மேட்டுப்பாளையம்: மைதானம் மாரியம்மன் கோவிலில், நாளை (4ம் தேதி) குண்டம் இறங்கும் விழா நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், உருளைக்கிழங்கு மண்டிகள் நிறைந்த, காந்தி மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 92ம் ஆண்டு விழா, கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாற்றுடன் துவங்கியது. 28ம் தேதி கம்பம் நடுதலும், 30ம் தேதி கொடியேற்றமும், 31ம் தேதி பால்குடம் எடுத்து வந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இன்று காலை, 8:00 மணிக்கு குண்டம் திறக்கப்பட உள்ளது. நாளை காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.