நத்தம், நத்தம் அருகே உலுப்பகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த மே 3 காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தோரணமரம் ஊன்றுதல் அன்று இரவு வானவேடிக்கை, தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு,மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் நேற்று மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.