பதிவு செய்த நாள்
11
ஏப்
2023
10:04
சின்னாளபட்டி: ஜே.புதுக்கோட்டையில் 200 ஆண்டு பாரம்பரிய மாலை தாண்டுதல் விழாவில், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி அருகே ஜே.புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட பொம்மிநாயக்கர், காலநாயக்கர், அம்பைய நாயக்கர் சமுதாயத்தினரின் மாலை தாண்டும் விழா நடந்தது. 200 ஆண்டுகால பாரம்பரியமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விழா நடப்பது வழக்கம். இதற்காக வெளி மாவட்டங்களில் வசிக்கும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் தங்களின் வளர்ப்பு பசு உள்ளிட்ட கால்நடைகளுடன் வந்திருந்தனர். பொம்மைய சுவாமி மாலை தாத்தா மலைக்கோயிலில், நாகமுத்து நாயக்கர் தலைமையில் பொங்கல் அழைப்புடன் விழா துவங்கியது. ராஜ கம்பளத்தார் வழக்கப்படி தேவதுந்துமி வாத்தியம் முழங்க, தேவராட்டம், கும்மி உள்ளிட்டவை நடந்தது. நேற்று மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து அலங்கரித்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால் பூஜை, மந்தையார் சந்திப்பு, வில்வ கூடை அழைப்பு, பொதி கல் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. சலகை எருதுகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மாடுகளுக்கு மரியாதை செய்யும் மாலை தாண்டுதல் விழா நடந்தது. தலைப்பாகை அணிந்த இளைஞர்கள், நூற்றுக்கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் நிறுத்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.