ஆயிரம் ஆண்டு பழமையான முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2023 04:04
நரிக்குடி: திருச்சுழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பத்தை தென்னக வரலாற்று மைய, வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், சிவா, ஹரிஹரன், கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் தங்கமுத்து கள ஆய்வு செய்தனர். அப்போது 9, 10ம் நூற்றாண்டின் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் என கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் கூறியதாவது: வேலடி விநாயகர் திருக்கோயில் திருச்சுழியில் உள்ளது. இந்த சிற்பம் 3 அடி உயரம், 1.5 அடி அகலம் கொண்டதாக செதுக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டியர்களின் குடவரைக் கோயில்களுக்கு அடுத்த கட்டம், அதாவது கற்ச்சிப்பங்களின் முதற்கட்ட வளர்ச்சி தான் இச்சிற்பம். இக்கோயிலுள்ள விநாயகர் ஒரு பட்டியக்கல்லில் புடைப்புச் சிற்பமாக அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் வளிதாசன கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். தலையில் கரண்ட மகுடம் தரித்தும், அகன்ற 2 காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் 4 கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில் மழுவும், இடது கரத்தில் பாசக்கயிறு, வலது கரத்தில் முறிந்த தந்தமும், இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது. தும்பிக்கை, மோதகத்தை சுவைப்பது போல் உள்ளது. வயிற்றுப் பகுதியில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கு உரித்தான கலைநயத்தில் இச்சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.