நத்தம், நத்தம் அருகே பாலப்பநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் அம்மன் பூஞ்சோலையில் இருந்து மேளதாளம் முழங்க வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக முத்தாலம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிசட்டி, மாவிளக்கு, முளைப்பாரி, கிடாய் வெட்டுதல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். பின் மாலையில் பக்தர்கள் புடைசூழ தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் பூஞ்சோலை சென்றது. விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாலப்பநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.