பதிவு செய்த நாள்
14
மே
2023
11:05
வடவள்ளி: வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோவிலில், உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடவள்ளி, மருதமலை ரோட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை, கோவில் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை, துணியில் கட்டி எடுத்துக்கொண்டு, கோவிலின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து தப்பி சென்றுள்ளனர். அப்போது, கோவில் வளாகம் முழுவதும் சில்லறை காயின்களும், ரூபாய் நோட்டுகளும் சிதறிக்கிடந்தது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல, கோவிலுக்கு சென்ற பூசாரி, உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து, வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கைரேகை தடயங்களை கைப்பற்றினர். அதோடு, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதேபோல, நியூ தில்லை நகரில் உள்ள விநாயகர் கோவிலில், பித்தளை பொருட்கள் மாயமாகியது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.