மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 06:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் வீதி உலா நடைபெறும்.கோவில் முன்பாக வைகை ஆற்றில் தினந்தோறும் மண்டகப்படி தாளர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். வைகை ஆற்றுக்குள் சிறுவர்களுக்காக ராட்டினங்கள் மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த வருட சித்திரை திருவிழா நாளை காலை 8:00 யிலிருந்து 8:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற மே.2ம் தேதியும், தேரோட்டம் மே.3ம் தேதியும், விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் எதிர்சேவை மே.4ம் தேதியும்,அழகர் குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கும் விழா மே.5ம் தேதியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் தெய்வசிகாமணி பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.