பதிவு செய்த நாள்
25
செப்
2012
10:09
திருத்தணி: மத்தூர் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். இரவு காவலாளி கூச்சல் போட்டதால், பணம், நகைகள் தப்பின. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் மத்தூரில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு, கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயவேல் கோவிலை பூட்டிக் கொண்டு சென்றார். அங்கு, இரவு காவலாளியாக தணிகாசலம், 38 என்பவர் இருந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில், மர்ம நபர்கள் கோவிலின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்தனர். பின், உண்டியல் மற்றும் மூலவர் சன்னிதிக்கு செல்ல முயற்சித்தனர். அப்போது காவலாளி தணிகாசலம் மர்ம நபர்கள் கோவில் உள்ளே இருப்பதை பார்த்து, திருடன், திருடன் என, கூச்சல் போட்டார். இதனால், கோவில் அருகில் குடியிருந்த பொதுமக்கள், 30க்கும் மேற்பட்டோர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து அங்குள்ள ஏரிக்குள் ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில் தக்கார் ஜெயசங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயவேலு ஆகியோர் அம்மன் கோவிலு<க்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, நகைகள், உண்டியல் பணம் மற்றும் எந்த பொருளும் கொள்ளை போகாமல் இருந்தது தெரிய வந்தது. காவலாளி கூச்சல் போட்டதால், பணம், நகைகள் தப்பின.