Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோவிலில் ... மோளப்பாடியூர் கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள் மோளப்பாடியூர் கோயில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரதத்தின் பெருமை சேர்க்கும் செங்கோல் வழங்கப்பட்ட போது பாடப்பட்ட கோளறு பதிகத்தின் பாடல்களும் பொருளும்!
எழுத்தின் அளவு:
பாரதத்தின் பெருமை சேர்க்கும் செங்கோல் வழங்கப்பட்ட போது பாடப்பட்ட கோளறு பதிகத்தின் பாடல்களும் பொருளும்!

பதிவு செய்த நாள்

25 மே
2023
12:05

வரும் ஞாயிறன்று டில்லி புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், சபாநாயகருக்கு அருகே வைக்கப்பட உள்ள செங்கோலுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை, எப்படி அடையாளப்படுத்துவது என்பது குறித்து நேரு, ராஜாஜியிடம் கேட்டார். ராஜாஜியும், தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் நிகழும்போது, ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை எடுத்துச் சொல்லிஉள்ளார். அதேபோன்று, மவுன்ட் பேட்டனிடம் இருந்து ஆட்சியதிகார மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாகச் செய்யலாம் என்பதை ஒப்புக் கொண்டார் நேரு. ராஜாஜி, நேரடியாக, தமிழகத்தின் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான, திருவாவடுவதுறை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு விபரம் தெரிவித்தார். அப்போது, ஆதீனகர்த்தராக இருந்தவர் அம்பலவாண தேசிகர் மூர்த்தி. அவருக்கு அப்போது கடும் காய்ச்சல். இருந்தாலும், நம் நாட்டுக்குச் செய்யவேண்டிய முக்கியமான கடமை இதுவென்பதால், தன் உதவியாளர்கள் வாயிலாக, சென்னையில் இருந்த உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடையில், ரிஷபம் அமர்ந்த நிலையில் விளங்க, வெள்ளியில் தங்க முலாம் பூசிய செங்கோல் செய்யச் சொன்னார். அம்பலவாண தேசிகர் மூர்த்தி உடல்நலம் குன்றியிருந்ததால், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளைத் தம்பிரானான சடைச்சாமி என்ற திருவதிகை குமாரசாமித் தம்பிரானும், மடத்தின் ஓதுவா மூர்த்தியான மாணிக்கம் ஓதுவாரும், மடத்தின் நாதசுவர வித்துவான் டி.என். ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும், மேலும் மடத்தின் முக்கிய நிர்வாகிகளும், ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில் டில்லி சென்றனர்.

ஆகஸ்ட், 14, 1947, இரவு 10:35 மணி வாக்கில், ஜவஹர்லால் நேருவின் இல்லத்தில், குமாரசாமித் தம்பிரான், நேருவுக்கு சால்வை அணிவித்து, செங்கோலை நேருவிடம் வழங்கினார். அப்போது, கோளறு பதிகத்தின் 11 பாடல்களும் பாடப்பட்டன. ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசையும் பொழிந்தது. அதன் பின், அந்தச் செங்கோல், தீன் மூர்த்தி பவனில் வைத்துப் பாதுகாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இருந்து நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது பற்றிய செய்தி மீண்டும் வெளியாகி, அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்குச் செல்ல, இதன் உண்மைத் தன்மையைப் பற்றி ஆராயச் சொன்னார். இந்த நிகழ்வுகள் பொதுவெளியில் அதிகம் பேசப்படாததால், பழைய ஆவணங்கள் வாயிலாக இதன் உண்மைத் தன்மை நிரூபணமானது. அதன் பின், புதிய பார்லிமென்ட் கட்டப்படும் நிலையில், அந்த செங்கோலை மீண்டும் ஆதீனத்தாரிடம் இருந்து பெற்று, அங்கு நிறுவ வேண்டும் என்று பிரதமர் முடிவு செய்தார்.

செங்கோல் என்றால் என்ன?: மன்னராட்சி காலத்தில், அரியணை, மணி மகுடம், செங்கோல், கொடை ஆகியவை ஒரு அரசருக்கு அடையாளம். இதில் சிறப்புமிக்கது செங்கோல். செங்கோல் என்பது நியாயமான, நீதி வழுவாத ஆட்சிமுறையை வழங்கவேண்டும் என்று அரசருக்கு வலியுறுத்தும் ஓர் அடையாளம். அதேசமயம், பொது மக்களுடைய பார்வையில், அந்த நேரிய தண்டம், நேர்மையான ஆட்சியின் சின்னமாக பொருள்படும். ஒவ்வொரு அரசரும் பதவியேற்கும் போது, செங்கோலை, மத குருமார், அரசரிடம் கொடுத்து, ஆட்சியை அங்கீகரிப்பது, தென்னாட்டில், குறிப்பாக தமிழகத்தில், வழக்கமாக இருந்து வந்தது. இதில், மத குருமார் என்ன அங்கீகாரம் கொடுக்கின்றனர்? மத குருமார் தர்மத்தின் பாதுகாவலர்கள். அவர்கள் செங்கோலை அரசரிடம் கொடுக்கும்போது, அந்த அரசருடைய ஆட்சி தார்மீக ஆட்சி என அங்கீகரிக்கின்றனர்.

செங்கோல்கள் பலவிதம்: சிவன் கோவில்களில் நந்திச் செங்கோல் பயன்படுத்தப்படுகிறது. சுவாமி புறப்பாட்டிற்கு முன்பு ஓதுவாரோ பணியாளரோ, அதை எடுத்துச் செல்வர். அதன் பின் சுவாமியின் வீதி ஊர்வலம் நடைபெறும். இந்த நந்திச் செங்கோலை கையில் ஏந்தியபடி, ஓதுவார்கள் பாடியதாக வரலாறு உண்டு. அந்த அடிப்படையில் தான், நந்திச் செங்கோலை நேருவிடம் வழங்கலாம் என்று திருவாவடுதுறை ஆதீனம், ராஜாஜியிடன் தெரிவித்திருக்கிறார். செங்கோலின் மேல்பகுதியில் தாமரை போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தாமரையில் நந்தி அமர்ந்திருக்கும். ஒவ்வொரு ஆன்மிக அமைப்பும், தமக்கான செங்கோலை வடிவமைத்துக் கொள்ளும். சீருங்கேரி சங்கர மடம், காஞ்சி சங்கர மடம் ஆகியவை, தமக்கான பிரத்யேகமான செங்கோலை வைத்துள்ளன. சைவ ஆதீனங்களுக்கான செங்கோல் என்றால், அது நந்தி செங்கோல் தான். சைவ ஆதீனங்களின் தலைமைக் குரு, நந்தி பகவான் தான். அவரிடம் இருந்து தான் நந்தி பரம்பரை துவங்குகிறது.

கழ்வில் பங்கேற்பது பெருமை! இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அடையாளமாக அளிக்கப்பட்ட செங்கோலை, தயாரித்து அளித்ததில் திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கான பங்கு உலகம் அறிந்தது. அப்போது, நடந்த நிகழ்வுகளை நாடு அறியும். இத்தனை ஆண்டுகளுக்குப் பின், பார்லிமென்ட் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அன்றைக்கு அளிக்கப்பட்ட செங்கோலும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. புது பார்லிமென்ட் திறக்கப்படும் நாளில், அங்கேயே பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த சிறப்பு மிக்க நிகழ்வில், திருவாவடுதுறை ஆதீன மடம் சார்பில் பங்கேற்க அழைத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்த நிகழ்வில், செங்கோல் சிறப்புக்கு உரிய, பழமை மிகு மடத்தின் சார்பில், பங்கேற்பது பெருமை. - அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள். இத்தேவார கோளறு பதிகத்தின் 11 பாடல்களும் பொருளும்..

வேயுறு தோளி பங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம்வெள்ளி
சனிபாம்பி ரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

தெளிவுரை : மூங்கிலை ஒத்த மென்மையான தோள்களையுடைய உமாதேவியைப் பாகம் கொண்டுள்ள ஈசன், விடத்தை உண்டு, தேக்கிய கண்டத்தனாய், மிக நல்ல வீணையை மீட்டும் எழில் இசை காண்பவனாய், மாசில்லாத சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து எனது உள்ளத்தில் புகுந்துள்ளனன் அதனால் நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன் , அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றால் உண்டாகும் தீமைகள் இல்லை அவை குற்றமற்ற நல்ல பயன்களைத் தரவல்லன ஈசனின் அடியவர்களுக்கு அவை மிகுதியாக, விளங்கும் நல்லவையே தரக்கூடியவை ஆகும்

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றோடு ஏழு பதினெட்டோடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : எலும்பு, பன்றிக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைச் சேர்த்து மார்பில் ஆரமாகத் திகழ இடப வாகனத்தில் ஏறி, உமா தேவியை உடனாகக் கொண்டு , பொன் போன்ற கொன்றை மாலையும், ஊமத்த மலரும், கங்கையும் சூடி, என் உள்ளத்தில் வந்து புகுந்தனன் ஈசன் அதனால், ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை, திருவாதிரை மற்ற நாள்களாக உள்ள பரணி, கிருத்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி ஆகியனவும் அன்புடன் நல்லதாகி, அடியவர்களுக்கு மிகவும் நல்லதாக அமையும்

உருவளர்பவளமேனி ஒளிநீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைதூர்தி செயமாது பூமி
திசைதெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பவளம் போன்ற அழகு திகழும் திருமேனியில் ஒளிரும் திருநீறு அணிந்து, உமாதேவி உடனாக விளங்க, வெண்மையான இடப வாகனத்தில் ஏறி, அழகிய கொன்றை மலரும் திங்களும் முடியின் மீது தரித்து, என் உள்ளத்தில் ஈசன் புகுந்தனன் அதனால், திருமகள், துர்க்கை, ஜெயமகள், அட்டதிக்குப் பாலகர்கள் மற்றும் பூமியை இயங்கச் செய்யும் அதிதேவதை  தெய்வங்கள், அரியதாகிய செல்வங்கள் யாவும் நன்மை செய்யவல்லன அடியவர்களுக்கு அவை மிக்க நன்மையாய் விளங்குவன

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன் றைமாலை முடிமேல் அணிந்தேன்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்க ளான பலவும்
அதிகுண நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : திருமுடியில் சந்திரனைச் சூடி, உமாதேவியை உடனாகக் கொண்டு , கல்லால மரத்தின்கீழ் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு அறப்பொருள்களை உபதேசித்த எங்கள் பரமன், கங்கை தரித்துக் கொன்றை மாலையை முடியின்மேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால் சினம் மிகுந்து உறுகின்ற காலன், அக்கினி, இயமன், இயமனுடைய தூதர்கள், கொடிய நோய்கள் முதலான பலவும் நற்குணத்தின் வயப்பட்டு நல்லனவாகும் அவை அடியவர்களுக்கு மிக்க நல்லனவாகும்

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : நஞ்சினை அணிபோன்று கண்டத்தில் கொண்ட என் தந்தை உமாதேவியோடு இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் ஆவார் அப்பெருமான், கரும்பச்சை வண்ணத்தையுடைய வன்னி, கொன்றை மலர் ஆகியவற்றை முடியின் மீது அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், கொடிய சினத்தையுடைய அசுரர்களும், வறுமையாகிய இல்லாமை என்னும் கொடுமையும், மின்னல்போன்று தோன்றுட மிகைகொண்டு செய்யும் பூதங்களும் எமக்குத் தீயது செய்ய அஞ்சும்; அது நன்மையாக உள்ளவற்றைப் புரியும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மையாகும்

வாள்வரிய தளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல்
கொடு நாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : ஒளிமிக்க வரிகளையுடைய புலியின் தோலை ஆடையாகக் கொண்டு, வரித்த கோவணத்தை உடைய ஈசன், உமையவனைப் பாகங்கொண்டு, வன்னிப் பத்திரம், கொன்றை மலர், கங்கை ஆகியவற்றைத் தரித்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், சிங்கம், புலி, கொலை யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியன யாவும் நெருக்கமாக உள்ள துணையாள் போன்று, நல்லதானவற்றைச் செய்யவல்லது அவை அடியவர்களுக்கு மிகுந்த நல்லவையாய விளங்கும்

செப்பிளமுலைநன் மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்புமுடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு இடப வாகனம் ஏறும் செல்வனாகிய ஈசன், அடைக்கலம் ஆகிய இளைய பிறைச் சந்திரனும் கங்கையும் முடியின் மீது அணிந்து என் உள்ளத்தில் புகுந்தனன் அதனால், வெம்மையுடைய குளிர், வாதம், பித்தம் முதலான நோய்களைத் தரும் வாத பித்த சிலேத்தும நாடிகள், தமது இயல்பிலிருந்து திரியாமல், அத்தகைய நன்மை விளைவிக்கும் அடியவர்களுக்கு அவை மிகுந்த நன்மையினைச் செய்யும்

வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்கி, இடப வாகனத்தில் உமாதேவியுடன் வீற்றிருந்து ஒளி மிக்க சந்திரனும் வன்னி, கொன்றை மலர் சூடி வந்து, ஈசன் என் உள்ளம் புகுந்தனன் அதனால், கடல் சூழ்ந்த இலங்கையின் வேந்தனாகிய இராவணனோடும் சூழ வரும் இடர் ஏதும், வந்து நலியுறச் செய்யாது ஆழ்கடலும் நல்லதாய் அமையும் அவை அடியறவர்களுக்கு மிகவும் நல்லதாகும்

பலபல வேட மாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனு மாலுமறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : பலவாகிய திருவடிவங்களில் தோன்றிய பரமன் உமாதேவியைப் பாகமாக உடையவன் அப்பெருமான் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரமன் அவன் கங்கையினையும் எருக்கம் பூவினையும் முடியின்மேல் அணிந்து என் உள்ளம் புகுந்தனன் அதனால், தாமரை மலர் மீது விளங்கும் பிரமனும், திருமாலும், வேதங்களும், தேவர்களும் மற்றும் வருகின்ற காலங்கள் பலவும், அலை கொள்ளும் கடல், நிலைத்து மேவும் மேருமலை என யாவும், நல்லனவே ஆகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நன்மை உடையனவாகும்

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தெளிவுரை : கொத்தாக விளங்கும் கூந்தலுடைய உமாதேவியுடனாகி வர, விசயனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கும் தன்மையில் வேடுவத் திருக்கோலம் பூண்ட விகிர்தனாகிய ஈசன், ஊமத்த மலர், பிறைச்சந்திரன், நாகம் ஆகியன முடியின் மீது அணிந்து, என் உள்ளம் புகுந்தனன் அதனால், புத்தர்களையும் சமணர்களையும் வாதிட்டு அழிக்கும் அண்ணலாகிய பரமனின் திருநீறு, செம்மை மிக்கதும் திடம் கொண்டதும் ஆகி, விளங்குகின்ற அத்தகைய நல்லதாகும் அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லவை யாகும்

தேனமர்பொழில் கொள் ஆலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளு நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே

தெளிவுரை : தேன் விளங்கும் பொழிலும், கரும்பாலையும், நெல் விளைச்சலும் வளரும் செம்பொன் பெருக, நான்முகனால் வழிபடப்பெற்ற ஆதியாகிய பிரமாபுரத்தில் விளங்கும், வேதஞானத்தில் வல்ல ஞான முனிவனாகிய திருஞானசம்பந்தர், சூரியன், சந்திரன், அங்காரகன் முதலான ஒன்பது கிரகங்களினாலும், அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களாலாகிய நாளினாலும் அடியவர்கள் தீமையால் நலியாதவண்ணம் உரை செய்தனர் இத்தகைய இத் திருப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசாளும் பேறு பெறுவர் இது நமது ஆணை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் விபீஷணருக்கு ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோவிலில் வாராஹி அம்மன் ... மேலும்
 
temple news
காரியாபட்டி; காரியாபட்டி வரலொட்டியில் சோனை முத்தையா, கலுவடையான் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
பெரியகுளம்; ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம் ஞானாம்பிகை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் கோவில் அருகில் உள்ள, ஸ்ரீவிநய ஆஞ்சநேயர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar