உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 08:05
உத்தரகோசமங்கை, மே 4- உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்கள நாத சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை உற்ஸவ விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். சித்திரை உற்ஸவம் பெருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள கொடிமரத்தில் கோயில் ஸ்தானிய குருக்களால் கடந்த ஏப்.,26 அன்று கொடிபட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வகையான அலங்கார வாகனங்களில் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மன் வீதி உலா புறப்படும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சித்திரை பெருவிழாவினைமுன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உள்ள அலங்கார திருமண மண்டபத்தில் திருக்கல்யாண உற்ஸவம் நேற்று மாலை 5:30 மணியளவில் நடந்தது. உற்ஸவமூர்த்திகள் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் மற்றும் பிரியா விடை உடன் மாலை 4:30 மணியளவில் அலங்கார கொழு மண்டபத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் ஸ்தானிய குருக்களால் உற்ஸவர் மங்களேஸ்வரி அம்மனின் கழுத்தில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளால் ஆன மங்கள நாண் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் மீது அச்சதை துவப்பட்டு ஆசீர்வாதம் செய்யப்பட்டது. தீப, தூப அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்று மாலை 4:00 மணிக்கு மேல் 60 அடி உயரமுள்ள பெரிய தேரில் உற்ஸவமூர்த்தி புறப்பாடாகி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.