மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் கடலுக்குள் வலை வீசும் படலம் காட்சிகள் : மே 5ல் திருக்கல்யாண உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2023 04:04
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்திய நாதர் சிவன் கோயில் உள்ளது. மன்னார் வளைகுடா கடற்கரை இதன் அருகே அமைந்துள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வலை வீசும் படல காட்சிகள் நிகழ்த்தப்படுகிறது.
சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் 57 ஆவது படலமாக கடலுக்குள் வலை வீசும் படலம் நிகழ்வு நடத்தப்படுகிறது. வருகிற மே 5 அன்று காலை 7:00 மணியளவில் ஒரு படகில் கோயில் குருக்கள் சிவபெருமான் வேடமணிந்து செல்வார். மீனவர் வேடமடைந்த மற்றொருவர் வலையை வீசி சுறா மீனை பிடித்து கரைக்கு கொண்டு வந்து அதனை வதம் செய்வார். சுறா மீனுக்கு சாப விமோசனம் அளிக்கப்பட்டு அன்றைய தினம் காலை 9: 30 மணிக்கு மேல் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் நடக்கிறது. இதனை முன்னிட்டு வருகிற ஏப்.26 அன்று மாரியூர் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி காலை 9:00 மணியளவில் நடக்க உள்ளது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் உற்ஸவமூர்த்தி சுவாமி பிரகார வீதி உலா நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.