பதிவு செய்த நாள்
04
மே
2023
10:05
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே தாளியூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.
கடந்த, 18ம் தேதி வாஸ்து பூஜையுடன் விழா தொடங்கியது. கணபதி ஹோமம், பூச்சாட்டு, கொடியேற்றுதல், ரோஜா பூ, மல்லிகை பூ அலங்காரம், அனுவாவி சுப்பிரமணியர் கோவில், மருதமலை முருகன் கோவில் ஆகிய இடங்களில் இருந்து, புனித நீர் கொண்டு வருதல், சந்தன காப்பு, புஷ்ப அலங்காரம், சக்தி கரக ஊர்வலம், அம்மனுக்கு திருக்கல்யாணம், அலங்கார பூஜை, விளக்கு பூஜை, சம்பங்கி, செவ்வந்தி, மல்லிகை பூ, தாமரை பூ அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை, 30 அடி குண்டம் கண் திறப்பு நிகழ்வு நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு முதலில் பூசாரி குண்டம் இறங்க, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அக்னி அபிஷேகம், அலங்கார பூஜை, நடந்தது. பக்தர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாவிளக்கு, விளக்கு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, தினமும் கலை நிகழ்ச்சிகள் அன்னதானம் நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.