பதிவு செய்த நாள்
21
ஏப்
2023
06:04
செஞ்சி: செஞ்சி கமக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நடத்துவது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கன்னியம்மனுக்கு சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர்விழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே மாதம் 2ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது. இந்த விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி கோட்டை பராமரிப்பு அலுவலர் நவேந்திரா ரெட்டி, இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்பிரமணியம், அறங்காவலர் அரங்க ஏழுமலை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், பா.ஜ., மாவட்ட முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ராமு மற்றும் திருவிழா உபயதாரர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பா.ஜ., இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். இதில் தேர் செல்லும் பாதையை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும், பேரூராட்சி சார்பில் துாய்மை பணி, குடிநீர் வசதி செய்ய வேண்டும், சுகாதார துறை சார்பில் ஆம்புலேன்ஸ், மருத்துவ முகாம் அமைக்க வேண்டும், மின் துறையினர் தேர் திருவிழாவின் போது துண்டிக்கப்டும் மின் இணைப்பை மீண்டும் விரைவாக தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
வெளிநடப்பு: செஞ்சி கோட்டையில் உடைக்கப்பட்ட கமலக்கன்னியம்மன் சிலைக்கு பதிலாக புதிய சிலை வைப்பதற்கு இந்து முன்னணி மற்றும் கமலக்கன்னியம்மன் கோவில் நிர்வாக குழு சார்பில் இந்திய தொல்லியல் துறையில் அனுமதி கேட்டிருந்னர். இதற்கு இந்திய தொல்லியல் துறையினர் அனுமதி வழங்காவில்லை. கண்டித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணி தலைமையில், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ராமு, மாவட்ட தலைவர் விஷ்ணுராஜன் உள்ளிட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர்.