பதிவு செய்த நாள்
03
ஏப்
2023
02:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழாவின்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக, திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து பட்டு கொண்டுவரப்பட்டது.
கடந்த மார்ச் 28 அன்று கொடியேற்றத்துடன் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஒன்பதாம் திருநாளான (ஏப். 5) காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருமலை திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து, இன்று காலை 9:15 மணிக்கு, கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டியின் மனைவி சொர்ணலதா மற்றும் கோயில் பட்டர்கள், பட்டு கொண்டு வந்தனர். இதனை கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் ஆகியோர் எதிர் கொண்டு வரவேற்றனர். பின்னர் யானை முன் செல்ல மாட வீதிகள் சுற்றி வந்து, ஆண்டாள் சன்னதியில் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கன்னிகா தானத்தின்போது இப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.