கள்ளழகருக்கு எதிர்சேவை : அழகரை வரவேற்ற மதுரை மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2023 08:05
மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் மதுரைக்கு புறப்பட்டார். இன்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது.
மதுரை வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து புறப்பட்டு, மதுரை வந்தார் கள்ளழகர். வழிநெடுகிலும் சர்க்கரை, பொரி கடலை கலந்து வைத்த செம்பில் சூடம் ஏற்றி பக்தர்கள் எதிர்சேவை செய்தனர். அழகர்கோவில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக, தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை காலை 5:45 முதல் 6:12 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை அழகர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்தார். அழகரை மேள, தாளம் முழங்க எதிர்கொண்டு அழைத்த பக்தர்கள் வெண் பட்டு விரித்து, தரையில் விழுந்து வணங்கி வரவேற்றனர். தொடர்ந்து அழகரை பக்தர்கள் பொரிகடலை, சர்க்கரை கலந்து வைத்த மஞ்சள் துணி சுற்றிய செம்பில் சூடம் ஏற்றி கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்து வருகின்றனர். இன்று அதிகாலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு தமுக்கம் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். இதைதொடர்ந்து நாளை அதிகாலை5:45 மணிக்கு மேல் 6-:12 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். மே 6- தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார அலங்காரம் நடக்கிறது. மே 7 இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. மே 8- கள்ளழகர் அழகர் மலை நோக்கி புறப்பட்டு, மே 9 காலை 10:32 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். அதோடு மதுரை சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.