ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா: திருச்சிவிகையில் நம்பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2023 08:04
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரை தேர் திருவிழாவின் முதல் திருநாளில் திருச்சிவிகையில் உபய நாச்சியார்களுடன் சித்திரை திருவீதிகளில் புறப்பாடு கண்டு அருளினார்.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் “சித்திரைத்தேர் திருவிழா நேற்று ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 11 நாட்கள் விமரிசையாக 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. சித்திரை தேர் திருவிழா விருப்பன் திருநாள் நேற்று காலை மேஷ லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவின் போது உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் முதல் திருநாளில் திருச்சிவிகையில் உபய நாச்சியார்களுடன் சித்திரை திருவீதிகளில் புறப்பாடு கண்டு அருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் திருவிழாவின் நான்காவது நாள் 14.04.23 அன்று மாலை கருட வாகனத்திலும், ஏழாம் திருநாளான 17.04.23 அன்று மாலை நெல்லளவு கண்டருளுகிறார். விருப்பன் திருநாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘சித்திரை திருத்தேர்’ வடம் பிடித்தல் 9ம் திருநாளான வரும் 19.04.2023 புதன்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் நடைபெறஉள்ளது. 11ம் திருநாளான 21.04.2023 அன்று ஸ்ரீநம்பெருமாள் இரவு 8.00 மணியளவில் ஆளும் பல்லக்கில் புறப்பாடு கண்டருள்கிறார்.