பதிவு செய்த நாள்
11
மே
2023
09:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று முன் தினம் இரவு கள்ளழகர் கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை உற்சவ சாந்தி அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த கோவிலில் ஏப்., 30 தொடங்கி, மே 5 அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் பல்வேறு திருக்கண்கள்களில் சேவை சாதித்து, நேற்று முன்தினம் இரவு 8:10 மணிக்கு பூ பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் மீண்டும் திருக்கோயிலில் சேர்க்கை ஆகினார். அப்போது பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 9:30 மணி தொடங்கி கள்ளழகர், பக்தர்களுக்கு கண்ணாடி சேவையில் அருள் பாலித்தார். அப்போது பெருமாள் மறை பொருளாக இருந்த நிலையில், பக்தர்கள் எதிர் திசைகளில் இருந்த கண்ணாடியில் பார்த்து தரிசித்து சென்றனர். 10 நாட்கள் விழா நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 10:00 மணி தொடங்கி சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர் பால் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் மற்றும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து கும்பத்தில் இருந்த புனித நீரால் உற்சவ சாந்தி மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் ஏகாந்த சேவையில் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. மேலும் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில், நேற்று இரவு கள்ளழகரின் கலைப்பு தீர கசாயம் நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அர்ச்சகர்கள் சுவாமியை சயன திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் சேர்த்தனர். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.