பதிவு செய்த நாள்
18
ஜன
2011
05:01
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார். கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள். நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை <உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார் வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.
சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார். பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார். ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான். உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான். தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. இவரைப் பற்றிய இன்னொரு சம்பவமும் சுவையானது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும். அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.