பதிவு செய்த நாள்
07
ஏப்
2023
04:04
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய பால்குட விழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 28 கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி வலம் வந்தார். ஏப்., 5 இரவு 8:00 மணிக்கு மின் அலங்கார தீப தேரோட்டமும், மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் எழுந்தருளினார். தொடர்ந்து ஏப்., 6 காலை தீர்த்தவாரி உற்சவம், இரவு கொடி ஏற்றமும் நடந்தது. இன்று அதிகாலை 5:00 மணி தொடங்கி வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் கட்டி, பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கோயிலை நோக்கி சென்றனர். அப்போது சக்தி கோஷம் விண்ணை முட்ட, மேள தாளத்துடன் காலை 10:00 மணி வரை பால் குடங்கள் சென்றன. பின்னர் அம்மனுக்கு சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், பழ வகைகள் மற்றும் பால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் 5 அடி முதல் 21 அடி வரை நீளமுள்ள வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பரமக்குடி மற்றும் சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 8:00 மணிக்கு அம்மன் பூ பல்லக்கில் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வீதி வலம் வந்தார்.