பழநி, மலைக்கோயிலில் புதிய வின்ச் பெட்டிகள் தண்டவாளத்தில் இணைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2023 04:04
பழநி: பழநி, மலைக்கோயில் சென்று வர பயன்படும் வின்ச் சேவைக்கு புதிய பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது
பழநி மலைக்கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. தற்போது மூன்று வின்ச் பாதைகள் மலைக்கோயில் சென்று வர செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு வின்ச் மூலம் 7 நிமிடம் முதல் 10 நிமிடங்களுக்குள் 36 நபர்கள் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம். கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு புதிய வின்ச் பெட்டிகள் ரூ.ஒரு கோடி மதிப்பில் சென்னையில் தயாரிக்கப்பட்டு மலைக்கோயில் வின்ச் ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டது. புதிய வின்சின் மொத்த நீளம் 11.35 மீட்டர், உயரம்.2.8 மீட்டர், அகலம் 2.5 மீட்டர் உடையது. ஒரு பெட்டியின் எடை 3.6டன் கொண்டது. இதில் குளிரூட்டும் வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளது. ஒருமுறையில் 72 நபர்கள் மலைக்கோயில் சென்று வர இயலும்.
இதனை மூன்றாவது வின்ச் பாதையில் புதிய வின்ச் பெட்டிகள் பொருத்த பழைய வின்ச் பெட்டிகள் அகற்றப்பட்டன. இயந்திரத்தின் உதவியுடன் துணை ஆணையர் பிரகாஷ் முன்னிலையில் செயற் பொறியாளர் நாச்சிமுத்து, உதவி பொறியாளர்கள் குமார், பார்த்திபன் மேற்பார்வையாளர் மோகன்ராஜ், பணியாளர்கள் இணைந்து ஐந்து மணி நேரத்தில் புதிய வின்ச் பெட்டிகளை தண்டவாளத்தில் வைத்து, மலைக்கோயில் மேல்புறம் உள்ள இயந்திரத்தில் பொருத்தப்பட்ட 450 மீட்டர் நீளமுடைய ரோப் உடன் இணைத்தனர். பக்தர்கள் வசதிக்காக நடைமேடை ஆகியவை மாற்றி அமைக்கப்படும். விரைவில் புதிய வின்ச் பெட்டிகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.