ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை அன்று, மாதந்தோறும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில், வைகாசி மாதம் திருவாதிரை நட்சத்திரமான நேற்று காலை 10:00 மணிக்கு, ராமானுஜர் அவதார மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, 108 கலசத்தில், மலர்கள் மற்றும் மூலிகை நீரை கொண்டு, ராமானுஜருக்கு சத கலச திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் சத கலச திருமஞ்சனத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.