பதிவு செய்த நாள்
15
மே
2023
10:05
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த மார்.27ல் மூன்றுமாத கம்ப கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து நேற்று பூசாரி சண்முகவேல் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நகரத்தார்கள் தலைமையில் பால்குடமும், பொதுமக்கள் பூத்தட்டும் சுமந்து நான்கு ரத வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து அம்மன் மின்னொளி ரதத்தில் பவனி வந்தார். இதையடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இந்நிகழ்வில் நகரத்தார்கள் ராஜேந்திரன், கண்ணப்பன், வெங்கடாசலம், நாச்சியப்பன், கணேசன், முத்துக்குமார், செயல் அலுவலர் சுதா, கணக்கர் முரளிதரன், காவல் ராசு அம்பலம் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து மே.22ல் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து அம்மன் வீதியுலா புறப்பாடும், மே.30ல் பக்தர்களின் நேர்த்திக்கடனான பால்குடம், அக்னி சட்டி விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும், மே.31ல் பூக்குழி விழாவும் நடைபெறும். ஜூன்.6ல் தேரோட்டோமும், ஜூன்.7ல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. தக்கார் சங்கரேஸ்வரி, நிர்வாக அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, பெருமாள், வசந்த் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.