பதிவு செய்த நாள்
08
மே
2023
06:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் புரோகிதர்கள் பூஜை நடத்திய இடத்தை கோயில் நிர்வாகம் அகற்றியதற்கு, அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 3ம் பிரகாரத்தின் மைய மண்டபம் அருகே உள்ள மேடையில் பல ஆண்டுகளாக புரோகிதர்கள், பக்தர்களுக்கு பூஜை செய்து கட்டணம் வசூலித்தனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் கூட்ட நெரிசலை சமாளிக்க 3ம் பிரகாரம் மேடையில் பக்தர்கள் ஒய்வு எடுத்து தரிசனம் செய்திட இருக்கை வசதியுடன் தடுப்பு வேலி அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று கோயில் அதிகாரிகள், 3ம் பிரகார மேடையில் பூஜைகள் நடத்த கூடாது, கோயிலுக்கு வெளியில் பூஜை செய்யுங்கள் என புரோகிதர்களிடம் உத்தரவிட்டனர். இதற்கு புரோகிதர்கள், நகராட்சி தலைவர் நாசர்கான், அ.தி.மு.க., நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுனன், இடதுசாரி கட்சி நிர்வாகிகள் கருணாகரன், செந்தில்வேல், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கண்இளங்கோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பின் புரோகிதர்கள், நடராஜர் சன்னதி அருகே உள்ள மேடையில் பூஜை செய்ய கோயில் நிர்வாகம் அனுமதித்தது.