பதிவு செய்த நாள்
15
ஏப்
2023
09:04
தொண்டாமுத்தூர்: தமிழ் புத்தாண்டு தினத்தில், கோவை ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு, பல வகையான பழங்களை அர்ப்பணித்து பொதுமக்கள் வழிபட்டனர்.
கோவை, ஈஷா யோகா மையத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக, ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு, பல வகையான பழங்களை அர்ப்பணித்து பொதுமக்கள் வழிபட்டனர். சுற்றுவட்டார கிராம மக்களால், பல வகையான பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட லிங்க பைரவி தேவி திருமேனியை, பொதுமக்கள் ஆதியோகி சிலை முன் ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் ஈஷா சமஸ்கிரிதி மாணவர்களின் பக்தி பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், லிங்க பைரவி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், லிங்கபைரவியை தரிசித்தனர்.
ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழாவின்போது, பக்தி நயம் ததும்பும் தேவார பாடல்களை தமிழக கிராமங்கள்தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்; ஆதியோகி முன், தேவார பாடல்களை பாடி அர்ப்பணிக்கும், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியிருந்தார். அதன் துவக்கமாக, சென்னையை சேர்ந்த, சூரிய நாராயணன் என்ற 9 வயது சிறுவன், தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதிசூடிய போன்ற தேவாரப் பாடல்களை பாடி, ஆதியோகி திருமேனியை பரிசாக பெற்றார். அதேபோல், ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர்.