்குள் நடக்கிறது. மறுநாள் கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மலையைச் சுற்றி தேர் வலம் வரும். பாரம்பரிய அழைப்பு: தேர் இழுக்க முக்கியஸ்தர்கள், கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக சிவாச்சாரியார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது. வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, திருவிழா பத்திரிக்கை, விபூதி, சந்தனம் கொடுத்து அழைக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய முறைப்படி இந்த அழைப்பு நடைபெற்று வருகிறது. தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்: கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத் தேர் அலங்கரிக்கும் பணி துவங்கியது. தேரில் தண்ணீர், எண்ணெய் மூலம் தூய்மை பணி முடிந்து, தேரின் உச்சிப் பகுதியில் கொடுங்கை அமைத்து, அலங்கார வண்ண குடைதுணிகள், முன் பகுதியில் நான்கு குதிரைகள் பொருத்தப்படும். இதற்கான பணிகள் நேற்று துவங்கியது. ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி திருவிழாவில் மட்டுமே இந்த தேர் புறப்பாடாகும்.