பதிவு செய்த நாள்
12
மே
2023
09:05
திருவொற்றியூர்: வசந்த உற்சவ திருவிழாவையொட்டி, திரிபுர சுந்தரி உடனுறை தியாகராஜ சுவாமி, வசந்த தீர்த்த குளத்தைச் சுற்றி ஒய்யார திருநடனம் புரிந்தார்.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம், 15 நாட்கள் வசந்த உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, மே 5ம் தேதி, தியாகராஜ சுவாமி மண்டக படியுடன், வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக துவங்கியது. விழா நாட்களில், சனி மற்றும் புதன் கிழமைகளில் மட்டும், சுவாமி மாடவீதி உலா வருவார். மற்ற நாட்களில், உள் உற்சவம் நடக்கும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, திரிபுர சுந்தரி உடனுறை தியாகராஜ சுவாமி, பிரமாண்ட மலர் அலங்காரத்தில், கேடயத்தில் எழுந்தருளினார். பின், சுவாமி நான்கு மாடவீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தை வந்தடைந்த தியாகராஜ சுவாமி, கைலாய வாத்தியங்கள் முழங்க, சாம்பிராணி துாபமிட, வசந்த தீர்த்த குளத்தைச் சுற்றி, ஒன்பது முறை ஒய்யார திருநடனம் புரிந்தார். இதை கண்டுகளித்த பக்தர்கள், திருநடனத்தின் போது துாவப்பட்ட வண்ண மலர்களை, பிரசாதமாக எடுத்துச் சென்றனர். வரும், 19ம் தேதி, தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவத்துடன், வசந்த உற்சவ திருவிழா நிறைவுறும். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையிலான திருக்கோவில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.