மோளப்பாடியூர் கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறிய இளைஞர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 12:05
வடமதுரை; மோளப்பாடியூரில் ஸ்ரீ விநாயகர், மந்தை கருப்பணசுவாமி, மாரியம்மன், எட்டுக்கை வீரமகா காளியம்மன், பகவதி அம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா மே 21 ல் துவங்கி இன்று வரை நடக்கிறது. இதையொட்டி பொங்கல் வைத்தல், முளைப்பாரி அழைத்தல், மஞ்சள் நீர் அழைத்தல் என பல்வேறு வழிபாடுகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக கருதப்படும் பாரம்பரிய வழிபாடான படுகளம் அமைத்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
சிறப்பு பூஜைகள் செய்த 60 அடி உயர 2 கழு மரங்கள் நடப்பட்டன. மேலும் கோயில் முன்பாக படுகளம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 4 சிறுவர்களை தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து வெள்ளைத்துணி போர்த்தி படுகளத்தில் படுக்க வைத்தனர். அப்போது சிறுவர்கள் உயிரற்ற நிலையில் இருப்பதாக ஐதீகம். சிறுவர்களை படுகளத்தில் படுக்க வைத்து பின்னர் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அதன்பிறகு கழுமரத்தின் மீது ஏறும் பாரம்பரிய உரிமை பெற்ற பாடியூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மரத்தின் மீது ஏறினர். மரத்தின் உச்சியில் கட்டி வைத்திருந்த காணிக்கை, விபூதி மற்றும் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர். அப்போது ஆட்டு கிடாய்களை வெட்டி பலி கொடுத்து, சிறுவர்களை படுகளத்தில் இருந்து உறவினர்கள் தூக்கினர். அதன்பிறகே சிறுவர்கள் உயிர் பெறுவதாக ஐதீகம். இதைத் தொடர்ந்து சிறுவர்களை சுமந்தபடி கோயிலை சுற்றி வந்தனர். இந்த பாரம்பரிய வழிபாட்டை காண சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர்.