பதிவு செய்த நாள்
05
மே
2023
08:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்.
பரமக்குடி சவுராஷ்ட்ரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 30 காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. பின்னர் இரவு 2:00 மணிக்கு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி, கள்ளழகர் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை கண்டாங்கி பட்டு உடுத்தி, வெள்ளி பாத்திரத்தில் தயிர் சாதம் சாப்பிட்டபடி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் நல்ல செழிப்புடன் இருப்பதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், என கோயில் அர்ச்சகர் சத்யா பட்டாச்சார் தெரிவித்தார்.
தொடர்ந்து கருப்பணசாமியிடம் விடை பெற்று பக்தர்கள் வெள்ளத்தில் ’கோவிந்தா’ கோஷம் முழங்க காலை 3:30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து காலை 6:30 மணிக்கு தல்லாகுளம் மண்டபத்தை அடைந்து, அங்கிருந்து இன்று(மே 5) காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் பெருமாள் அழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகிறார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வைகை ஆற்றில் ராட்டினம், சர்க்கஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.எஸ்.பி., காந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நூற்றுக்கு மேட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்ட் நாகநாதன், டிரஷரர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.