காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
கோட்டை நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நேற்று மாலை நடந்தது. நேற்று காலை அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. பாரி நகரில் உள்ள அம்மன் கோயிலில் இரவு தங்கி இன்று காலையில் தேர் மீண்டும் கோட்டையூர் கோயிலை வந்தடையும்.