பதிவு செய்த நாள்
06
மே
2023
03:05
பழநி: பழநி, மலைக்கோயில் புதிய வின்ச் பெட்டிகள் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பழநி மலைக்கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. தற்போது மூன்று வின்ச் பாதைகள் மலைக்கோயில் சென்று வர செயல்பாட்டில் உள்ளது. ஒரு வின்சில் இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டிக்கு 18 நபர்கள் வீதம் வின்ச் மூலம் 7 நிமிடம் முதல் 10 நிமிடங்களுக்குள் மலைக் கோயிலுக்கு சென்று வரலாம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இரண்டு புதிய வின்ச் பெட்டிகள் உடன் ரூ.ஒரு கோடி மதிப்பில், சென்னையில் தயாரிக்கப்பட்ட 11.35 மீ., நீளமும், .2.8 மீ, உயரமும், 2.5 மீ., அகலமும் உடைய வின்ச் கொண்டுவரப்பட்டது. இந்த வின்ச்சில் ஏ.சி., வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளது. வின்ச்சின், ஒரு வின்ச் பெட்டி, 3.6டன் எடை உடையது. இதில் ஒரு பெட்டிக்கு 36 நபர்கள் பயணிக்கலாம். இந்த வின்ச் பயன்பாட்டுக்கு வரும் போது, வின்ச் வரிசையில், 2 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள், அரை மணி நேரம் முன்னதாக மலைக்கோயில் செல்லலாம். இதுபோல் மூன்று வின்ச்சிலும், பெட்டிகள் பொருத்தினால், பக்தர்கள் வின்ச், வரிசையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும். இந்த நிலையில் பெட்டிகள் மூன்றாவது வின்ச் பாதையின் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டது. அதன்பின் மெதுவாக பெட்டிகள் இயக்கப்பட்டன, வின்ச் பாதையில் பெட்டியின் நகர்வு, ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் எடை ஆகியவை கணக்கிடப்பட்டன. அதில் தகுந்த அளவு எடை ஏற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பக்தர்களின் எளிதாக வீன்சில் ஏறி இறங்கும் வகையில் நடைமேடைகள் மாற்றி அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. மேலும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். செயற் பொறியாளர் நாச்சிமுத்து, உதவி பொறியாளர்கள் குமார், பார்த்திபன் மேற்பார்வையாளர் மோகன்ராஜ், பணியாளர்கள் உடன் இருந்தனர். விரைவில் புதிய வின்ச் பெட்டிகள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.