பதிவு செய்த நாள்
27
செப்
2012
04:09
கதைச் சுருக்கம்: விசயையைக்காண, வேணவாக்கொண்டு தோழரொடு தண்ட காரணிய நோக்கிய விரைந்த சீவகன் தன் வரவினை எதிர்பார்த்திருந்த விசயையின் தவப்பள்ளியை எய்தி அவளைக் கண்டு அடியில் வீழ்ந்து வணங்கி அளவிலா மகிழ்ச்சி எய்தினன். விசயையும் தன் அருமை மகனை அரிதிற் கண்டு அன்புகூர்ந்து இன்பமுற்றனள். பின்னர் விசயை கட்டியங்காரனை வெல்லுதற்குக் கோவிந்தனைத் துணைக்கொள்க என்று சீவகனுக்குணர்த்தினள். பின்னர்ச் சீவகன் விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தன் நகரத்திற்குப் போக்கினன். பின்பு தோழன்மாரோடு ஏமாங்கதம் புகுந்து இராசமாபுரத்துப் புறச்சோலையிற் சென்று தங்கினன். மறுநாட் காலையில் தோழரை அச் சோலையிலேயே இருக்கப் பணித்துத் தான் அழகிய வேற்றுருவங் கொண்டவனாய் அந்நகர மறுகிற் றமியனாய்ச் சென்றனன்.
அங்ஙனம் செல்லும்பொழுது அந் நகரத்துள்ளவனாகிய சாகரதத்தன் என்னும் வணிகனுடைய மகள் விமலை என்பாள் பந்தாடியவள் அச் சீவகனைக் கண்டு அவன் பேரழகிலே நெஞ்சம் போக்கி மயங்கினள். சீவகனும் அந்நேரிழையை நோக்கி அன்பு கூர்ந்து அவ்விடத்தினின்றும் அகலமாட்டாதவனாய்ச் சாகரதத்தன் கடையின்கண் வந்திருந்தனன்.
சீவகன் வந்து புகுந்தவுடனே அச் சாகரதத்தன் கடையிலே விலையாகாமற் றங்கிக்கிடந்த சரக்கெல்லாம் விலையாகி விட்டன. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, முகமன் மொழிந்து, ஐய! கணியொருவன் நின் மகள் விமலை என்பாளுக்குரிய கணவன் நின் கடைக்கு வலிய வருவான். அவன் வந்தமைக்கு அறிகுறி அப்பொழுது நின் கடைச் சரக்கெல்லாம் ஊதியமுண்டாக விரைவின் விற்றுப்போம் கண்டாய்! என்று எனக்குக் கூறியிருந்தான். அங்ஙனமே நீ என் கடையேறியவுடன் அப் பழஞ்சரக்கெல்லாம் விலைப்பட்டன. ஆதலால் நீயே விமலை கணவன் ஆதல் கூடும் என்று கருதுகின்றேன், என்று கூறி அவனை ஆர்வத்துடன் அழைத்தேகி விமலையை அவனுக்கு மணம் செய்வித்தனன். சீவகன் அவளுடன் இரண்டு நாள் கூடி இன்புற்றிருந்து மறுநாள் சென்று மனக்கினிய தோழரைக் கண்டனன்.
1889. முருகுகொப் புளிக்குங் கண்ணி
முறிமிடை படலை மாலைக்
குருதிகொப் புளிக்கும் வேலான்
கூந்தன்மா விவர்ந்து செல்ல
வுருவவெஞ் சிலையி னாற்குத்
தம்பியிஃ துரைக்கு மொண்பொற்
பருகுபைங் கழலி னாருட்
பதுமுகன் கேட்க வென்றே.
பொருள் : முருகு கொப்புளிக்கும் கண்ணி - தேனைப் பிலிற்றும் தலை மாலையினையும்; முறிமிடை படலைமாலை - தளிர் கலந்த வகைமாலையினையும்; குருதி கொப்புளிக்கும் வேலான் - செந்நீரை உமிழும் வேலினையும் உடைய சீவகன்; கூந்தல் மா இவர்ந்து செல்ல - குதிரை மீதேறிச் செல்ல; உருவ வெஞ்சிலையினாற்குத் தம்பி - அழகிய கொடிய வில்லேந்திய சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன்; ஒண் பொன் பருகு பைங்கழலினாருள் பதுமுகன் கேட்க என்று இஃது உரைக்கும் - ஒள்ளிய பொன் பொருந்திய கழலணிந்த தோழர்களில் பதுமுகனைக் கேட்பாயாக என விளித்து இதனைக் கூறுவான்.
விளக்கம் : அது மேற் கூறுகின்றார். சிலையினாற்கு உருபு மயக்கம் என்பர் நச்சினார்க்கினியர். முறி - தளிர். கண்ணி - தலையிற் சூடுமாலை. படலைமாலை - தழை விரவிய மாலை. வேலான் : சீவகன். தம்பி : நந்தட்டன். கழலினாருள் - தோழருள். பதுமுகன் : விளி. ( 1 )
1890. விழுமணி மாசு மூழ்கிக்
கிடந்ததிவ் வுலகம் விற்பக்
கழுவினீர் பொதிந்து சிக்கக்
கதிரொளி மறையக் காப்பிற்
றழுவினீ ருலக மெல்லாந்
தாமரை யுறையுஞ் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள்ட்
வாழ்கநுங் கண்ணி மாதோ.
பொருள் : விழுமணி மாசு மூழ்கி இவ்வுலகம் விற்பக் கிடந்து - சிறந்த மணி மா சேறி இவ்வுலகை விலையாகப் பெறும் படி கிடந்ததனை; கழுவினீர் - கடுக வெளியாக்கி விட்டீர்; சிக்கப் பொதிந்து கதிர் ஒளி மறையக் காப்பின் - இனி, முன்போல அகப்படப் பொதிந்து கதிரொளிக்கு மறைவாகக் காப்பீராயின்; உலகம் எல்லாம் தழுவினீர் - உலகம் முழுதும் கைக்கெண்டீராவீர்; தாமரை உறையும் செய்யாள் விழுவினார் தம்மைப் புல்லாள் - தாமரையில் வாழும் திருமகள் காவாது வழுவினவரைச் சேராள்; (ஆகையால், காவாது வழுவாதீர்); நும் கண்ணி வாழ்க! - நும் கண்ணி வாழ்வதாக.
விளக்கம் : மாது ஒ : அசைகள், நும் கண்ணி வாழ்க! என்பதனைக் கழுவினீர் என்பதன்பின் சேர்ப்பர் நச்சினார்க்கினியர். சீவகன் தன் பிற்ப்புண்மையைப் பண்டே உணர்ந்திருந்தானாயினும் அவனும் இதுகாறும் மறைவாகவே அதனைப் போற்றி வந்தானாகலின், இப்போது நந்தட்டன் அனைவரும் உணர்ந்தமை கருதி விழுமணி மாசு மூழ்கிக்கிடந்தது இவ்வுலகம் விற்பக் கழுவினீர் என அவன்பிறப்பு வெளிப்பாட்டைத் தோழர் மேலதாக்கியே உரைக்கின்றான். சிக்க - அகப்பட. செய்யாள் - திருமகள். ( 2 )
1891. தொழுததங் கையி னுள்ளுந்
துறுமுடி யகத்துஞ் சோர
வழுதகண் ணீரி னுள்ளு
மணிகலத் தகத்து மாய்ந்து
பழுதுகண் ணரிந்து கொல்லும்
படையுட னெடுங்கும் பற்றா
தொழிகயார் கண்ணுந் தேற்றந்
தெளிகுற்றார் விளிகுற் றாரே.
பொருள் : தொழுத தம் கையினுள்ளும் - தொழுத தம் கையிலும்; துறுமுடி அகத்தும் - மயிர் நெருங்கிய முடியிலும்; சோர அழுத கண்ணீரின் உள்ளும் - ஒழுக அழுத கண்ணீரிலும்; அணிகலத்தகத்தும் - அணிகலன்களிலும்; கொல்லும் படை உடன் ஒடுங்கும் - கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; ஆய்ந்து - அதனை ஆராய்ந்து; பழுது கண்ணரிந்து - அக் கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி; யார்கண்ணும் தேற்றம் பற்றாது ஒழிக - யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக; தெளிகுற்றார் விளி குற்றாரே - அன்றித் தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர்.
விளக்கம் : அரசர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்துப் பகைவர் நட்புடையார்போல் அழுக்கண்ணீரும் கொலைசூழ்தலின் கண்ணீரிலும் படையொடுங்கிற்றாம். ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து (குறள்-828) என்றார் தேவரும். ( 3 )
1892. தோய்தகை மகளிர்த் தோயின்
மெய்யணி நீக்கித் தூய்நீ
ராய்முது மகளிர் தம்மா
லரிறபத் திமிரி யாட்டி
வேய்நிறத் தோளி னார்க்கு
வெண்டுகின் மாலை சாந்தந்
தானல கலங்கள் சேர்த்தித்
தடமுலை தோய்க வென்றான்.
பொருள் : தோய்தகை மகளிர்த் தோயில் - கூடுதற்குரிய மகளிரைக் கூட வேண்டின்; மெய் அணி நீக்கி - அம் மகளிரின் மெய்யில் அணிந்த பூணை நீக்கி; ஆய்முது மகளிர் தம்மால் அரில் தபத் திமிரி ஆட்டி - ஆராய்ந்து தெளிந்த மூப்பியராலே குற்ற மின்றித் திமிர்ந்து தூய நீராட்டி; வேய்நிறத் தோளினார்க்கு - மூங்கிலனைய ஒளியுறுந் தோளையுடைய அம் மகளிர்க்கு; வெண்துகில் மாலை சாந்தம் நலகலங்கள் சேர்த்தி - வெண்மையான ஆடையும் மாலையும் சந்தனமும் நல்ல கலன்களும் சேர்த்தி; தான் தடமுலை தோய்க என்றான் - பின்னரே அரசன் அம் மகளிரின் பெரிய முலைகளைத் தழுவுக என்றான்.
விளக்கம் : தோய்தகை - கூடுதற்குரிய தகுதி, எனவே ஏனைய மகளிரை எவ்வாற்றானும் கூடுதல் கூடாது என்றானுமாயிற்று. அம் முதுமகளிரும் ஆராய்ந்து தெளியப்பட்டவராதல் வேண்டும் என்பான் ஆய்முது மகளிர் தம்மால் என்றான். திமிர்தல் - பூசுதல், வேய்நிறத் தேளினார்க்கு என்றது அவர்க்கு என்றவாறு. நஞ்சு முதலியன ஊட்டப் பெறாமையுணர்தற்கு வெண்டுகில் கூறினான். வஞ்ச அணிகலன் அல்லாமையுணர்தற்கு நலகலன் கூறினான். இச் செயலை எல்லாம் சாணக்கியர் பொருள் நூலில் விரிவாகக் காணலாம். ( 4 )
1893. வண்ணப்பூ மாலை சாந்தம்
வாலணி கலன்க ளாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை
கண்டலாற் கொள்ள வேண்டா
வண்ணலம் புள்ளோ டல்லா
வாயிரம் பேடைச் சேவ
லுண்ணுநீ ரமிழ்தங் காக்க
யூகமோ டாய்க வென்றான்.
பொருள் : வண்ணப்பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை - அழகிய மலர்மாலை சந்தனம் தூய பூண்கள் ஆடை முதலியவற்றை; அண்ணல் அம்புள்ளோடு அல்லா ஆயிரம் பேடைச் சேவல் - அரச வன்னமும் அதுவே அன்றி ஆயிரம் பெடையுடன் நிற்கும் சக்கரவாகப் புள்ளும் ஆகிய இவற்றின்; கண் முகத்து உறுத்தி - கண்ணினும் முகத்தினும் பொருத்தி; தூய்மை கண்டலால் கொள்ளவேண்டா - தூய்மை கண்டல்லது கொள்ளுதல் வேண்டா; உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமொடு ஆய்க என்றான் - உண்ணும் நீரையும் உணவையுந் தீங்கு வாராமற் காத்தற்குக் கருங்குரங்கிற் கிட்டு ஆராய்க என்றான்.
விளக்கம் : அன்னத்தின் கண்ணிலும் சக்கரவாகத்தின் முகத்திலும் என முறையே கொள்க. அன்னத்தின்கண் குருதி காலும்; சக்கரவாகம் முகம் கடுக்கும்; கருங்குரங்கு உண்ணாது. ( 5 )
1894. அஞ்சனக் கோலி னாற்றா
நாகமோ ரருவிக் குன்றிற்
குஞ்சாம் புலம்பி வீழக்
கூர்நுதி யெயிற்றிற் கொல்லும்
பஞ்சியின் மெல்லி தேனும்
பகைசிறி தென்ன வேண்டா
வஞ்சித்தற் காத்தல் வேண்டு
மரும்பொரு ளாக வென்றான்.
பொருள் : அஞ்சனக் கோலின் ஆற்றா நாகம் - அஞ்சனக் கோலால் அடித்தற்குப் பற்றாத நாகப்பாம்பு; அருவிக் குன்றின் குஞ்சரம் புலம்பி வீழக் கூர்நுதி எயிற்றின் கொல்லும் - அருவியை யுடைய குன்றைப் போன்ற மதயானை புலம்பி வீழும் படி எயிற்றாற் கடித்துக் கொல்லும்; பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா - பஞ்சியினும் மெல்லியதா யினும் பகையைச் சிறிது என்று கருதவேண்டா; அரும் பொருளாக அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்றான் - அதனை அரும்பொருளாக நினைத்து அஞ்சித் தன்னைக் காக்க வேண்டும் என்றான்.
விளக்கம் : பகைவரின் சிறுமைக்கு அஞ்சனக் கோலினாற்றா நாகம் உவமை. அஞ்சனக்கோல் கண்ணுக்கு மைதீட்டுஞ் சிறுகோல். அருவிக் குன்றின்பால் வாழும் குஞ்சரம் எனல் நன்று. சிறு பகையையும் பெரும் பகைபோல மதித்து அஞ்சித் தற்காத்தல் வேண்டும் என்பதாம். ( 6 )
1895. பொருந்தலாற் பல்லி போன்றும்
போற்றலாற் றாய ரொத்து
மருந்தவர் போன்று காத்து
மடங்கலா லாமை போன்றுந்
திருந்துவேற் றெவ்வர் போலத்
தீதற வெறிந்து மின்ப
மருந்தினான் மனைவி யொத்து
மதலையைக் காமி னென்றான்.
பொருள் : பொருந்தலால் பல்லி போன்றும் - விடாமல் இவனிடத்திருத்தலாற் பல்லியைப் போன்றும்; போற்றலால் தாயர் ஒத்தும் - வேண்டுவன தந்து காப்பாற்றலால் அன்னையர் போன்றும்; அருந்தவர் போன்று காத்தும் - அருந்தவர் சீல முதலியவை தப்பாமற் காக்குமாறு போல இவற்கும் அவை தப்பாமற் காத்தும்; அடங்கலால் ஆமை போன்றும் - ஐம்பொறியும் தமக்கு அடங்கலின் ஆமை போன்றும்; திருந்து வேல் தெவ்வர் போலத் தீது அற எறிந்தும் - திருந்திய வேலேந்திய பகைவர் போன்று இவனுக்குண்டான தீது தீரும்படி இடித்துக் கூறியும்; இன்பமருந்தினால் மனைவி ஒத்தும் - இன்பந்தரும் உணவுகளை நுகர்வித்தலால் மனைவியை போன்றும்; மதலையைக் காமின் என்றான் - நமக்கு ஆதரவான சீவகனைக் கப்பாற்றுமின் என்றான்.
விளக்கம் : மதலை - ஆதரவு; தூண். வானம் ஊன்றிய மதலை போல (பெரும்பாண். 346) என்றார் பிறரும். தாம் அடங்கியே இவனை அடக்கல் வேண்டுமெனக் கூறுகின்றவன் இங்ஙனங் கூறினானென்க. பதுமுகனிடங் கூறினானெனினும் பலரும் கேட்டலின்,. காமின் என்றான். தான் வாழும் மரமுதலியவற்றில் நன்கு பொருந்தியிருத்தல் பல்லிக் கியல்பு. அச்சுடைச் சாகாட்டாரம் பொருந்திய சிறுவெண் பல்லி போல என்றார் புறத்தினும் (256). ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் என்றார் வள்ளுவர். பகைவர் போன்று கண்ணற இடித்துரைத்தும் என்றவாறு, மருந்து - அடிசில். மதலை - பற்றானவன். ( 7 )
1896. பூந்துகின் மாலை சாந்தம் புனைகலம் பஞ்ச வாச
மாய்ந்தளந் தியற்றப் பட்ட படிசினீ ரின்ன வெல்லா
மாந்தரின் மடங்க லாற்றற் பதுமுகன் காக்க வென்றாங்
கேந்துபூண் மார்ப னேவ வின்னண மியற்றி னானே.
பொருள் : பூந்துகில் மாலை சாந்தம் புனைகலம் பஞ்சவாசம் - பூந்துகிலும் மாலையும் சாந்தமும் பூணும் முகவாசம் ஐந்தும்; ஆய்ந்து அளந்து இயற்றபப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம் - ஆராய்ந்து பார்த்துச் செய்யப்பட்ட உணவும் நீரும் இத் தன்மையானவற்றை யெல்லாம்; மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று - மக்களிலே சிங்கம் போன்ற ஆற்றலையுடைய பதுமுகன் காப்பானாக என்று; ஏந்து பூண் மார்பன் ஏவ - விளங்கும் பூணணிந்த மார்பனாகிய சீவகன் பணிக்க; இன்னணம் இயற்றினான் - அவனும் இப்படிக் காத்தலை நடத்தினான்.
விளக்கம் : பஞ்சவாசம் : தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம், கப்பூரம் சாதியோடைந்து மடங்கலாற்றல் - சிங்கத்தை ஒத்த வலிமை. உடையும் அடிசிலுடம் உருமண்ணு வாவிற்குக்கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி அகன்மடி யவன்றான் அமர்ந்து கொடுப்ப என்றார் கதையினும் (3 - 9 : 128 - 30.) ( 8 )
வேறு
1897. சிறுகண்யா னையினினஞ் சோந்துசே வகங்கொளத்
துறுகலென் றுணர்கலாத் துள்ளிமந் திம்மக
நறியசந் தின்றுணி நாறவெந் தனகள்கொண்
டெறியவெள் கிம்மயிர்க் கவரிமா விரியுமே.
பொருள் : சிறுகண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள - சிறிய கண்களையுடைய யானைத்திரள் கூடித் துயில் கோடலின்; மந்திமக உணர்கலா துறுகல் என்று துள்ளி - குரங்கின் குட்டிகள் யானையென்றுணராமல் பெரிய கல் என்று நினைத்து மேலே துள்ளி; நறிய சந்தின் துணி வெந்தனகள் கொண்டு நாற எறிய - நல்ல சந்தனக் கட்டைகள் வெந்தனவற்றைக் கொண்டு மணம் வீசுமாறு ஒன்றையொன்று எறிய; மயிர்க் கவரி மாஎள்கி இரியும் - மயிரையுடைய கவரிமா துணுக்கென அச்சுற்று ஓடும்.
விளக்கம் : துள்ளும் என்பது பாடமாயின், துள்ளும் மகவு என்க. சேவகம் : ஆகுபெயர். துறுகல் - குண்டுக்கல். மந்திமக துறுகல் என்றுணர்கலா துள்ளி என மாறுக. மக - குட்டி. சந்தின் துணி - சந்தனக்குறடு. வெந்தனகள் என்புழிக் கள் விகுதிமேல் விகுதி. மந்திம்மக, வெள்கிம் மயிர் என்பவற்றுள் மகரவொற்று வண்ணநோக்கி விரிந்தது. ( 9 )
1898. புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன
பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி
யகழுமிங் குலிகமஞ் சனவரைச் சொரிவன
கவழயா னையினுதற் றவழுங்கச் சொத்தவே.
பொருள் : பவழமே அனையன பன்மயிர்ப் பேரெலி - பவழமே போன்றனவாகிய மிகுதியான மயிரையுடைய பேரெலிகள்; புகழ்வரைச் சென்னிமேல் - புகழப்படுகின்ற மலையுச்சியின் கண் வாழும்; பூசையின் பெரியன - பூனையினும் பெரியவனாய்; அகழும் இங்குலிகம் - அகழும் சாதிலிங்கம்; அஞ்சனவரை சொரிவன - அஞ்சன வரையின் தாழ்வரையிலே வீழ்கின்றவை; கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்த - கவள முண்ணும் - யானையின் நெற்றியிலே தவழும் பட்டுக் கச்சைப் போன்றன.
பொருள் : வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் (தொல். மரபு - 68) என்றார். எலி அகழும் சாதிலிங்கம் தாழ்வரையில் சொரிந்து கிடப்பனவாக அத் தோற்றம் யானை நுதலிற் கச்சுப்போலத் தோன்றிற்று என்பதாம். பூசை - பூனை. இங்குலிகம் - சாதிலிங்கம். அஞ்சனவரை - கரிய தாழ் வரை. கவழம் - கவளம். ( 10 )
1899. அண்ணலங் குன்றின்மேல் வருடைபாய்ந் துழக்கலி
னொண்மணி பலவுடைந் தொருங்கவை தூளியாய்
விண்ணுளு வுண்டென வீழுமா நிலமிசைக்
கண்ணகன் மரமெலாங் கற்பக மொத்தவே.
பொருள் : அண்ணல் அம் குன்றின்மேல் - பெரிய குன்றுகளின்மேல்; வருடை பாய்ந்து உழக்கலின் - வருடை மான் பாய்ந்து மிதித்தலின்; ஒண் மணி பல உடைந்து - சிறந்த மணிகள் பலவும் உடைந்து; அவை ஒருங்கு தூளியாய் - அவை ஒருசேரச் செந்தூளியாய்; விண் உளு வுண்டு என மா நிலமிசை வீழும் - அத்தூளி வானுலக உளு வுண்ட தென்னும்படி பெரிய நிலத்திலே வீழா நிற்கும்; கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்த - (அஃது அங்ஙனம் வீழ்தலின்) பரப்புடைய நிலத்தின் மரங்கள் யாவும் அத்தூளி போர்த்துக் கற்பகத்தைப் போன்றன.
விளக்கம் : அண்ணலங்குன்று - பெரிய அழகிய மலை. வருடை - மலையாடு, உளுவுண்டென - உளுத்தது என்னும்படி. கற்பகம் - வானுலகத்துள்ளவொரு மரம். ( 11 )
1900. மானிடம் பழுத்தன கிலுத்தமற் றவற்றியற்
பான்முரட் பயம்பிடைப் பனைமடிந் தனையன
கானிடைப் பாந்தள்கண் படுப்பன துயிலெழ
வூனுடைப் பொன்முழை யாளிநின் றுலம்புமே.
பொருள் : கிலுத்தம் மானிடம் பழுத்தன - கிலுத்தம் என்னும் மரம் மக்கள் வடிவாகப் பழுத்தனவாய் இருந்தன. மற்று அவற்று அயல் கானிடை - பின்னை, அவற்றின் அயலிலே கானிடையிலே; பால் முரண் பயம்பிடை - பால்போல வெண்மையான ஏற்றிழிவுடைய நிலத்திற் குழியிடையிலே; பனை மடிந்தனையன பாந்தள் - பனை கிடந்தனையவாகிய பாம்புகள்; கண் படுப்பன துயில் எழ - துயில்வன துயில் எழும்படி; ஊன் உடைப் பொன் முழை யாளி நின்று உலம்பும் - ஊன் பொருந்தியதனாற் பொன் போன்ற குகையிலிருந்து யாளிகள் முழங்கும்.
விளக்கம் : முரண் மாறுபாடு. முரட் பரம்பு எனவும் பாடம். மானிடம் பழுக்கும் கிலுத்தம் நீள் வனம் (கூர்ம - சம்பு - 32). கிலுத்தம் - ஒருவகை மரம். ( 12 )
1901. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயி
னீரதீம் பூமரம் நிரந்ததக் கோலமு
மேரில வங்கமும் மின்கருப் பூரமும்
மோருநா விகலந் தோசனை கமழுமே.
பொருள் : அம் திமிசு சாரலிடைச் சந்தனத் தழை வயின் - அழகிய திமிசு சூழ்ந்த சந்தன மரத்தில் தழைக்கு நடுவே; நீர தீம்பூ மரம் - நீர்மையை யுடைய தீம்பூ மரமும்; நிரந்த தக்கோலமும் - நிரவலாக இருந்த தக்கோல மரமும்; ஏர் இலவங்கமும் - அழகிய இலவங்க மரமும்; இன் கருப்பூரமும் - இனிய கருப்பூரமும்; நாவி கலந்த ஓசனை கமழும் - புழுகுடன் கலந்து நாற்காத எல்லை கமழும்.
விளக்கம் : திமிசு, தீம்பூ : மரவகைகள். ஓரும் : அசை. ( 13 )
1902. மைந்தரைப் பார்ப்பன மாமகண் மாக்குழாஞ்
சந்தன மேய்வன தவழ்மதக் களிற்றின
மந்தழைக் காடெலாந் திளைப்பவா மானினஞ்
சிந்தவால் வெடிப்பன சிங்கமெங் கும்முள.
பொருள் : மைந்தரைப் பார்ப்பன மாமகள் மாக்குழாம் - மைந்தரைப் பார்ப்பனவாகிய பெரிய மகண்மாக்களின் திரளும்; சந்தனம் மேய்வன தவழ் மதக் களிற்றினம் - சந்தனத் தழையை மேய்வனவாகிய மதம் தவழும் களிற்றின் திரளும்; அம் தழைக்காடு எலாம் திளைப்ப ஆமான்இனம் - அழகிய தழையை உடைய காடுகளில் எல்லாம் பயில்வனவாகிய ஆமானின் திரளும்; சிந்த - சிதறி ஓடும்படி; வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள - வாலை வீசுவனவாகிய சிங்கங்கள் எங்கும் உள்ளன.
விளக்கம் : இனி, இவை நான்கும் எங்கும் உள எனினும் ஆம். மகண்மா - ஒருவகை விலங்கு. தவழ்மதம் : வினைத்தொகை. அந்தழை - அழகிய தழை. ஆமானினம் - காட்டுப் பசுவின் கூட்டம். எங்கும்முள, மகரம் வண்ணநோக்கி விரிந்தது. ( 14 )
1903. வருக்கையின் கனிதொறும் வானரம் பாய்ந்துராய்ப்
பொருப்பெலாம் பொன்கிடந் தொழுகிமேற் றிருவில்வீழ்ந்
தொருக்குலாய் நிலமிசை மிளிர்வதொத் தொளிர்மணி
திருக்கிள ரொளிகுலாய் வானகஞ் செகுக்குமே.
பொருள் : வருக்கையின் கனி தொறும் வானரம் பாய்ந்து - பலாவின் கனி தொறும் வானரங்கள் பாய்தலால்; பொருப்பெலாம் உராய் ஒழுகி - மலையெங்கும் பரவி ஒழுகி; பொன் கிடந்து ஒளிர் மணி திருக்களர் ஒளி குலாய் - பொன் கிடந்து ஒளிரும் மணிகளின் அழகிய கிளர்ந்த ஒளியுடன் குலாவி; மேல் திருவில் வீழ்ந்து - மேலுண்டாகிய வானவில் வீழ்ந்து; ஒருக்குலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து - ஒருங்கு வளைந்து விளங்குவன போன்று; வான் அகம் செகுக்கும் - வானத்தை வெல்லும்.
விளக்கம் : செய்தென் எச்சங்களைக் காரணம் ஆக்குக. பொருப்பெலாம் செகுக்கும். ஒருங்கு குலாய் : ஒருக்குலாய் : விகாரம். ( 15 )
1904. வீழ்பனிப் பாறைக ணெறியெலாம் வெவ்வெயிற்
போழ்தலின் வெண்ணெய்போற் பொழிந்துமட் டொழுகுவ
தாழ்முகில் சூழ்பொழிற் சந்தனக் காற்றசைந்
தாழ்துயர் செய்யுமவ் வருவரைச் சாரலே.
பொருள் : அவ் அருவரைச் சாரல் நெறியெல்லாம் - அந்த அரிய மலைச்சாரலின் வழியெங்கும்; வீழ் பனிப் பாறைகள் - வீழ்ந்த பனிப் பாறைகள்; வெவ்வெயில் போழ்தலின் - கொடிய வெயில் உருக்குவதால்; வெண்ணெய் போல் பொழிந்து - வெண்ணெய்போலப் பொழிவதும் புரிந்து; மட்டு ஒழுகுவ தாழ்முகில் சூழ் பொழில் - தேனொழுகுவன வாகிய, முகில்சூழ் பொழிலிலே; சந்தனக் காற்று அசைந்து - சந்தனக் காற்றும் வீசி; ஆழ்துயர் செய்யும் - மிகுதுயரைச் செய்யும்.
விளக்கம் : வீழ்பனிப்பாறை : வினைத்தொகை. மட்டு - தேன். தாழ் முகில் : வினைத்தொகை. சூழ்பொழில் : வினைத்தொகை. நெறிகள் பொழியப்பட்டு அசையப்பட்டுத் துயர் செய்யும் என்க. ( 16 )
1905. கூகையுங் கோட்டமுங் குங்கும மும்பரந்
தேகலா காநிலத் தல்கிவிட் டெழுந்துபோய்த்
தோகையு மன்னமுந் தொக்குட னார்ப்பதோர்
நாகநன் காவினு ணயந்துவிட் டார்களே.
பொருள் : கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து - கூகை என்னுங் கொடியும் கோட்டம் குங்குமம் என்னும் மரங்களும் பரவியிருப்பதால்; ஏகல் ஆகா நிலத்து அல்கி - அழகாற் போதற்கு அரிய நிலத்தே தங்கி; விட்டு எழுந்து போய் - அவ்விடத்தைவிட்டு எழுந்து சென்று; தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது - மயிலும் அன்னமுங் கூடி ஆரவாரிப்பதாகிய, ஓர் நாக நன்காவினுள் நயந்து விட்டார்கள் - ஒரு நாகமரப் பொழிலிலே விரும்பித் தங்கினார்கள்.
விளக்கம் : கூகை - ஒருகொடி. கோட்டம் குங்குமம் என்பன மரங்கள். பரத்தலால் ஏகலாகா எனலே அமையும். அழகால் போதற்கரிய என்பர் நச்சினார்க்கினியர். அல்கி - தங்கி. விட்டார்கள் - தங்கினார்கள். ( 17 )
வேறு
1906. பூத்தகி றவழும் போர்வை
பூசுசாந் தாற்றி பொன்னூற்
கோத்துநீர் பிலிற்றுங் காந்தங்
குங்கும வைரப் பொற்கோய்
சாத்துறி பவழக் கன்னல்
சந்தன வால வட்ட
நீத்தவ ரிடத்து நாற்றி
நிழன்மணி யுலகஞ் செய்தார்.
பொருள் : பூத்து அகில் தவபம் போர்வை - பொலிவு பெற்று அகிற்புகை தவழும் போர்வையையும்; பூசு சாந்து ஆற்றி - மேலே பூசிய சந்தனத்தை ஆற்றும் சிற்றால வட்டத்தையும்; பொன் நூல் - தலையிற் கட்டும் பொன்னூலையும்; நீர் கோத்துப் பிலிற்றும் காந்தம் - நீரை விடாமல் துளிக்கும் சந்திரகாந்தக் கல்லையும்; குங்கும வைரப் பொன்கோய் - குங்குமம் வைக்கும் வைர மிழைத்த பொற்சிமிழையும்; சாத்துறி - பரணிக் கூட்டையும்; பவழக் கன்னல் - பவழக் கரகத்தையும்; சந்தன ஆல வட்டம் - சந்தன மரத்தாற் செய்த பேரால வட்டத்தையும்; நீத்தவர் இடத்து நாற்றி - தாபதரின் பள்ளியிலே தூக்கி; நிழல் மணி உலகம் செய்தார் - ஒளியையுடைய அழகிய வானுல காக்கினர்.
விளக்கம் : அகில் : ஆகுபெயர். பூத்தல் - பொலிவுறுதல். சாந்தாற்றி -சிற்றாலவட்டம். நீர் பிலிற்றும் - நீரைக் காலும். காந்தம் - சந்திரகாந்தம். கோய் - சிமிழ். சாத்துறி - பரணிக்கூடு. கன்னல் - கரகம். நீத்தவர் - தாபதர். ( 18 )
1907. நித்தில முலையி னார்த நெடுங்கணா னோக்கப் பெற்றுங்
கைத்தலந் தீண்டப் பெற்றுங் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்தலர் கொய்யத் தாழ்ந்த மரமுயி ரில்லை யென்பார்
பித்தல ராயிற் பேய்க ளென்றவாற் பேச லாமோ.
பொருள் : நித்தில முலையினர்தம் நெடுங்கணால் நோக்கப் பெற்றும் - முத்தணிந்த முலையினருடைய பெருங்கண்களாற் பார்க்கப் பெற்றும் : கைத்தலம் தீண்டப் பெற்றும் - கைகளால் தொடுதல் பெற்றும்; கனிந்தன - கனியாதன கனிந்தன; மலர்ந்த - பூவாதன பூத்தன; காண்க - அவற்றைக் காண்பீராக!; வைத்து அலர் கொய்யத் தாழ்ந்த மரம் உயிர் இல்லை யென்பார் - மங்கையர் கையை வைத்து மலர் கொய்தற்கேற்ற அளவிலே தாழ்ந்து கொடுப்பதுஞ் செய்தனவாகிய மரங்கட்கு உயிர் இல்லை என்றுரைப்பவர்; பித்து அலராயின் - பித்தர் அல்லராயின்; பேய்கள் என்று அலால் - பேய்கள் என்று கூறுதலையன்றி; பேசலாமோ - வேறே கூறத்தகுமோ? (என்று அவர்கள் தம்முள் உரைத்துக் கொண்டனர்).
விளக்கம் : மகளிர் நோக்குதலானும் தீண்டுதலானும் சில மரங்கள் கனிதலும் மலர்தலும் உடையவாம் என்பதொரு வழக்கு. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். என்பதுபற்றிப் பேய்கள் என்று அலாற் பேசலாமோ என்றார். மரம் உயிரில்லை என்பார் அலகையா வைக்கப்படுவர் என்றவாறு. ( 19 )
1908. பொறிமயி லிழியும் பொற்றார்
முருகனிற் பொலிந்து மாவி
னெறிமையி னிழிந்து மைந்தன்
மணிக்கைமத் திகையை நீக்கி
வெறுமையி னவரைப் போக்கி
வெள்ளிடைப் படாத நீரா
லறிமயி லகவுங் கோயி
லடிகளைச் செவ்வி யென்றான்.
பொருள் : மைந்தன் - சீவகன்; பொறிமயில் இழியும் பொன்தார் முருகனின் பொலிந்து - புள்ளிகளையுடைய மயிலினின்றிறங்கும் பொன்மாலை அணிந்த முருகனைப் போலப் பொலிவுற்று; மாவின் நெறிமையின் இழிந்து - குதிரையிலிருந்து இறங்கும் முறையான் இறங்கி; கைமணி மத்திகையை நீக்கி - கையிலிருந்து மணிகள் இழைத்த குதிரைச் சம்மட்டியை நீக்கி; வெறுமையினவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால் - அறிவிலாதாரைப் போகவிடுத்து, அடிகளை வெளியிடும் வகை நேராதவாறு; மயில் அகவும் கோயில் அடிகளைச் செவ்வி அறி என்றான் - மயில் அகவும் தவப் பள்ளியிலே சென்று அடிகளைச் செவ்வியறிவாயாக என்றான்.
விளக்கம் : அன்பு செலுத்தலின் அவனோடே கூடச் செல்கின்றவன் செவ்வி அறிந்தே சேறல் முறையாகலானும், பதுமுகன் தன்னை அறிவிக்க விசயை அறிய வேண்டுதலானும் செவ்வியறி என்றான். ( 20 )
1909. எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிட னாடு மின்னே
பல்லியும் பட்ட பாங்கர் வருங்கொலோ நம்பி யென்று
சொல்லின டேவி நிற்பப் பதுமுகன் றொழுது சோந்து
நல்லடி பணிந்து நம்பி வந்தன னடிக ளென்றான்.
பொருள் : எல்இருள் கனவில் கண்டேன் - விடியற்காலத் திருளிலே கனவிலே கண்டேன்; கண்இடன் ஆடும் இடக் கண் ஆடும்; இன்னே பல்லியும் பாங்கர் பட்ட - இப்பொழுதே பல்லியும் நல்ல இடத்தே பட்டன; நம்பி வருங்கொலோ என்று சொல்லினள் - (ஆதலால்) நம்பி வருவானோ என்று கூறியவளாய் - தேவி நிற்ப - விசயை நிற்ப; பதுமுகன் தொழுது சேர்ந்து - பதுமுகன் தொழுதவாறு சென்று; நல்அடி பணிந்து - அழகிய அடியிலே வணங்கி; அடிகள் நம்பி வந்தனன் என்றான் - அடிகளே! நம்பி வந்தான் என்றான்.
விளக்கம் : எல் - பகல். நம்பி : நம் என்பது முதனிலையாக நமக்கு இன்னான் என்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச்சொல். எல்லிருள் - விடியற்காலத்திருள். விடியற்காலத்திருளிலே கண்ட கனா அண்மையிலேயே பலிக்கும் என்பது கனா நூற்றுணிபு. இதனைப் படைத்த முற்சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்த பிற் சாம மிகுதிங்கள் எட்டிற் கிடைக்குமென்னும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால் என்னும் கனா நூலானும் உணர்க; (சிலப். 15 : 95-106. அடியார்க். மேற்.) ( 21 )
1910. எங்கணா னைய னென்றாட்
கடியன்யா னடிக ளென்னாப்
பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும்
புனைமணிக் கடக மார்ந்த
தங்கொளித் தடக்கை கூப்பித்
தொழுதடி தழுவி வீழ்ந்தா
னங்கிரண் டற்பு முன்னீ
ரலைகடல் கலந்த தொத்தார்.
பொருள் : எங்கணான் ஐயன் என்றாட்கு - எங்குளான் என் ஐயன் என்றாட்கு; அடியன் யான் அடிகள் என்னா - அடியேன் ஈங்குளேன் அடிகளே என்று; பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக்கடகம் ஆர்ந்த - மிகுதியாக ஒளியை உமிழ்ந்து விளங்கும் அழகிய மணிக் கடகம் பொருந்திய; தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது - ஒளி தங்கிய பெரிய கையைக் குவித்துத் தொழுது; அடிதழுவி வீழ்ந்தான் - (பிறகு) அன்னையின் அடிகளைத் தழுவி வீழ்ந்தான்; அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலைகடல் - அவ்விடத்து அவ்விருவரும் முன்னீராலே இரண்டு அற்புக் கடல் கலந்தது போன்றார்.
விளக்கம் : முன்நீர் - முற்பட்ட நீர்மை : உதிரம் உறவறியும் என்னும் பழமொழியை நோக்குக. இது கருதியே, முன் (சீவக. 1908) வெள்ளிடைப் படாத என்றார். அடிகள் அன்பும் சீவகன் அன்பும் சொல்லொணா அளவிற்று. அம்முறையால் அவ்விரண்டனையும் இரண்டு கடலென்று உருவகித்தார். ( 22 )
1911. திருவடி தொழுது வீழ்ந்த
சிறுவனைக் கண்ட போழ்தே
வருபனி சுமந்து வாட்கண்
வனமுலை பொழிந்த தீம்பான்
முருகுடை மார்பிற் பாய்ந்து
முழுமெயு நனைப்ப மாதர்
வருகவென் களிறென் றேத்தி
வாங்குபு தழுவிக் கொண்டாள்.
பொருள் : திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனைக் கண்ட போழ்தே - அங்ஙனம் வீழ்ந்த சிறுவனைப் பார்த்தபோதே; வாள் கண் சுமந்து வருபனி - ஒளியுற்ற கண் சுமந்து பெருகிய நீரும்; வனமுலை பொழிந்த தீ பால் - அழகிய முலை பெய்த இனிய பாலும்; முருகுடை மார்பின் பாய்ந்து - சீவகனுடைய மார்பிலே பாய்ந்து; முழுமெயும் நனைப்ப - மெய்யெல்லாம் நனைக்கும்படி; மாதர் - விசயை; என் களிறு! வருக என்று ஏத்தி - என் களிறே! வருக! எனப் புகழ்ந்து; வாங்குபு தழுவிக்கொண்டாள் - தன் மார்பிலே அவன் மார்பு ஒடுங்கம்படி தழுவிக்கொண்டாள்.
விளக்கம் : முருகுடை மார்பிற் பாய்ந்து - அவனுடைய மார்பிற் காட்டிலும் தன் மார்பு பாய்ந்து என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். இதற்கு, வாட்கண் சுமந்த வருபனி வனமுலை பொழிந்த தீம்பால் முழுமெயும் நனைப்ப எனக் கூட்டி, அவன் எழும்போது இவை அவன் மெய்ம் முழுதும் நனைப்ப என்று பிரிப்பர்; ஈண்டுக் கூறிய பொருளையுங் கொள்வர். ( 23 )
1912. காளையாம் பருவ மோராள் காதன்மீக் கூர்த லாலே
வாளையா நெடிய கண்ணான் மகனைமார் பொடுங்கப் புல்லித்
தாளையா முன்பு செய்த தவத்தது விளைவி லாதேன்
றோளையாத் தீர்ந்த தென்றா டொழுதகு தெய்வ மன்னாள்.
பொருள் : தொழுதகு தெய்வம் அன்னாள் - யாவரும் வணங்கும் தெய்வம் போன்ற; வாளை ஆம் நெடிய கண்ணாள் - வாளைப்போன்ற நீண்ட கண்ணாளாகிய விசயை; காளை ஆம் பருவம் ஓராள் - இது காளைப்பருவம், தழுவலாகாதென்று நினையாளாய்; காதல் மீக் கூர்தலாலே - காதல் மிகுந்து பரவுதலாலே; மகனை மார்பு ஒடுங்கப் புல்லி - சீவகனைத் தன் மார்பிலே குழவிப்பருவம்போல ஒடுங்குமாறு தழுவி; ஐயா! முன்பு தாள் செய்த தவத்தது விளைவு இலாதேன் - ஐயனே! முற்பிறப்பிலே முயற்சியாற் செய்த தவத்தின் பயன் இல்லாத என்னுடைய; தோள் அயாத் தீர்ந்தது என்றாள் - தோள் வருத்தம் நீங்கியது என்றாள்.
விளக்கம் : வாளை ஆம் நெடிய கண்ணாள் : சச்சந்தனைக் கோறலின் விசயைக்குப் பெயராயிற்றென்பர் நச்சினார்க்கினியர். இவ்வகைப் பொருள் நோக்கம் ஒன்றும் இன்றிப் பெயராக நின்ற தென்றே கொள்க. ( 24 )
1913. வாட்டிறற் குருசி றன்னை வாளம ரகத்து ணீத்துக்
காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்
சேட்டிளம் பருதி மார்பிற் சீவக சாமி யீரே
யூட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ வென்றாள்.
பொருள் : சேடு இளம் பருதி மார்பின் சீவக சாமியீரே! - பெருமையையுடைய இள ஞாயிறு போலும் மார்பினையுடைய சீவக சாமியீரே!; வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து - வாள் வலி பெற்ற அரசனைப் போரிலே கைவிட்டு; உம்மைக் காட்டகத்து நீத்த - நும்மைச் சுடுகாட்டிலே கைவிட்ட; கயத்தியேற் காண - கொடியேனைக் காண; ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடிநோவ - ஊட்டிய செந்நிறங்கொண்ட செந்தாமரை அனைய அடிகள் நோமாறு; வந்தீர் என்றாள் - வந்தீரே! நும் அன்பிருந்தவாறு என்னே! என்றாள்.
விளக்கம் : சீவக சாமியீரே என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் முடிபு : பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே (தொல் - விளிமரபு, 23) என்ற சூத்திரத்தில், சீவக சாமியென்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. தன்னினம் முடித்தல் என்பதனாற் சீவக சாமியார் என ஆரீறாய்ச் சீவக சாமியீரே என ஈரொடு ஏகாரம் பெறுதல கொள்க எனக் கூறினார். ( 25 )
1914. கெடலருங் குரைய கொற்றங்
கெடப்பிறந் ததுவு மன்றி
நடலையு ளடிகள் வைக
நட்புடை யவர்க ணைய
விடைமகன் கொன்ற வின்னா
மரத்தினேன் றந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா
களைகவிக் கவலை யென்றான்.
பொருள் : கெடல் அருங் கொற்றம் கெடப் பிறந்ததுவும் அன்றி - கெடாத வெற்றியையுடைய அரசன் கெடுமாறு பிறந்ததுவும் அல்லாமல்; அடிகள் நடலையுள் வைக - அடிகள் வருத்தத்திலே தங்க; நட்புடையவர்கள் நைய - நண்பர்கள் வருந்த; இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த - இடையன் வெட்டிய துன்புறும் மரத்தின் தன்மையுடையேனாகிய யான் தந்த; துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா - துன்பக்கடலிலே அழுந்த வேண்டா; இக்கவலை களைக என்றான் - இனி இத்துன்பத்தைக் கைவிடுக என்றான்.
விளக்கம் : குரைய : அசை. கொற்றம் - தொழிலாகுபெயராய் அரசனை உணர்த்தியது. நட்புடையவர் : சச்சந்தனுடைய நண்பர்கள்; சீவகன் தோழருடைய தந்தையர். உயிருடன் இருந்தேனாய்ப் பகையை வென்றேனும் அல்லேன்; உயிரை நீத்தேனும் அல்லேன் என்று கருதி, மரத்தினேன் என்றான். இடையன் எறிந்த மரம் (பழ. 314) என்றார் பிறரும். ( 26 )
1915. யானல னௌவை யாவாள்
சுநந்தையே யையற் கென்றுங்
கோனலன் றந்தை கந்துக்
கடனெனக் குணத்தின் மிக்க
பானிலத் துறையுந் தீந்தே
னனையவா யமிர்த மூற
மானலங் கொண்ட நோக்கி
மகன்மன மகிழ்ச் சொன்னாள்.
பொருள் : ஐயற்கு அவ்வை யாவாள் சுநந்தையே, யான் அலன் - ஐயனுக்குத் தாயாவாள் சுநந்தையே, யானல்லேன்; தந்தை கந்துக் கடன், கோன் அலன் - தந்தையாவான் கந்துக் கடனே, அரசனல்லன்; என - என்று; பால்நிலத்து உறையும் தீதேன் அனையவாய் அமிர்தம் ஊற - பாலிடத்தே தங்கும் இனிய தேனைப் போன்றனவாய் இனிமையூறும்படி; குணத்தின் மிக்க மான் நலம் கொண்ட நோக்கி - குணத்திற் சிறந்தவளும், மானின் அழகைக்கொண்ட நோக்கத்தை யுடையவளுமான விசயை; மகன் மனம் மகிழச் சொன்னாள் - சீவகன் மனங்களிக்கக் கூறினான்.
விளக்கம் : இருமுது குரவர்க்குந் துன்பஞ் செய்தே னென்றலின், உனக்கு இவரன்றோ இருமுது குரவர் என்றாள், ஐயன் : முன்னிலைப் படர்க்கை. ( 27 )
1916. எனக்குயிர்ச் சிறுவ னாவா
னந்தனே யைய னல்லை
வனப்புடைக் குமர னிங்கே
வருகென மருங்கு சோத்திப்
புனக்கொடி மாலையோடு
பூங்குழ றிருத்திப் போற்றா
ரினத்திடை யேற னானுக்
கின்னளி விருந்து செய்தாள்.
பொருள் : எனக்கு உயிர்ச் சிறுவன் ஆவான் நந்தனே; ஐயன் அல்லை - எனக்கு உயிர்போலும் சிறுவனாவான் நந்தட்டனே, நீ அல்லை; வனப்புடைக் குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி - (ஆதலால்) அழகுடைய மகனே! இங்கே வருக என்று கூறி (அவனை) அருகே அணைத்து; புனக் கொடி மாலையோடு பூங்குழல் திருத்தி - புனக்கொடி போன்றாள் அவனுடைய மாலையையும் மலர்க் குழலையுந் திருத்தி; போற்றார் இனத்திடை ஏறு அனானுக்கு - பகைவர் திரளிலே சிங்கம் போன்ற நந்தட்டனுக்கு; இன் அளி விருந்து செய்தாள் - இனிய தண்ணளியாகிய விருந்தைச் செய்தாள்.
விளக்கம் : உயிர்ச்சிறுவன் - உயிர்போன்ற மகன். குமரன் : விளி. புனக்கொடி : அன்மொழித்தொகை; விசயை. போற்றார் - பகைவர். ( 28 )
1917. சிறகராற் பார்ப்புப் புல்லித் திருமயி லிருந்த தேபோ
லிறைவிதன் சிறுவர் தம்மை யிருகையி னாலும் புல்லி
முறைமுறை குமரர்க் கெல்லா மொழியமை முகமன் கூறி
யறுசுவை யமிர்த மூட்டி யறுபகல் கழிந்த பின்னாள்.
பொருள் : இறைவி - விசயை; சிறகரால் பார்ப்புப் புல்லித் திருமயில் இருந்ததேபோல் - சிறகினாலே குஞ்சுகளைத் தழுவி அழகிய மயில் இருந்ததைப்போல; தன் சிறுவர் தம்மை இரு கையினாலும் புல்லி - தன் மக்களை இரண்டு கையாலும் தழுவி; குமரர்க்கு எல்லாம் முறைமுறை மொழி அமை முகமன்கூறி - மற்றைய மைந்தர்கட்கெல்லாம் முறைமுறையாக இன்மொழி கலந்த முகமன் மொழிந்து; அறுசுவை அமிர்தம் ஊட்டி - அறுசுவை உண்டியை உண்பித்து; அறுபகல் கழிந்த பின்னாள் - ஆறுநாட்கள் கழிந்து ஏழாவது நாளிலே,
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். பார்ப்பு - குஞ்சு. சிறகர் - சிறகு. புல்லி - தழுவி. இறைவி : கோப்பெருந்தேவி; விசயை. இன்மொழி என்க. அமிர்தம் - உணவு. ( 29 )
வேறு
1918. மரவ நாக மணங்கமழ் சண்பகங்
குரவங் கோங்கங் குடம்புரை காய்வழை
விரவு பூம்பொழில் வேறிருந் தாய்பொரு
ளுருவ மாத ருரைக்குமி தென்பவே.
பொருள் : மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம் குரவம் கோங்கம் குடம்புரை காய் வழை - மரவமும் நாகமும் மணம் பொருந்திய சண்பகமும் குரவமும் கோங்கமும் குடம் போன்ற காயையுடைய சுரபுன்னையும்; விரவு பூம்பொழில் - கலந்த மலர்ப் பொழிலிலே; உருவமாதர் - அழகினையுடைய விசயை; வேறு இருந்து - மைந்தருடன் தனியே இருந்து; ஆய்பொருள் இது உரைக்கும் ஆராய்ந்த பொருளாகிய இதனை உரைப்பாள்.
விளக்கம் : மரவம், நாகம், சண்பகம், குரவம், கோங்கம், வழை என்பன மரங்கள். புரை : உவமவுருபு. வழை - சுரபுன்னை. ஆய்பொருள் - ஆராய்ந்த பொருள். மாதர் பொருள் இது உரைக்கும் என இயைக்க. என்ப. ஏ : அசைகள். ( 30 )
1919. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட்
புலிய னார்மகட் கோடலும் பூமிமேல்
வலியின் மிக்கவர் தம்மகட் கோடலு
நிலைகொண் மன்னர் வழக்கென நோபவே.
பொருள் : நலிவு இல் குன்றொடு காடு உறை நன்பொருள் புலியனார் மகள் கோடலும் - அழித்தற்கரிய மலையிலும் காட்டிலும் உறைகின்ற பெரும் பொருளையுடைய குறுநில மன்னர் மகளைக் கொள்ளுதலும்; பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகள் கோடலும் - புவியிடை வலிய அரசர் மகளைக் கொள்ளுதலும்; நிலைகொள் மன்னர் வழக்கு என நேர்ப - தம்முன்னோர்போல் நிலைகொள்ளும் அரசரின் முறைமையென்று நூல்வல்லோர் ஒப்புவர்.
விளக்கம் : நன்பொருள் என்புழி நன்மை பெருமைமேனின்றது, புலியனார் என்றது வலிமிக்க குறுநில மன்னரை. நூல்வல்லோர் நேர்ப என்க. எனவே வலியின் மிக்கவர் மகளை நீ கொண்டது நன்னென்றாள். ( 31 )
1920. நீதி யாலறத் தந்நிதி யீட்டுத
லாதி யாய வரும்பகை நாட்டுதன்
மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே.
பொருள் : நீதியால் அறுத்து அந்நிதி ஈட்டுதல் - அரசியல் முறையாலே ஆறிலொன்றாக வரையறுத்து அப் பொருளைச் சேர்த்தல்; ஆதி ஆய அரும்பகை நாட்டுதல் - தொன்மையான பகையைத் தம் நெஞ்சிலே நிலைபெறுத்துதல்; முள்ளொடு முள்பகை பேதுசெய்து மோதிக் கண்டிடல் - முள்ளைக்கொண்டு முள்ளைக் களையுமாறுபோலத் தமக்குப் பகைஞராய் உறவாயிருப்பவர் இருவரைத் தம்மில் வேறுபடுத்தி ஒருவரைக்கொண்டு ஒருவரை மோதியிடுதல்; பிளந்திடல் - தம்மிற் கூடி வந்து வினை செய்வாரைப் பிரித்துத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் : பெட்டது - அரசர் விரும்பப்பட்ட பொருளாகும்.
விளக்கம் : முள்ளினால் முட்களையுமாறு (பழ. 54) வினை செய்வாரைப் பிரித்தலாவது பகைமன்னரிடம் வினை செய்வாராய்ச் சிறந்திருப்பாரைப் பிளவுபடுத்தித் தம்முடன் கூட்டிக் கொள்ளுதல். ( 32 )
1921. ஒற்றர்தங்களை யொற்றரி னாய்தலுங்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்
சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ
கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே.
பொருள் : ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும் - ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும்; கற்ற மாந்தரைக் கண்எனக் கோடலும் - அறநூல் கற்ற அமைச்சரைக் கண்போலக் கொள்வதும்; சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் - மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும்; கொற்றம் கொள் குறிக் கொற்றவற்குச் சூது என்ப - வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப.
விளக்கம் : இச் செய்யுட் கருத்தோடு,
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல் எனவும், (குறள். 588)
ஒற்றொற் றுணராமை யாள்க எனவும், (குறள். 589)
சூழ்வார் கண்ணாக ஒழுகல் எனவும், (குறள். 445)
வரும், வள்ளுவர் மெய்ம்மொழிகளையும் ஒப்பிட்டுக் காண்க. ( 33 )
1922. வென்றி யாக்கலு மேதக வாக்கலுங்
குன்றி னார்களைக் குன்றென வாக்கலு
மன்றி யுங்கல்வி யோடழ காக்கலும்
பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.
பொருள் : பொன் துஞ்சு ஆகத்தினாய் - திருமகள் தங்கும் மார்பினாய்!; வென்றி ஆக்கலும் - வெந்றியை உண்டாக்கலும்; மேதகவு ஆக்கலும் - மேம்பாட்டை உண்டாக்கலும்; அன்றியும் - இவைகளே அல்லாமல்; கல்வியோடு அழகு ஆக்கலும் - கல்வியையும் அழகையும் உண்டாக்கலும்; குன்றினார்களைக் குன்று என ஆக்கலும் - மெலிந்தவரை மலையென வலியுடையராக்கலும்; பொருள் செய்யும் - பொருளாற் செய்ய வியலும்.
விளக்கம் : வென்றி - வெற்றி, ஆக்கல் - உண்டாக்குதல், மேதகவு. கேமம்பாடு. குன்றினார் - குறைந்தவர். பொன் : திருமகள். ஆகம் - மார்பு. ( 34 )
1923. பொன்னி னாகும் பொருபடை யப்படை
தன்னி னாகுந் தரணி தரணியிற்
பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.
பொருள் : பொன்னின் பொருபடை ஆகும் - இப் பொருளாலே போருக்குரிய படையுண்டாகும்; அப் படைதன்னின் தரணி ஆகும் - அப்படையினாலே நாடு கிடைக்கும்; தரணியின் பின்னைப் பெரும் பொருள் ஆகும் - நாட்டினாலே பிறகு பெரிய பொருள் கிடைக்கும்; அப்பொருள் துன்னும் காலைத் துன்னாதன இல்லை - அப்பொருள் கைகூடுமானால் வீடும் கிடைக்கும்.
விளக்கம் : பொன் - ஈண்டுப் பொருள், பொருபடை : வினைத் தொகை, தரணி - நிலம், துன்னாதன இல்லை எனவே வீடும் கிடைக்கும் என்றாளாயிற்று. துன்னாதன் - எய்துதற்கரியன. ( 35 )
1924. நிலத்தி னீங்கி நிதியினுந் தேய்ந்துநங்
குலத்திற் குன்றிய கொள்கைய மல்லதூஉங்
கலைக்க ணாளரு மிங்கில்லை காளைநீ
வலித்த தென்னென வள்ளலுங் கூறுவான்.
பொருள் : காளை - காளையே!; நிலத்தின் நீங்கி - நிலத்தையிழந்து; நிதியினும் தேய்ந்து - செல்வத்தினுங் குறைந்து; குலத்திற்குன்றிய கொள்கையாம் - நல்குலத்தில் தாழ்ந்த கொள்கையினை உடையேம்; அல்லதூஉம் - அல்லாமலும்; கலைக்கணாளரும் இங்கு இல்லை - (இந்நிலையை நீக்கற்குரிய) அமைச்சரும் இவ்விடத்தே இல்லை; நீ வலித்தது என் என - நீ துணிந்தது யாது என்று வினவ; வள்ளலும் கூறுவான் - சீவகனும் உரைப்பான்.
விளக்கம் : நிலம் என்றது - நமக்குரிய நாடு என்பது பட நின்றது. கொள்கையம் : தன்மைப்பன்மை வினைமுற்று. அல்லதூஉம் : இன்னிசை யளபெடை. கலையைக் கண்ணாக உடையர்; அமைச்சர், காளை - விளி. வலித்தது - துணிந்தது. வள்ளல் : சீவகன். ( 36 )
வேறு
1925. எரியொடு நிகர்க்கு மாற்ற
லிடிக்குரற் சிங்க மாங்கோர்
நரியொடு பொருவ தென்றாற்
சூழ்ச்சிநற் றுணையொ டென்னாம்
பரிவொடு கவல வேண்டா
பாம்பவன் கலுழ னாகுஞ்
சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்
சூழ்கழ னந்த னென்றான்.
பொருள் : எரியொடு நிகர்க்கும் ஆற்றல் - தீயொடு நிகர்க்கும் ஆற்றலையுடைய; இடிக்குரல் சிங்கம் ஆங்கு ஓர் நரியொடு பொருவது என்றால் - இடிபோலும் முழக்கத்தையுடைய சிங்கம் ஆங்கு ஒரு நரியுடன் போர் புரிவதென்னின்; சூழ்ச்சி நல்துணையொடு என் ஆம்? - அவ்விடத்து அருளிச் செய்த சூழ்ச்சியும் துணைகளும் என்னவாகும்?; பரிவொடு கவலவேண்டா - என்மேல் வைத்த அன்பினால் இதற்கு வருந்த வேண்டா; அவன் பாம்பு - கட்டியங்காரன் பாம்பு ஆவான்; சொரிமதுச் சுரும்பு உண் கண்ணிச் சூழ்கழல் நந்தன் கலுழன் ஆகும் - பொழியுந்தேனைச் சுரும்புகள் பருகுங் கண்ணியையும் சூழ்ந்த வீரக்கழலையுமுடைய நந்தட்டன் கருடன் ஆவான்; என்றான் - என்று சீவகன் கூறினான்.
விளக்கம் : நான் அவனுடனே பொருவதனால் சூழ்ச்சியுந் துணையும் வேண்டாமையோடு, நானும் சென்று பொரவேண்டியதில்லை ; நந்தட்டன் ஒருவனே போதும்; மேலும் இவனைக் கண்டவுடனே கட்டியங்காரன் கெடுவான் - என்று கூறினானாகக் கொள்க. (37)
1926. கெலுழனோ நந்த னென்னாக்
கிளரொளி வனப்பு னானைக்
கலுழத்தன் கையாற் றீண்டிக்
காதலிற் களித்து நோக்கி
வலிகெழு வயிரத் தூண்போற்
றிரண்டுநீண் டமைந்த திண்டோள்
கலிகெழு நிலத்தைக் காவா
தொழியுமோ காளைக் கென்றாள்.
பொருள் : நந்தன் கெலுழனோ என்னா - (அதுகேட்ட விசயை) நந்தட்டன் கலுழனோ என்று கூறி; கிளர் ஒளி வனப்பினானைக் கலுழத் தன் கையால் தீண்டி - விளங்கும் ஒளியும் அழகும் உடைய அவனை மனமுருகும்படி தன் கையினாலே தீண்டி; காதலிற் களித்து நோக்கி - அன்பினாற் களிப்புற்றுப் பார்த்து; வலிகெழு வயிரத் தூண்போல் திரண்டு நீண்டு அமைந்த திண்தோள் - ஆற்றல்பொருந்திய வயிரத் தூணைப்போலத் திண்ணியவாய்த் திரண்டு நீண்டு அமைந்த தோள்கள்; கலிகெழு நிலத்தைக் காளைக்குக் காவாது ஒழியுமோ என்றாள் - கட்டியங் காரனிடத்துப் பொருந்திய நிலததைக் காளைக்குக் கொண்டு தந்து காவாமல் நீங்குமோ என்றாள்.
விளக்கம் : காளை : சீவகன். கலி - கட்டியங்காரன். தந்தென வருவிக்க. கெலுழன் - கலுழன்; கருடன். கலுழ - மனமுருகும்படி. இத் திண்டோள் என்க. ஒழியுமோ என்புழி ஓகாரம் எதிர்மறை அதன் உடன்பாட்டுப் பொருளை வலியுறுத்தி நின்றது. காளைக்கு; முன்னிலைப் படர்க்கை. ( 38 )
1927. இடத்தொடு பொழுது நாடி
யெவ்வினைக் கண்ணு மஞ்சார்
மடப்பட லின்றிச் சூழ
மதிவல்லார்க் கரிய துண்டோ
கடத்திடைக் காக்கை யொன்றே
யாயிரங் கோடி கூகை
யிடத்திடை யழுங்கச் சென்றாங்
கின்னுயிர் செகுத்த தன்றே.
பொருள் : கடத்திடைக் காக்கை ஒன்றே - காட்டிலுள்ள ஒரு காக்கையே; ஆயிரங்கோடி கூகை இடத்திடை - எண்ணிறந்த கூகையிருக்கின்ற இடத்திலே; அழுங்கச் சென்று - அவை வருந்துமாறு பகற்காலத்தே சென்று; ஆங்கு இன்உயிர் செகுத்தது அன்றே? - அங்கே அவற்றின் இனிய உயிரைக் கெடுத்தது அன்றோ?; (ஆகையால்) இடத்தொடு பொழுதும் நாடி - இடத்தையும் காலத்தையும் எண்ணி; எவ்வினைக் கண்ணும் அஞ்சார் - ஆண்டுச் செய்யும் எத் தொழிலுக்கும் அஞ்சாராய்; மடப்படல் இன்றிச் சூழும் மதி வல்லார்க்கு - அறியாமையிற்படுதலில்லாமல் ஆராயும் அறிவினையுடையார்க்கு; அரியது உண்டோ? - முடியாதது உளதோ?
விளக்கம் : இடம் - தகுந்த இடம். பொழுது - தகுந்த பொழுது. ஞாலங் கருதினுங் கைகூடும், காலம் கருதி இடத்தாற் செயின் என்றார் வள்ளுவனாரும் (குறள். 484) ஆயிரங்கோடி காக்கை என்றது மிகுதிக்கோர் எண் காட்டியவாறு. எண்ணிறந்த காக்கை என்றவாறு.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள். 481)
என்றார் வள்ளுவனாரும். ( 39 )
1928. இழைபொறை யாற்ற கில்லா
திட்டிடை தளர நின்ற
குழைநிற முகத்தி னார்போற்
குறித்ததே துணிந்து செய்யார்
முழையுறை சிங்கம் பொங்கி
முழங்கிமேற் பாய்ந்து மைதோய்
வழையுறை வனத்து வன்க
ணரிவலைப் பட்ட தன்றே.
பொருள் : முழையுறை சிங்கம் மைதோய் வழையுறை வனத்து பொங்கி முழங்கிமேற் பாய்ந்து - குகையில் இருந்த சிங்கம் இடமறியாமல் முகில் தங்கும் வழை பொருந்திய காட்டிலே கிளர்ந்து ஆரவாரித்து (நரியின்)மேற் பாய்ந்து; வன்கண் நரி வலைப்பட்டது அன்றே? - கொடிய அந் நரியாகிய வலையிலே அகப்பட்டுக் கொண்டது அன்றோ?; (ஆகையால்) இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற - அணிகலன்களைச் சுமக்கமாட்டாது நுண்ணிடை சோர நின்ற; குழை நிற முகத்தினார் போல் - குழையணிந்த ஒள்ளிய முகமுடைய மகளிரைப்போல; குறித்ததே துணிந்து செய்யார் - யாம் வீரமுடையேம் என்று நினைத்ததை (காலம் இடம் உணராமல்) நினைத்த படியே செய்ய முற்படார்.
விளக்கம் : மடம் பாடல் என்பது, மடப்படல் என வந்தது விகாரம் காலாழ் களரின் நரியடும் (குறள். 50) என்றார் தேவர். ( 40 )
1929. ஊழிவாய்த் தீயொ டொப்பான்
பதுமுக னுரைக்கு மொன்னா
ராழிவாய்த் துஞ்ச மற்றெம்
மாற்றலா னெருங்கி வென்று
மாழைநீ ணிதியந் துஞ்சு
மாநிலக் கிழமை யெய்தும்
பாழியாற் பிறரை வேண்டேம்
பணிப்பதே பாணி யென்றான்.
பொருள் : ஊழி வாய்த் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் - ஊழிக் காலத்தீயைப் போன்றவனாகிய பதுமுகன் கூறுவான்; ஒன்னார் ஆழிவாய்த் துஞ்ச - பகைவர் கடலிலேபட; எம் ஆற்றலால் நெருங்கி வென்று - எம் வல்லமையால் அடர்த்து வென்று; மாழை நீள் நிதியம் துஞ்சம் மாநிலக்கிழமை எய்தும் - பொன் மிகுந்த செல்வம் தங்கிய பெருநில ஆட்சியை அடைவோம்; பாழியால் பிறரை வேண்டோம் - வலிமையால் மற்றவரை நாடுகிலேம்; பணிப்பதே பாணி என்றான் - அடிகளின் அருளே தடையாகும் என்றான்.
விளக்கம் : எய்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. பாழியேம் என்றும் பாடம். ஊழிவாய்த்தீ - ஊழிமுடி வினுலகத்தைஅழிக்கும் நெருப்பு. ஆழி - சக்கரப்படையுமாம். குருதிக் கடலிடத்தே என்றுமாம். துஞ்ச - இறந்துபட. மாழை - பொன். பாழி - வலிமை. ( 41 )
1930. பொருவருங் குரைய மைந்தர் பொம்மென வுரறி மற்றித்
திருவிருந் தகன்ற மார்பன் சேவடி சோந்த யாங்க
ளெரியிருந் தயரு நீர்மை யிருங்கதி ரேற்ற தெவ்வர்
வருபனி யிருளு மாக மதிக்க வெம் மடிக ளென்றார்.
பொருள் : பொரு அருமைந்தர் பொம்என உரறி - உவமை கூறுதற்கரிய (பதுமுகன் நீங்கலான) தோழர்கள் கடுக முழங்கி; திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் - திருமகள் தங்கிய பரந்த மார்பனாகிய சீவகனுடைய சேவடியை அடைந்த யாங்கள்; எரிஇருந்து அயரும் நீர்மை இருங்கதிர் - (வெப்பத்திற்கு யாம் ஆற்றேம் என்று) தீசோர்வுற்றிருந்து அயரும் தன்மையையுடைய ஞாயிறு ஆகவும்; ஏற்ற தெவ்வர் வருபனி இருளுமாக-எம்மை எதிர்ந்த பகைவர் பனியும் இருளுமாகவும்; எம் அடிகள் மதிக்க என்றார் - எம் அடிகள் மதித்திடுக என்றனர்.
விளக்கம் : குரைய : அசை. பொம்மென : குறிப்புமொழி. திருவிருந்த மார்பன் எனச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. மார்பன் : சீவகன். இருங்கதிர் - ஞாயிறு. தெவ்வர் - பகைவர். ( 42 )
வேறு
1931. கார்தோன்ற வேம லருமுல்லை கமலம் வெய்யோன்
றோதோன்ற வேம லருஞ்செம்மனின் மாமன் மற்றுன்
சீர்தோன்ற வேம லருஞ்சென்றவன் சொல்லி னோடே
பார்தோன்ற நின்ற பகையைச் செறற் பாலையென்றாள்.
பொருள் : செம்மல்! - செம்மலே!; முல்லை கார் தோன்றவே மலரும் - முல்லை கார் தோன்றினால் மலரும்; கமலம் வெய்யோன் தேர் தோன்றவே மலரும் - தாமரை ஞாயிற்றின் தேரைக் கண்டால் மலரும்; மாமன் உன் சீர்தோன்றவே மலரும் - (அவ்வாறே) நின் மாமன் உன்னுடைய சீர்தோன்றிய பொழுதே மலரும்; சென்று அவன் சொல்லினோடே பார்தோன்ற நின்ற பகையைச் செறற்பாலை என்றாள் - (ஆதலால்) நீ அவனிடத்தே சென்று அவன் மொழிப்படியே உலகம் நின்னாலே விளங்க, நிலை பெற்று நின்ற பகையைக் கொல்வாயாக என்றாள் விசயை.
விளக்கம் : கார் - கார்ப்பருவம். கமலம் - தாமரை. வெய்யோன் - ஞாயிறு. செம்மல் : அண்மைவிளி. மாமன் என்றது, கோவிந்தனை. நின்சீர் தோன்றிய அளவிலேயே நின் மாமன் (மனம்) மலரும் என்க. பார்தோன்ற - உலகம் விளங்கும்படி. பகை : கட்டியங்காரன். ( 43 )
1932. நன்றப் பொருளே வலித்தேன்மற் றடிக ணாளைச்
சென்றப் பதியு ளெமர்க்கேயேன துண்மை காட்டி
யன்றைப் பகலே யடியேன்வந் தடைவ னீமே
வென்றிக் களிற்று னுழைச்செல்வது வேண்டு மென்றான்.
பொருள் : அடிகள்! - அடிகளே!; நன்று - கூறியது நல்லது; அப்பொருளே வலித்தேன் - நீர்கூறிய பொருளையே யானும் துணிந்தேன்; மற்று - இனி; நாளைச் சென்று - நாளைக்குப் போய்; அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி - இராசமாபுரத்தே எம் சுற்றத்தார்க்கு மட்டும் யான் உயிருடன் இருப்பதை அறிவித்துவிட்டு; அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் - அன்றையத்தினமே அடியேன் மாமனிடம் வந்து சேர்வேன்; வென்றிக் களிற்றானுழை நீம் செல்வது வேண்டும் என்றான் - வென்றிக் களிற்றையுடைய மாமனிடம் நீர் செல்லுதல் வேண்டும் என்று சீவகன் கூறினான்.
விளக்கம் : கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் (தொல். குற்றியலுகரம். 78) என்றதனால், நும் என்னுஞ்சொல் நீயிரென முழுவதுந் திரியாது, மகரம் நிற்பத் திரிந்து நீம் என நின்றது; இனி, நீ மென்பது ஒருதிசைச் சொல்லுமாம்; ஏகாரம் : பிரிநிலை என்பர் நச்சினார்க்கினியர். நீம் என்பது திசைச்சொல் என்பதே பொருந்தும். மற்றும் அவர் இளையவண் மகிழ்வ கூறி (சீவக. 2101) என்னுஞ் செய்யுளானும் வீட்டகந்தோறும் (சீவக. 2610) என்னுஞ் செய்யுளானும், அன்றைப் பகலே வருவேன் என்றல் பொருந்தாமை யுணர்க என்றுகூறி, ஒருநாளிலிருந்து மற்றைநாளே போந்து அடியேன் அடைவேன் என்றும் பொருள் கூறுவர். ( 44 )
1933. வேற்றைவந் தன்ன நுதிவெம்பாற் கான முன்னி
நூற்றைவ ரோடு நடந்தாணுதி வல்வின் மைந்தன்
காற்றிற் பரிக்குங் கலிமான் மிசைக் காவ லோம்பி
யாற்றற் கமைந்த படையோடதர் முன்னி னானே.
பொருள் : வல்வில் மைந்தன் காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி - வலிய வில்லேந்திய சீவகன் காற்றைப் போலச் செல்லும் குதிரைகளின் மேற் படைகளைக் காவலிட; வேல் தைவந்தன்ன நுதி வெம்பரல் கானம் முன்னி - வேலைத் தொட்டாற்போன்ற நுனிகளையுடைய கொடிய பரல்களையுடைய காட்டின் வழியே செல்ல எண்ணி; நூற்றைவரோடு நுதி நடந்தாள் - நூற்றைந்து மகளிருடனே (மகன் செல்வதற்கு) முன்னே சென்றாள்; ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினான் - (பிறகு) ஆற்றலையுடைய படைகளுடன் தான் செல்லவேண்டிய வழியிலே செல்லத் தொடங்கினான்.
விளக்கம் : நுதி - முன்பு என்றும் பொருள்படும். மதியேர் நுதலார் நுதிக் கோலஞ் செய்து (சிற். 360) என்றாற்போல. ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு. பகைவர்க்கஞ்சி அவன் படையைக் காவலிட்டபின்பு, விசயைதான் தனக்குக் காவலாகத் தன்னைப்போல நோன்பு கொண்ட மகளிராய்ப் பள்ளியிலுறைவார் நூற்றைவரோடு போனாள். தவஞ் செய்வார் தனியே போதல் மரபன்றென்று. இனி, வல்வின் மைந்தன் முன்பு படையோடே மான் மிசையிலே ஏறி அதரை முன்னினவன் தேவிக்குக் காவல் ஓம்ப, அவள் நோன்பு கொண்ட மகளிர் நூற்றைவரோடே நடந்தாள் என்றுமாம். இனி நடந்தான் என்று பாடம் ஓதி, முன்பு படையோடே அதர் முன்னினவன், மாமிசையிலுள்ளாரைத் தேவிக்குக் காவலாக ஓம்பித் தான் நூற்றைவரோடும் போனான் என்பாருமுளர். ( 45 )
1934. மன்றற் கிடனா மணிமால்வரை மார்பன் வான்க
ணின்றெத் திசையு மருவிப்புன னீத்த மோவாக்
குன்றுங் குளிர்நீர்த் தடஞ்சூழ்ந்தன கோல யாறுஞ்
சென்றப் பழனப் படப்பைப்புன னாடு சேர்ந்தான்.
பொருள் : மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் - மணத்திற்கு இடனாகிய மணிகளையுடைய பெரிய மலைபோலும் மார்பனாகிய சீவகன்; வான் கண் நின்று - வான் தன்னிடத்தே மாறாது பெய்தலின்; எத் திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவா - எத் திசையினும் பொருந்தி நீர்ப்பெருக்குக் குறையாத; குன்றும் - குன்றையும்; குளிர் நீர்த்தடம் சூழ்ந்தன கோலயாறும் - குளிர்ந்த நீரையுடைய குளங்களைச் சூழக் கொண்ட அழகிய யாற்றையும்; சென்று - கடந்து; அப் பழனம் படப்பை புனல்நாடு சேர்ந்தான் - அவ் வயல்களையும் தோட்டங்களையும் நிரையும் உடைய அந்த ஏமாங்கதத்தைச் சேர்ந்தான்.
விளக்கம் : மன்றல் - திருமணம். இடனாய் என்பது ஈறுகெட்டு நின்றது. வான்கண் நின்று என்புழிச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. வான் : ஆகுபெயர். கண் - இடம், சூழ்ந்தன : முற்றெச்சம். படப்பை - தோட்டம். ( 46 )
வேறு
1935. காவின்மேற் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியு ளினமல ருயிர்த்த வாசமும்
பூவிரி கோதையர் புனைந்த சாந்தமு
மேவலாற் கெதிரெதிர் விருந்து செய்தவே.
பொருள் : காவின்மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - காவிலுள்ள மணமலர்கள் நெகிழ்ந்த மணமும்; வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும் - பொய்கையில் திரளாகிய மலர்கள் விடுத்த மணமும்; பூவிரி கோதையர் புனைந்த சாந்தமும் - மலர் நிறைந்த மாலைமகளிர் அணிந்த சந்தன மணமும்; ஏவலாற்கு எதிர் எதிர் விருந்து செய்த - வில்வல்லானுக்கு எதிரெதிராக விருந்தூட்டின.
விளக்கம் : தெகிழ்ந்த - நெகிழ்ந்த. சாந்தம் - சந்தனங் குங்குமம் முதலியன. ஏ - எய்தற்றொழில். ( 47 )
1936. கரும்பின்மேற் றொடுத்ததேன் கலிகொ டாமரைச்
சுரும்பின்வாய்த் துளித்தலிற் றுவைத்த வண்டொடு
திருந்தியாழ் முரல்வதோர் தெய்வப் பூம்பொழிற்
பொருந்தினான் புனைமணிப் பொன்செய் பூணினான்.
பொருள் : புனை மணிப் பொன் செய் பூணினான் - புனைவுற்ற மணிகள் இழைத்த பொன்னணிகலமுடையான்; கரும்பின் மேல் தொடுத்த தேன் கலிகொள் தாமரைச் சுரும்பின் வாய்த் துளித்தலின் - கரும்பினிடத்து வண்டுகளால் வைக்கப்பட்ட தேன், ஆரவாரமுடைய, தாமரை மலரிலுள்ள சுரும்பின் வாயிலே துளித்தலின்; துவைத்த வண்டொடு திருந்தியாழ் முரல்வது - ஒலித்த வண்டுகளோடு சுரும்புகள் யாழ்போல முரலுவதாகிய; ஓர் தெய்வப் பூம்பொழில் பொருந்தினான் - ஒரு தெய்வத்தன்மை பொருந்திய மலர்ப்பொழிலிலே தங்கினான்.
விளக்கம் : கலி - இசை. இனி தழைத்தலையுடைய தாமரையுமாம். சுரும்பு - வண்டு; யாழ்போல முரல்வது என்க. பூணினான் : சீவகன். ( 48 )
1937. பொறைவிலங் குயிர்த்தன பொன்செய் மாமணிச்
செறிகழ லிளைஞருஞ் செல்ல னீங்கினார்
நறைவிரி கோதையர் நாம வேலினாற்
கறுசுவை நால்வகை யமுத மாக்கினார்.
பொருள் : விலங்கு பொறை உயிர்த்தன - குதிரை முதலியன சுமத்தலைவிட்டு இலைப்பாறின; பொன்செய் மாமணிச் செறிகழல் இளைஞரும் செல்லல் நீங்கினார் - பொன்னாற்செய்து மணிகளிழைத்த வீரக்கழலணிந்த வீரரும் வழிநடை வருத்தம் நீங்கினார்; நாம வேலினாற்கு - அச்சந்தரும் வேலேந்திய சீவகனுக்கு; நறைவிரி கோதையர் அறுசுவை நால்வகை அமுதம் ஆக்கினார் - தேன் பொருந்திய கோதையையுடைய மகளிர் அறு சுவையுடைய நால்வகை யுண்டியைச் சமைத்தனர்.
விளக்கம் : விலங்கு - குதிரை முதலியன. விலங்கு பொறையுயிர்த்தன என மாறுக. செல்லல் - துன்பம்; ஈண்டு வழி நடந்த வருத்தம். நாமம் - அச்சம். அறுசுவை - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. நால்வகை அமுதம் - உண்பன, தின்பன. பருகுவன, நக்குவன என்பன. ( 49 )
1938. கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும்
புட்டில்வாய்ச் செறித்தனர் புரவிக் கல்லவு
நெட்டிருங் கரும்பொடு செந்நென் மேய்ந்துநீர்
பட்டன வளநிழற் பரிவு தீர்ந்தவே.
பொருள் : கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும் புட்டில் - கருப்புக் கட்டியுடனே கலந்த அரிசியும் வெந்த கொள்ளும் கலந்த புட்டிலை; புரவிக்கு வாய்ச் செறித்தனர் - குதிரைகட்கு வாயிலே செறித்தனர்; அல்லவும் - மற்றைய எருது முதலியனவும்; நெட்டிருங் கரும்பொடு செந் நெல் மேய்ந்து - நீண்ட பெரிய கரும்பு வயல்களிலும் செந்நெல் வயல்களிலும் மேய்ந்து; நீர் பட்டன - நீரிலே ஆடினவாய்; வளநிழல் பரிவு தீர்ந்த - நல்ல நிழலிலே கிடந்து துன்பம் நீங்கின.
விளக்கம் : கட்டி - கருப்புக்கட்டி. புழுக்குங் காணம் - வேகவைக்கும் கொள். புட்டில் - குதிரைக்கு உணவிட்டுக் கட்டும் மொக்கணி. அல்லவும் - ஏனைய எருது முதலியன. ( 50 )
1939. குழிமதுக் குவளையங் கண்ணி வார்குழற்
பிழிமதுக் கோதையார் பேண வின்னமு
தழிமதக் களிறனா னயின்ற பின்னரே
கழிமலர் விழித்தகண் கமலம் பட்டவே.
பொருள் : குழிமதுக் குவளை அம் கண்ணி - குழியிலுள்ள, தேன் பொருந்திய குவளை மலர்க் கண்ணியையும்; வார்குழல் - நீண்ட குழலையும்; பிழிமதுக் கோதையர் - பிழியத்தக்க தேனையுடைய கோதையையும் உடைய மகளிர்; பேண - ஓம்ப; அழிமதக் களிறனான் இன்னமுது அயின்ற பின்னர் - மிகுந்த மதமுடைய களிறுபோன்ற சீவகன் இனிய உணவை உண்ட பிறகு; கழிமலர் கண்விழித்த - கழியிலுள்ள மலர்கள் கண் விழித்தன; கமலம் பட்ட - தாமரைகள் துயின்றன.
விளக்கம் : இன்னமுது - உணவு. களிறனான் : சீவகன். அயின்ற பின்னர் கழிமலர் விழித்த கண் கமலம் பட்டவே, என்றது, அமண் சமயத்தினர் இரவின்கண் உண்ணாமையை விளக்கி நின்றது. கழிமலர் கண்விழித்த, கமலம் கண் பட்ட என ஒட்டுக. இவை ஞாயிறு பட்டது என்னும் குறிப்புடையன. ( 51 )
1940. எரிமணி யிமைத்தன வெழுந்த தீம்புகை
புரிநரம் பிரங்கின புகன்ற தீங்குழ
றிருமணி முழவமுஞ் செம்பொற் பாண்டிலு
மருமணி யின்குர லரவஞ் செய்தவே.
பொருள் : எரிமணி இமைத்தன - (அந்த அந்திநேரத்தில்) எரிபோன்ற மணிகள் ஒளிர்ந்தன; தீ புகை எழுந்த - இனிய அகிற்புகை எழுந்தன; புரிநரம்பு இரங்கின - முறுக்குற்ற நரம்புகள் ஒலித்தன; தீ குழல் புகன்ற - இனிய வேய்ங்குழல் இசைத்தன; திருமணி முழவமும் - அழகிய முழவமும்; செம்பொன் பாண்டிலும் - வெண்கலத் தாளமும்; அருமணியின் குரல் அரவம் செய்த - குதிரை மணியின் குரலுடன் ஒலித்தன.
விளக்கம் : சீவகன் தங்கியிருந்த பொழிலிற் குதிரைகளும் இருந்தன ஆதலால் குதிரைகட்குக் கட்டிய மணி கொள்ளப்பட்டது. ( 52 )
1941. தெளித்தவின் முறுவலம் பவளஞ் செற்றவாய்க்
களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇ
விளித்தவின் னமிர்துறழ் கீதம் வேனலா
னளித்தபின் னமளியஞ் சேக்கை யெய்தினான்.
பொருள் : தெளித்த இன்முறுவல் - விளங்கிய இனிய முறுவலையும்; பவளம் செற்ற வாய் - பவளத்தை வென்ற செவ்வாயினையும்; களிக் கயல் மழைக்கணார் - களிப்பையுடைய கயல் போலுங் குளிர்ந்த விழியையுடைய மகளிர்; காமம் காழ் கொளீஇ - காமத்தே உறுதிகொண்டு; விளித்த இன் அமிர்து உறழ் கீதம் - பாடிய இனிய அமுதத்தை வென்ற இசையை; வேனலான் அளித்தபின் - காமன்னைய சீவகன் பாராட்டிய பிறகு; அமளி அம் சேக்கை எய்தினான் - படுக்கையாகிய தங்குமிடத்தை அடைந்தான்.
விளக்கம் : காமங்காழ் கொளீஇ அமளியஞ் சேக்கை எய்தினான் எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர். ( 53 )
1942. தீங்கரும் பனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கெழிற் றோள்களு மிடைந்து வெம்முலை
பூங்குளிர் தாரொடு பொருது பொன்னுக
வீங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான்.
பொருள் : தீ கரும்பு அனுக்கிய - இனிய கரும்பினை வென்ற; திருந்து தோள்களும் - அழகிய (மகளிர்) தோள்களும்; வீங்கு எழில் தோள்களும் - பருத்த அழகிய (சீவகன்) தோள்களும்; மிடைந்து - பிணைதலாலே; வெம்முலை பூங்குளிர் தாரொடு பொருது பொன் உக - விருப்பூட்டும் முலைகள் தண்ணிய மலர்த்தாருடன் பொருது பூண்கள் சிந்தும்படி; ஈங்கனம் கனையிருள் எல்லை நீந்தினான் - இவ்வாறு பேரிருளின் எல்லையைச் சீவகன் கடந்தான்.
விளக்கம் : வியநெறியால் விடுத்தான் (சீவக. 1884) என்றலின், இவன் நுகர்தற்குரிய மகளிர் பலரும் வந்தாரென்று கொள்க. ( 54 )
1943. கனைகதிர்க் கடவுள் கண் விழித்த காலையே
நனைமலர்த் தாமரை நக்க வண்கையாற்
புனைகதிர் திருமுகங் கழுவிப் பூமழை
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான்.
பொருள் : கனை கதிர்க் கடவுள் கண் விழித்த காலை - மிகு கதிர்களையுடைய ஞாயிற்றால் உலகம் கண் விழித்தபோது; முருகவேளனான் - சீவகன்; நனை மலர்த் தாமரை நக்க வண்கையால் - தேனையுடைய தாமரை மலரை இகழ்ந்த வளவிய கையினால்; புனைகதிர்த் திருமுகம் கழுவி - ஒப்பனை செய்த கதிரனைய அழகிய முகத்தைக் கழுவி; முனைவனுக்குப் பூமழை இறைஞ்சினான் - இறைவனுக்குப் பூமழை பெய்து வணங்கினான்.
விளக்கம் : ஞாயிறு கண்விழித்த காலை என்றுங் கொள்க. நனை மலர் : முதற்கேற்ற அடை; பெய்து என வருவித்துப் பூமழை பெய்து எனக் கொள்க. முனைவனை வணங்கினான் எனக்கொண்டு இரண்டனுருபு மயக்கம் எனினும் ஆம். ( 55 )
1944. நாட்கடன் கழித்தபி னாம வேலினான்
வாட்கடி யெழினகர் வண்மை காணிய
தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார்
வேட்பதோர் வடிவொடு விரைவி னெய்தினான்.
பொருள் : நாமவேலினான் - சீவகன்; நாட்கடன் கழித்தபின் - காலைக்கடன்களை முடித்தபிறகு; வாள் கடி எழில் நகர் வண்மை காணிய - ஒளியின் மிகுதியையும் அழகையும் உடைய இராசமாபுரத்தின் வளங்காணும் பொருட்டு; தோள் பொலி மணிவளைத் தொய்யின் மாதரார் - தோளிலே அழகுசெயும் மணிகளிழைத்த வளைகளையும் மார்பிலே தொய்யிற் கோலத்தையும் உடைய மங்கையர்; வேட்பது ஓர் வடிவொடு - விரும்பத்தக்கதாகிய ஒரு வடிவத்துடன்; விரைவின் எய்தினான் - விரைந்து சென்றான்.
விளக்கம் : நாட்கடன்-விடியற்காலத்தே செய்தற்குரிய கடமைகள். வாட்படையினது காவலையும் அழகையும் உடைய நகருமாம். காணிய - காணுதற்கு, மணிவளை மாதரார், தொய்யின் மாதரார் எனத் தனித்தனி கூட்டுக. ( 56 )
1945. அலத்தகக் கொழுங்களி யிழுக்கி யஞ்சொலார்
புலத்தலிற் களைந்தபூ ணிடறிப் பொன்னிதழ்
நிலத்துகு மாலைகா றொடர்ந்து நீணகர்
செலக்குறை படாததோர் செல்வ மிக்கதே.
பொருள் : அலத்தகக் கொழுங்களி இழுக்கி - (சீவகன் கால்) இங்குலிகச் சேற்றிலே வழுக்கி; அம் சொலார் புலத்தலின் களைந்த பூண் இடறி - மகளிர் புலவியாற் களைந்தெறிந்த பூணிலே இடறி; பொன் இதழ் நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து - அழகிய இதழையுடைய நிலத்திலே சிந்திய மாலைகள் காலிலே சேரத் தொடரப்படுதலாலே; நீள்நகர் செலக் குறைபடாது ஓர் செல்வம் மிக்கது - அந்தப் பெருநகரம் செல்லத்தொலையாதிருப்பதாகிய ஒப்பற்ற செல்வத்திற் சிறந்திருந்தது.
விளக்கம் : அலத்தகக் கொழுங்களி - இங்குலிகமாகிய கொழுவிய குழம்பு. பூண் - அணிகலம். நீணகர் : வினைத்தொகை; இராசமாபுரம். ( 57 )
வேறு
1946. கத்தி கைக்கழு நீர்கமழ் கோதையர்
பத்தி யிற்படு சாந்தணி வெம்முலை
சித்தி யிற்படர் சிந்தையி னாரையு
மித்தி சைப்படர் வித்தி நீரவே.
பொருள் : கத்திகைக் கழுநீர் கமழ் கோதையர் - கத்திகையாகத் தொடுத்த கழுநீர் மலர்மாலையராகிய மங்கையரின்; பத்தியிற்படு சாந்து அணி வெம்முலை - ஒழுங்காகச் சாந்தணிந்த விருப்பூட்டும முலை; சித்தியிற் படர் சிந்தையினாரையும் - சித்தியிலே செல்லும் சிந்தையை யுடையவர்களையும்; இத் திசைப் படர்வித்திடு நீர - இல்லறத்திலே செலுத்திவிடும் தன்மையை உடையவாயிருக்கும்.
விளக்கம் : கத்திகை - மாலை தொடுக்கும் வகையில் ஒன்று; குருக்கத்தியும் ஆம். வஞ்சி - ஒருவகைக் கொடி. நுசுப்பினார் - இடையினையுடைய மகளிர். பஞ்சி - அலத்தகம். பாடகம் - ஒருகாலணி. இஞ்சி - மதில். ( 58 )
1947. வஞ்சி வாட்டிய வாண்மி னுசுப்பினார்
பஞ்சி யூட்டிய பாடகச் சீறடி
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாமலா
லிஞ்சி வட்ட மிடம்பிற் தில்லையே
பொருள் : வஞ்சி வாட்டிய வாள்மின் நுசுப்பினார் - வஞ்சிக் கொடியை (மென்மையால்) வருத்திய ஒளிபொருந்திய மின்னிடையார்; பஞ்சி ஊட்டிய பாடகச் சீறடி - செம்பஞ்சியை ஊட்டிய பாடகம் அணிந்த சிற்றடியை; குஞ்சி ஊட்டிய மைந்தர் குழாம் அலால் - குஞ்சியிலே சூட்டிய மைந்தரின் திரள் அல்லது; இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லை - வட்டமாகிய மதிலின் இடம் எல்லாம் வேறு திரள் இல்லை. ( 59 )
1948. மின்னி னீள்கடம் பின்னெடு வேள்கொலோ
மன்னு மைங்கணை வார்சிலை மைந்தனோ
வென்ன னோவறி யோமுரை யீரெனாப்
பொன்னங் கொம்பனை யார்புலம் பெய்தினார்.
பொருள் : மின்னின் நீள் கடம்பின் நெடுவேள் கொலோ? - மேனியின் ஒளியாலே நீண்ட கடப்பந்தாரானாகிய முருகவேளோ?; மன்னும் ஐங்கணை வார்சிலை மைந்தனோ? - பொருநதிய ஐங்கணையையும் நீண்ட கருப்பு வில்லையும் உடைய காமவேளோ?; என்னனோ? - யாரோ?; அறியோம், உரையீர் எனா - அறிகிலோம், நீர் அறிந்தால் உரைப்பீராக என்று; பொன் அம்கொம்பு அனையார் புலம்பு எய்தினார் - அழகிய பொற்கொடி போன்ற மகளிர் வருந்தினர்.
விளக்கம் : நெடுவேள் - முருகன். மைந்தன் : காமன். என்னனோ - யாவனோ. புலம்பு - வருத்தம். ( 60 )
1949. விண்ண கத்திளை யானன்ன மெய்ப்பொறி
பண்ண லைக்கழி மீன்கவர் புள்ளென
வண்ண வார்குழ லேழையர் வாணெடுங்
கண்ணெ லாங்கவர்ந் துண்டிடு கின்றவே.
பொருள் : விண் அகத்து இளையான் அன்ன - வானகத்திலுள்ள முருகவேளைப் போன்ற; மெய்ப் பொறி அண்ணலை - உத்தம இலக்கணங்களையுடைய சீவகனை; கழிமீன் கவர் புள் என - கழியிலுள்ள மீனைக் கவர நோக்கும் மீன்கொத்திப் பறவை போல; வண்ணவார் குழல் ஏழையர் - அழகிய நீண்ட குழலையுடைய மங்கையரின்; வாள் நெடுங் கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்ற - வாளனைய நீண்ட கண்களெல்லாம் கவர்ந்து உண்கின்றன ஆயின.
விளக்கம் : இது தொழில் உவமம். இளையான் : முருகன். மெய்ப்பொறி : உடலின்கண் உத்தம விலக்கணங்கள். அண்ணலை : சீவகனை. ஏழையர் - மகளிர். உண்டிடுகின்ற: ஒருசொல். ( 61 )
வேறு
1950. புலாத்தலைத் திகழும் வைவேற்
பூங்கழற் காலி னானை
நிலாத்தலைத் திகழும் பைம்பூ
ணிழன்மணி வடத்தோ டேந்திக்
குலாய்த்தலைக் கிடந்து மின்னுங்
குவிமுலை பாய வெய்தாய்க்
கலாய்த்தொலைப் பருகு வார்போற்
கன்னியர் துவன்றி னாரே.
பொருள் : புலா தலைத் திகழும் வைவேல் பூங்கழல் காலினானை - புலால் நாற்றம் தலையிலே பொருந்திய கூரிய வேலையும் பூங்கழலணிந்த காலையும் உடைய சீவகனை; நிலாத்தலைத் திகழும் பைம்பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி - நிலவு தன்னிடத்தே விளங்கும் பசிய பூணை ஒளிவிடும் மணி வடத்தோடே சுமந்து; குலாய்த்தலைக் கிடந்து மின்னும் - அவை குலவித் தலையிலே கிடந்து மின்னுகின்ற; குவிமுலை பாய - குவிந்த முலைகள் பாய; வெய்தாய்க் கலாய்த் தொலைப் பருகுவார்போல கலவியிலே வெய்தாய்ப் புலந்து அப்புலவி தீர்ந்து நுகர்வாரைப்போல; கன்னியர் துவன்றினார் - கன்னிப் பெண்கள் நெருங்கினர்.
விளக்கம் : ஏந்திக் குவிந்த முலை எனக் கூடடுவர் நச்சினார்க்கினியர். புலா - புலானாற்றம் : ஆகுபெயர். வை - கூர்மை. காலினானை: சீவகனை. ஒலை - ஒல்லை; விரைந்து . துவன்றினார் - நெருங்கினார். ( 62 )
1951. வேனெடுங் கண்க ளம்பா
விற்படை சாற்றி யெங்குந்
தேனெடுங் கோதை நல்லார்
மைந்தனைத் தெருவி லெய்ய
மானெடு மழைக்க ணோக்கி
வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர்
பாவைபந் தாடு கின்றாள்.
பொருள் : தேன் நெடுங் கோதை நல்லார் - தேனையுடைய நீண்ட கோதையுடைய மகளிர்; வேல் நெடுங் கண்கள் அம்புஆ - வேலனைய நீண்ட கண் அம்பாக; வில் படை சாற்றி - வில்லாகிய படையை அமைத்து; மைந்தனைத் தெருவில் எங்கும் எய்ய - சீவகனைத் தெருவிலே எங்கும் நின்று எய்துகொண்டிருக்க; மான் நெடு மழைக்கண் நோக்கி - மானின் நீண்ட குளிர்ந்த கண்போலும் கண்களையுடையாள்; வானவர் மகளும் ஒப்பாள் - விண்ணவர் மகளைப் போன்றவள்; பால் நெடுந் தீ சொலாள் ஓர் பாவை - பாலனைய பெருமைமிக்க இனிய சொல்லாளாகிய ஒருபாவை; பந்து ஆடுகின்றாள் - பந்தாடிக்கொண்டிருக்கிறாள்.
விளக்கம் : அம்பா - அம்பாக. சாற்றி - அமைத்து. மைந்தனை : சீவகனை. மானெடுங்கண், மழைக்கண் எனத் தனித்தனி கூட்டுக. நோக்கி - நோக்கினையுடையாள். பாவை - ஈண்டு விமலை. ( 63 )
வேறு
1952. குழன்மலிந்த கோதைமாலை பொங்கவெங் கதிர்ம்முலை
நிழன்மலிந்த நோவடந்நி ழற்படப்ப டைத்தர
வெழின்மணிக்கு ழைவில்வீச வின்பொனோலை மின்செய
வழன்மணிக்க லாபமஞ்சி லம்பொடார்ப்ப வாடுமே.
பொருள் : குழல் மலிந்த கோதை மாலை பொங்க - குழலில் மிகுந்த கோதையும் மாலையும் பொங்க; வெங்கதிர்முலை - விருப்பமூட்டும் கதிர்த்த முலை மிசை; நிழல் மலிந்த நேர்வடம் நிழல் படப் புடைத்தர - ஒளி நிறைந்த அழகிய முத்துவடம் ஒளியுறப்புடைக்க; எழில் மணிக் குழை வில்வீச - அழகிய மணிகளிழைத்த குழை ஒளிவீச; இன்பொன் ஓலை மின் செய - இனிய பொன் ஓலை ஒளியை உண்டாக்க; அழல் மணிக்கலாபம் அம்சிலம்பொடு ஆர்ப்ப ஆடும் - நெருப்பனைய நிறமுடைய மணிகளால் ஆகிய கலாபம் அழகிய சிலம்புடன் ஆரவாரிக்கப் பந்தாடுகின்றாள். ( 64 )
1953. அங்கையந்த லத்தகத்த வைந்துபந்த மர்ந்தவை
மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்த லின்றியே
செங்கயற்கண் புருவந்தம்மு ளுருவஞ்செய்யத் திரியுமே.
பொருள் : அங்கை அம் தலத்தகத்த ஐந்து பந்து அமர்ந்தவை - அகங்கையாகிய அழகிய இடத்தில் ஐந்து பந்துகள் அமர்ந்தவை; மங்கை ஆட - மங்கை ஆடுதலாலே; மாலைசூழும் வண்டுபோல வந்து - மாலையைச் சூழும் வண்டுபோலக் கீழே வந்து; உடன் பொங்கி மீது எழுந்து போய் - உடனே பொங்கி மேலேழுந்து சென்று; பிறழ்ந்து பாய்தல் இன்றி - முறை குலைந்து வீழ்தலின்றி; செங்கயற்கண் புருவம் தம்முள் உருவம் செய்யத் திரியும் - செவ்விய கயற்கண்ணும் புருவமும் கூடத்திரிந்து அழகு செய்யுமாறு திரியும்.
விளக்கம் : வண்டு போலப் பொங்கி மீதெழுந்து போய் உடனே வந்து என மாற்றியுரைப்பர் நச்சினார்க்கினியர். ( 65 )
1954. மாலையுட்க ரந்தபந்து வந்துகைத்த லத்தவா
மேலநாறி ருங்குழற்பு றத்தவாண்மு கத்தவா
நூலினோநு சுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவா
மேலெழுந்த மீநிலத்த விரலகைய வாகுமே.
பொருள் : மாலையுள் கரந்த பந்து வந்து கைத்தலத்த ஆம் - மாலையிலே மறைந்த பந்து வந்து கையிடத்திலாகும்; ஏலம் நாறு இருங்குழல் புறத்த - மயிர்ச் சாந்து மணக்கும் கருங்குழலின் புறத்தனவாகிய பந்துகள்; வாள் முகத்த ஆம் - ஒளி பொருந்திய முகத்தனவாக ஆகும்; நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ள ஆம் - நூலைப் போன்ற இடைவருந்தத் தலையிலே சென்ற பந்து மார்பின் மாலையிலே திரும்ப வரும் ; மேலெழுந்த மீநிலத்த விரல கைய ஆகும் - மாலையின் மேலேபோய் உயர்ந்த பந்து மீண்டும் விரலிடத்தன, கையிடத்தன ஆகும்.
விளக்கம் : கரந்த - மறைந்த. ஏலம் - மயிர்ச்சாந்து. இருங்குழல் - கரிய கூந்தல். நூலின்நேர் என்புழி நேர் உவமச்சொல். விரல - விரலிடத்துளளன, கைய - கையிடத்துள்ளன. ( 66 )
1955. கொண்டுநீங்கல் கோதைவேய்தல்
குங்குமம்ம ணிந்துரா
யெண்டிசையு மேணியேற்றி
லங்கநிற்றல் பத்தியின்
மணிடி லம்வ ரப்புடைத்தன்
மயிலிற்பொங்கி யின்னணம்
வண்டுந்தேனும் பாடமாதர்
பந்துமைந்துற் றாடுமே.
பொருள் : மாதர் - அப்பெண்; வண்டும் தேனும் பாட - வண்டும் தேனும் தேனை நுகராமல் நின்றுபாட; மயிலின் பொங்கி - மயில் போலப் பொங்கி; எண்திசையும் கொண்டு நீங்கல் - எட்டுத்திசையினும் பந்தைக் கொண்டு உலாவுதல்; கோதை வேய்தல் - இடையிலே மாலை அணிதல்; குங்குமம் அணிந்து உராய் - குங்குமம் அணிந்து பரந்து; ஏணி ஏற்று இலங்க நிற்றல் - படிமுறையாக அடித்தல்; பத்தியின் மண்டிலம் வரப் புடைத்தல் - பத்தியுடன் தன்னைச் சூழ்ந்து வர அடித்தல்; இன்னணம் மைந்துற்றுப் பந்து ஆடும் - இந் நிலைமைகளிலே வலியுற்று இங்ஙனம் பந்தாடும்.
விளக்கம் : அடித்த பந்து வந்து வீழுதற்குமுன் கோதை வேய்தலும் குங்குமம் அணிதலும் செய்து என்பதாம். ஏணியேற்று - படிப்படியாக உயரும்படி பந்தினை அடித்தல். தேனுகர்தற்குச் செவ்விபெறாமல் வண்டுந்தேனும் பாட என்க. பத்தியின் மண்டிலம் வரப்புடைத்தல் என்பது, ஒழுங்காக வட்டமாகத் தன்னைச்சுற்றி வரும்படி பந்துகளையடித்தல். மைந்து - வலிமை. மேற்கூறியவாறு வலிமையுடன் பந்ததாடினாள் என்க. ( 67 )
1956. பந்துமைந்துற் றாடுவாள்ப ணைம்முலையிற் குங்குமஞ்
சுந்தரப்பொ டிதெளித்த செம்பொற்சுண்ணம் வாணுதற்
றந்துசுட்டி யிட்டசாந்தம் வேரின்வார்ந்தி டைம்முலை
யிந்திரதி ருவினெக்கு ருகியென்ன வீழ்ந்தவே.
பொருள் : மைந்து உற்றுப் பந்தாடுவாள் - இங்ங்னம் வலிமையுற்றுப் பந்தாடுகின்றவளுடைய; வாள் நுதல் தந்து சுட்டி இட்ட சாந்தம் - ஒள்ளிய நெற்றியிலே கொண்டுவந்து சுட்டியாக இட்ட சாந்தும்; பணை முலையின் குங்குமம் - பருத்த முலையில் இட்ட குங்குமமும்; சுந்தரப்பொடி - சிந்துரப் பொடியும்; தெளித்த செம்பொன் சுண்ணம் - ஓட வைத்த பொற் சுண்ணமும்; வேரின் வார்ந்து - வியர்வையினாற் கரைந்தெர்ழுகி; முலையிடை இந்திர திருவில் நெக்கு உருகி என்ன - முலையிடையிலே இந்திர திருவில் நெகிழ்ந்துருகி ஒழுகினாற்போல; வீழ்ந்த - வீழ்ந்தன.
விளக்கம் : மைந்து - வலிமை. ஆடுவாள் : வினையாலணையும் பெயர். வேரின் - வியர்வையினான். இந்திரதிருவில் - வானவில். பன்னிறமுடைமையால் இஃதுவமமாயிற்று. ( 68 )
1957. நன்மணிச்சி லம்பினோடு
கிண்கிணிந்ந கந்நகும்
மின்மலர்ந்த முல்லைமாலை
நக்கிமிக்கி றந்தெழுந்து
பொன்மலர்ந்த கோதைபந்து
பொங்கியொன்று போந்துபாய்ந்து
மின்மலர்ந்த வேலினான்முன்
வீதிபுக்கு வீழ்ந்ததே.
பொருள் : நன்மணிச் சிலம்பினோடு கிண்கிணி நக - அழகிய மணிச் சிலம்பும் கிண்கிணியும் விளங்க; நகும் மின் - நகுகின்ற மின் போன்ற; பொன் மலர்ந்த கோதை பந்து ஒன்று; பொன்னணியுடன் மலர்ந்த கோதையாளின் பந்து ஒன்று; மலர்ந்த முல்லை மாலை நக்கி - மலர்ந்த முல்லை மாலையைத் தொட்டு; மிக்கு இறந்தெழுந்து - தன் வரையைக் கடந்து எழுந்து; பொங்கிப் போந்து பாய்ந்து - பொங்கி வந்து பாய்ந்து; வீதி புக்கு - தெரு விற்புகுந்து; மின் மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது - ஒளி மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது.
விளக்கம் : நக - விளங்க. கிண்கிணி நகநகும் எனற்பாலது வண்ணம் நோக்கி நகரம் இரட்டித்துக் கிண்கிணிந் நகந்நகும் என நின்றது. மிக்கிறந்து தன் எல்லையைக் கடந்து சென்று. வேலினான்: சீவகன். ( 69 )
1958. வீழ்ந்தபந்தின் மேல்விரைந்து
மின்னினுண் ணுசுப்பினாள்
சூழ்ந்தகாசு தோன்றவந்து
கின்னெகிழ்ந்து பூங்குழ
றாழ்ந்துகோதை பொங்கிவீழ்ந்து
வெம்முலைக டைவரப்
போழ்ந்தகன்ற கண்ணிவந்து
பூங்கொடியி னோக்கினாள்.
பொருள் : மின்னின் நுண் நுசுப்பினாள் - மின் போன்ற நுண்ணிடையாளாகிய; போழ்ந்து அகன்ற கண்ணி - ஆவியைப் பிளந்து பரவிய கண்ணினாள்; அம்துகில் நெகிழ்ந்து சூழ்ந்து காசு தோன்ற - அழகிய ஆடை நெகிழ்தலின் இடையிலணிந்த மேகலையின் காசுகள் தெரிய; பூங்குழல் தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து - அழகிய குழல் தாழ்தலின் அதிலுள்ள கோதை பொங்கி விழுந்து; வெம் முலைகள் தைவர - வெவ்விய முலைகளைத் தடவிநிற்க; வீழ்ந்த பந்தின்மேல் விரைந்து - விழுந்த பந்தின் மேல் விரைந்து வந்து; பூங்கொடியின் நோக்கினாள் - மலர்க்கொடிபோல நோக்கினாள்.
விளக்கம் : நுசுப்பினாள் ஆகிய கண்ணி என்க. காசு : ஆகுபெயர். துகின்னெகிழ்ந்து - னகரம் வண்ணத்தான் விரிந்தது. பூங்கொடி போல என்க. ( 70 )
வேறு
1959. மந்தார மாலை மலர்வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன்
கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப்
பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள்
செந்தாம ரைமேற் றிருவின்னுரு வெய்தி நின்றாள்.
பொருள் : மந்தார மாலை மலர் வேயந்து - மந்தார மாலையின் மலரை மொய்த்து; தீ தேன் மகிழ்ந்து கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாட - இனிய தேனைப் பருகி மகிழ்ந்து, காந்தாரம் என்னும் பண்ணை அமைத்துக் களிப்பையுடைய வண்டுமுரன்று பாடும்படி; பந்து ஆர்வம் செய்து குவளைக் கண் பரப்பி நின்றாள் - பந்தின்மேல் ஆர்வங் கொண்டு குவளை மலரனைய கண்களை நாற்றிசையிலும் ஓடவிட்டு நின்றவள்; செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள் - செந்தாமரை மலர்மேல் உள்ள திருமகளின் வடிவத்தைக் கொண்டு நின்றாள்.
விளக்கம் : இமையாது பந்தெங்கே என்று நோந்கலின், திருமகளைப் போன்றிருந்த அவள் இமைத்தற் குறை நீங்கித் திருமகளின் உருவத்தையே பெற்றவள் ஆனாள் என்க. நச்சினார்க்கினியர், பந்திலே ஆர்வஞ் செய்து அவனைக் காண்டலின் என இச் செய்யுளிலேயே சீவகனைக் கண்டதாக அமைப்பர். அதனாற் போதிய பயனின்று. ( 71 )
1960. நீர்தங்கு திங்கண் மணிநீணிலந் தன்னு ளோங்கிச்
சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் டுவலை மாந்திக்
கார்தங்கி நின்ற கொடிகாளையைக் காண்ட லோடு
பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே.
பொருள் : நீர் தங்கு திங்கள் மணிநீள் நிலம் தன்னுள் ஓங்கி - நீர் தங்கிய சந்திர காந்தக் கல்லாகிய நிலத்திலே வளர்ந்து; சீர் தங்கு கங்கைத் திருநீர்த் தண் துவலைமாந்தி - சிறப்புற்ற அழகிய கங்கை நீரின் குளிர்ந்த நீர்த் துளியைப் பருகி; கார்தங்கி நின்ற கொடி - பசுமை தங்கி நின்ற கொடி போல்வாள்; காளையைக் காண்டலோடு - (பந்தை நோக்குவாள்) சீவகனைக் கண்ட அளவிலே; பீர்தங்கிப் பெய்யாமலரின் பிறிது ஆயினாள் - பசலை பூத்துப பழம் பூப்போல வேறாயினாள்.
விளக்கம் : திங்கள்மணி - சந்திரகாந்தக்கல். திருநீர் - அழகியநீர். துவலை - துளி. கார் - பசுமை. கொடி : விமலை. காளையை : சீவகனை. பீர் - பசலை. பெய்யா மலர் - பழம்பூ. ( 72 )
1961. பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணுந்
திண்பா னிறையுந் திருமாமையுஞ் சோந்த சாயல்
கண்பாற் கவினும் வளையுங்கவர்ந்த திட்ட கள்வன்
மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்த னென்றாள்.
பொருள் : பெண்பாலவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாணும் - பெண்களுக்குப் பூணாகி நீங்காத நாணும்; திண்பால் நிறையும் - திண்ணிய நிறையும்; திரு மாமையும் - அழகிய மாமையும்; சேர்ந்த சாயல் - கூடிய சாயலையுடையாள்; கண்பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் - தன் கண்ணாலே என் அழகையும் வளையையும் கவர்ந்த கள்வன்; மண்பால் இழிந்த மலர் ஐங்கணை மைந்தன் என்றாள் - (வடிவுக்கொண்டு) நிலவுலகிலே வந்த, மலராகிய ஐங்கணையுடைய காமன் என்று கருதினாள்,
விளக்கம் : சாயல் : பண்பாகுபெயர். நாணமே பெண்மைக்குப் பேரழகு தருவதாகலின், பெண்பாலவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாண் என்றார். நிறை - நெஞ்சினை நிறுத்தும் தன்மை. செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான என்றார் தொல்காப்பியனாரும் (தொல். 1115) நாணும், நிறையும், மாமையும், சாயலும், கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். ( 73 )
1962. என்றா ணினைந்தா ளிதுபோலுமிவ் வேட்கை வண்ணஞ்
சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவ
தன்றா யரிதா யகத்தேசுட் டுருக்கும் வெந்தீ
யொன்றே யுலகத் துறுநோய்மருந் தில்ல தென்றாள்.
பொருள் : என்றாள் நினைந்தாள் - என்று கருதிய அவள் இவ்வாறு நினைந்தாள்; இவ் வேட்கை வண்ணம் இது போலும் - காதல் வேட்கையின் தன்மை இவ்வாறு போலும்; சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கலாவது அன்றாய் - இறந்தே படினும் குரவர்க்குங் கூறத்தகுவது அன்றாய்; அரிதாய் - பொறுத்தற்கும் அரியதாய்; அகத்தே சுட்டு உருக்கும் வெந்தீ - உள்ளே நின்று சுட்டு உருக்குகின்ற கொடிய தீயாக இருந்தது; ஒன்றே உலகத்து உறுநோய் மருந்து இல்லது என்றாள் - இந்நோய் ஒன்றே உலகத்திலுள்ள நோய்களிலே வேறு மருந்தில்லாத நோயாயிருந்தது என்று கருதினாள்.
விளக்கம் : என்றாள் : வினையாலணையும் பெயர்; முற்றெச்சமாம். பண்டு கண்ட தின்மையால் இதுபோலும் இவ்வேட்கை வண்ணம் என்றாள். புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் இதுவோ அன்னை காமத்தியற்கை என வரும் மணிமேகலை கூற்றையும் நினைக (மணி. 5 : 89 - 90). சிறந்தார் என்பதற்கு நட்பிற் சிறந்தார் எனப் பொருள் கூறுவதே பொருத்தம்பகும். குரவரிடத்திற் காமத்தியற்கை கூறுவது முறையன்று ஆதலின். ( 74 )
1963. நிறையாது மில்லை நெருப்பிற்சுடுங் காம முண்டேற்
குறையா நிறையி னொருகுன்றியுங் காம மில்லை
பறையா யறையும் பசப்பென்று பகர்ந்து வாடி
யறைவாய்க் கடல்போ லகன்காம மலைப்ப நின்றாள்.
பொருள் : குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை - மகளிர்க்கு நிறை குறையாமல் நின்றால் ஒரு குன்றியளவும் காமம் இல்லை யாயிருந்தது; நெருப்பின் சுடும் காமம் உண்டேல் நிறை யாதும் இல்லை - நெருப்பெனச் சுடுகின்ற காமம் உண்டாயின் நிறை சிறிதும் இல்லையாயிற்று; பசப்புப் பறையாய் அறையும் என்று பகர்ந்து வாடி - (அதுவுமன்றி, அதனை மறைத்தாலும்) பசப்புப் பறைபோல் எடுத்துக் கூறுவதாயிருந்ததென்று கூறி வாடி; அறைவாய்க் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள் - ஒலியையுடைய கடல்போலப் பரவிய காமம் வருத்த நின்றாள்.
விளக்கம் : யாதும் - சிறிதும். காமமுண்டாயின் நிறையில்லை, நிறை உண்டாயின் காமமில்லை என்க. பறையா - பறையாக. பசப்புப் புறத்தார்க்கு உணர்த்தலின் பறை உவமமாயிற்று. அறை - முழக்கம். ( 75 )
1964. நெஞ்சங் கலங்கி நிறையாற்றுப் படுத்து நின்றா
ளஞ்செங் கழுநீ ரலாந்தம்மதி வாண்மு கத்தே
வஞ்சம் வழங்கா தவன்கண்களி னோக்க மாதோ
தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது காம வெந்தீ.
பொருள் : நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள் - (இவ்வாறு) உள்ளம் கலங்கி நிறையைப் போக்கி நின்றவளது; அம் செங்கழுநீர் அலர்ந்த மதிவாண் முகத்தே - அழகிய செங்கழுநீர் மலர் மலர்ந்த திங்களைப் போலும் ஒளியுறும் முகத்தே; வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க - பொய் கூறாதவன் தன் கண்ணாலே நோக்கினானாக; காம வெந்தீ - (அவள் எதிர் நோக்கினால் நிகழ்ந்த) கொடிய காமத்தீ; தஞ்சம் வழங்கித் தலைக்கொண்டது - எளிமையை அவனுக்கு முதலிற் கொடுத்துப் பின்பு தலைமட்டங் கொண்டது.
விளக்கம் : நின்றாள் : வினையாலணையும் பெயர்; வழங்காதவன் என்பதுமது. மாது, ஓ: இரண்டும் அசை. தஞ்சம் - எளிமை. (76)
1965. பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய
வேவுண்ட நெஞ்சிற் கிடுபுண்மருந் தென்கொ லென்னா
மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்
கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே.
பொருள் : பூ உண்ட கண்ணாள் புருவச் சிலை கோலி எய்ய பூப்போலும் கண்ணாள் புருவமாகிய வில்லை வளைத்துக் கண்ணாகிய அம்பாலே எய்தலின்; ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்கொல் என்னா - அந்த அம்பாலே தாக்கப்பெற்ற நெஞ்சிற் புண்ணுக்கு இடும் மருந்து யாது என்று ஆராய்ந்து மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி - (வேறு மருந்து இன்மையின்) மாவடுவைப் போன்ற கண்களையுடைய அம் மங்கையைத் திரும்பவும் நோக்கி; கோவுண்ட வேலான் - பகையரசரை உண்ட வேலான்; குழைந்து ஆற்றலன் ஆயினானே (அவள் காதற் குறிப்பு நோக்கினாலே) குழைவுற்று ஆற்றாமையுடையனாயினான்.
விளக்கம் : நச்சினார்க்கினியர் குழைந்து என்னுஞ் சொல்லை என்னா என்னுஞ் சொல்லின்பின் பெய்து, குழைந்து வேறு மருந்தின் மையின், இவளே மருந்தென்று அவளை மீண்டும் பார்த்து, ஆண்டுப் பெறற்குக் கூட்டியுரைக்குங் குறிப்புரையாகிய நோக்காலே உயிரைப் பெற்று ஆற்றாமையிலே நின்றான் என்பர். மற்றும், இதனால், முன்பு போலப் பொது நோக்குப் பெறின், இறந்துபடுதலுக்கு மருந்தன்றென்று கருதினானாம் என்பர். ( 77 )
1966. காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ்
வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான்
றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதை
பூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான்.
பொருள் : காமக் கொடு நோய் கனல்சூழ்ந்து - கொடிய காம நோயாகிய தீயினால் சூழப்பெற்று; உடம்பு என்னும் இவ் ஈமத்தினோடும் உடனே சுட - உடம்பு என்னும் விற்குடனே உயிரை முழுக்கச் சுடுதலின்; ஏகல் ஆற்றான் - போக வியலாதவனாய் ; தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல்தாதை - அகிற் புகையினால் நிறைந்த ஆடையணிந்த அல்குலாளின் தந்தையாகிய சாகரதத்தனின் ; பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான் - மலர் மாலைகள் மொய்த்திருந்த கடையின் மேல் வருத்தமுற்றிருந்தான்.
விளக்கம் : ஈமம் - விறகு. ஈமத்தினோடு உயிரைச் சுட என்க. அல்குல் : விமலை. புலம்புற்று - வருந்தி. ( 78 )
வேறு
1967. நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக்
காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென்
னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன்
மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே.
பொருள் : நாவி நோய் செய்த நறுங்குழலாள் - புழுகுக்கு வருத்தம் உண்டாக்கிய நறுங் கூந்தலாளை; நீலக் காவி நோய் செய்த கருங்கயல் கண் பூங்கொடி - கருங்குவளையை வருந்திய கரிய கயற்கண்களை யுடையதொரு பூங்கொடியை; என் ஆவி நோய் செய்த அணங்கு - என் உயிரை வருத்திய தெய்வமங்கை ; என்று அறியாதேன்-என்றுரைத்து அறிவுகலங்கினேனை; மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லை - நெருங்கி நோய் நீங்க என்னுற்றனை என்று வினவுவார் இல்லையே!
விளக்கம் : கயற்கண் : பெயர். கொடியைத் தெய்வமென்றே கருதி நறுங்குழலாளாக உணராமற் பின்னும் மயங்கினேனை என உரைப்பர் நச்சினார்க்கினியர். ( 79 )
1968. தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக்
கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்றவென்
னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்த
பெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ.
பொருள் : தெள் நீர்ப் பனிக் கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை - தெளிந்த நீரையுடைய தண்ணிய சிறிய குளத்தே தேனுற மலர்ந்த குவளை போலும்; கண் நீர்மை காட்டி - கண்ணின் தன்மையைக் கொண்டு ; ஒரு நோக்கினின் - அதன் ஒரு நோக்கினாலே ; கடல்போல் அகன்ற என் உள் நீர்மை எல்லாம் கவர்ந்த - கடல்போலப் பரந்த என் உள்ளிருக்கும் அறிவையெல்லாம் கவர்ந்த ; பெண் நீர்மை மேல்நாள் பிறந்தும் அறியுமோ? - இத்தகைய பெண்தன்மை முன்னாளிலும் பிறந்தறியுமோ?
விளக்கம் : இன்று என்னை வருத்துதற்கே புதியதாய்த்தோன்றியது என்று கருதினான். கயம் - குளம். மட்டு-தேன். கண்ணீர்மை-கண்ணின் தன்மை. ஒரு நோக்கினின் அவள் மனத்தினாய காமக் குறிப்பினை வெளிப்படுக்கின்ற நோக்கு. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு, நோய்நோக்கொன்று அந்நோய் மருந்துஎன்றார் திருவள்ளுவனாரும் (குறள். 1091) ( 80 )
1969. கருங்குழலுஞ் செவ்வாயுங் கண்மலருங் காது
மரும்பொழுகு பூண்முலையு மாருயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும்
பெருந்திருவி யார்மகள் கொல் பேரியா தாங்கொல்லோ.
பொருள் : கருங்குழலும் செவ்வாயும் கண்மலரும் காதும் அரும்பு ஒழுகு பூண் முலையும் - கரிய கூந்தலும் சிவந்த வாயும் மலர் போன்ற கண்ணும் காதும் அரும்பெனப் பொருந்திய பூண் அணிந்த முலையும்; ஆர் உயிர்க்கே கூற்றம் - என சிறந்த உயிருக்கே கூற்றமாகக் கொண்டு; விருந்தினராய் வந்தாரை வெற்றுடலாம் நோக்கு - புதியவராக வந்தவர்களை உயிர் நீங்கிய உடலாகும்படி நோக்குகின்ற ; பெருந்திருவி யார் மகள் கொல் ? - பெரிய செல்வி யாருடைய மகளோ?; பேர் யாது ஆம் கொல்லோ?- பெயர் யாதோ?
விளக்கம் : பெயர் கூற்றமோ? பெண்ணோ? என்று நினைத்தான். கருங்குழலுஞ் செவ்வாயும் என்புழிச் செய்யுளின்பம் உணர்க. இவற்றுள் ஒன்றே உயிர்க்குக் கூற்றம் ஆதல் அமையுமே உயிர்க்கு இத்தனை கூற்றமும் வேண்டுமோ என்பான் ஆருயிர்க்கே கூற்றம் என்றான். விருந்தினராய் வந்தார் - புதியராய் வந்தோர். ( 81 )
1970. வாருடுத்த வெம்முலைய
வண்டார்பூங் கோதையைப்
போகொடுத்தார் பெண்ணென்றார்
கூற்றமே யென்றிட்டாற்
றாருடுத்த நீண்மார்பர்
தம்முயிர்தாம் வேண்டுபவே
னீருடுத்த விந்நகரை
நீத்திட டொழியாரோ.
பொருள் : வார் உடுத்த வெம்முலையை வண்டு ஆர் பூஙகோதையை - கச்சணிந்த வெம்முலையையுடைய வண்டுகள் நிறைந்த மலர்க் கோதையாளை; பேர் கொடுத்தார் பெண் என்றார் - பெயர் கொடுத்தவர் பெண்ணென்றனர்; கூற்றமே என்றிட்டால் - கூற்றம் என்று கூறுவராயின்; தார் உடுத்த நீள மார்பர் தம் உயிர்தாம் வேண்டுபவேல் - மாலையணிந்த பரந்த மார்பினார் தம் உயிரைத் தாம் விரும்புவரேல்; நீர் உடுத்த இந்நகரை நீத்திட்டு ஒழியாரோ? - நீர் சூழ்நத இந்த நகரத்தை விட்டுப் போகாரோ?
விளக்கம் : பெயரிட்ட தந்தையார் பெண் ணென்று பெயர் கொடுத்தமையாலேயே ஆடவர் இந்நகரை விட்டுப் போகாதிருக்கின்றனர் என்று கருதினான். தார் உடுத்த நீண்மார்பர் என்ற பெயர் தந்தையையே சுட்டிற் றென்பர் நச்சினார்க்கினியர். பிற ஆடவர்க்கே அவள் காமமூட்டிக் கூற்றமாவாள். பேர் கொடுத்தார் : ஒருவரைக் கூறும் பன்மை. ( 82 )
1971. பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடுந்
திங்கண் முகத்திலங்க்ச் செவ்வா யெயிறிலங்கக்
கொங்குண் குழறாழக் கோட்டெருத்தஞ் செய்தநோக்
கெங்கெங்கே நோக்கினு மங்கங்கே தோன்றுமே.
பொருள் : பைங்கண் மணிமகர குண்டலமும் பைந்தோடும் - பசிய கண்களையுடைய மணிகளிழைத்த மகர குண்டலமும் புதிய தோடும் ; திங்கள் முகத்து இலங்க - திங்களனைய முகத்திலே விளங்க ; செவ்வாய் எயிறு இலங்க - சிவந்த வாயிலே முறுவல் சிறிது விளங்க; கொங்கு உண் குழல் தாழ - மணமுற்ற கூந்தல் தாழ; கோட்டு எருத்தம் செய்த நோக்கு- சாய்த்த கழுத்தை வளைத்துப் பார்த்த பார்வை; எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே நோக்குமே-பார்த்த இடம் எங்கும் தோன்றாநின்றது.
விளக்கம் : இஃது எதிர் பெய்து பரிதல் ; முன் பெற்ற அரு நோக்கினை வியந்தான். ( 83 )
1972. வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோ
தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள்வேலோ வம்போ கயலோ நெடுங்கண்ணோ
கோளார்ந்த கூற்றமோ கொல்வான் றொடங்கினவே.
பொருள் : வாள் ஆர் மதி முகத்த - இவளுடைய ஒளி பொருந்திய திங்கள் முகத்திலே கிடக்கின்றவை; வாளோ - வாளோ?; வடுப்பிளவோ - மாவடுவின் பிளவோ?; தாள் ஆர் கழு நீரோ-தண்டையுடைய கழுநீரோ?; நீலமோ - நீல மலரோ?; தாமரையோ - தாமரை மலரோ?; நீள் வேலோ - நீண்ட வேலோ?; அம்போ - கணையோ?; நெடுங்கண்ணோ - நீண்ட கண்ணோ ?; கோளார்ந்த கூற்றமோ-கொல்லுதல் பொருந்திய கூற்றுவனோ?; கொல்வான் தொடங்கின - (எவையாயினும் என்ன?) கொல்லத் தொடங்கின !
விளக்கம் : அருணோக்கத்தினாற் கண், கயல், வடுப்பிளவு, கழுநீர், நீலம், தாமரை எனவுந் தக்கன; பொது நோக்கத்தினால், கூற்றம், வாள், வேல், அம்பு எனவுந் தக்கன - இவ்விரு பகுதியும் உடையன என்று கருதியதாக நச்சினார்க்கினியர் கூறுவர். ( 84 )
1973. என்றாங்கொன் மாதர் நலமெய்துவ தென்று சிந்தித்
தொன்றார்க் கடந்தான் புலம்புட்கொண் டிருத்த லோடு
மன்றே யமைந்த பசும்பொன்னட ராறு கோடி
குன்றாமல் விற்றான் குளிர்சாகர தத்த னென்பான்.
பொருள் : மாதர் நலம் எய்துவது என்று ஆம்கொல் என்று சிந்தித்து - மங்கையின் இன்பத்தை அடைவது என்று கூடுமோ என்று எண்ணி; ஒன்றார்க் கடந்தான் புலம்பு உட்கொண்டிருத்தலோடும் - பகைவரை வென்றவன் வருத்தங் கொண்டு இருந்தபோது ; அன்றே குளிர் சாகர தத்தன் என்பான் - அற்றை நாளே தங்கிய சாகரதத்தன் என்பவன் ; அமைந்த அடர் பசும்பொன் ஆறு கோடி குன்றாமல் விற்றான் - மாற்றமைந்த தகட்டுப் பொன் ஆறு கோடியென்ற எண்ணிற் குறையாமல் விற்றான்.
விளக்கம் : குளிர் : திசைச்சொல். மாதர் நலம் எய்துவது என்றாங்கொல் என மாறுக. ஒன்றார் - பகைவர். கடந்தான் : சீவகன். அடர்ப்பசும்பொன் என மாறுக. அடர் - தகடு. குளிர், திசைச்சொல் என்பர் நச்சினார்க்கினியர். குளிர் என்பதற்கு இருக்கை என்பது பொருள் அவர் கருத்துப்படி. இனி, பைங்கதிர் மதியிற்றெள்ளி என்புழிப்போலச் சாகரம் என்னும் பெயர்க்கேற்ற அடையாய் நின்றது எனினுமாம். ( 85 )
1974. திருமல்க வந்த திருவேயெனச் சோந்து நாய்கன்
செருமல்கு வேலாய்க் கிடமாலிது வென்று செப்ப
வரிமல்கி வண்டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்த
னெரிமல்கு செம்பொ னிலமாமனொ டேறி னானே.
பொருள் : நாய்கன் - சாகரதத்தன் ; திருமல்க வந்த திருவே எனச் சேர்ந்து - செல்வம் வளர்க்க வந்த திருவே என்று (சிவகனை) அடைந்து ; செரு மல்கு வேலாய்க்கு - போரிற் பல்கிய வேலையுடைய நினக்கு ; இது இடம் என்று செப்ப - இவ்வில்லம் இருப்பிடம் என்று கூற; வண்டு உண்டு வரிமல்கி அறை மாமலர்க் கண்ணி மைந்தன் - வண்டுகள் தேனைப் பருகி வரியென்னும் பண்ணை இசைக்கின்ற கண்ணியை உடைய சீவகன் எரிமல்கு செம்பொன் இலம் மாமனோடு ஏறினான் - ஒளி மிகுந்த செம்பொன் மனையை மாமனுடன் அடைந்தான்.
விளக்கம் : திருவே என்று உவப்பின்கண்பால் மயங்க உவமித்தார். திரு இரண்டனுள் முன்னது, செல்வம்; பின்னது, திருமகன்; சீவகனுக்கு உவமை. இடமால் என்புழி ஆல் அசை. வண்டு மல்கி உண்டு வரி அறை மலர் என இயைக்க. வரி ஒருவகைப் பண். மாமன் : சாகரதத்தன். ( 86 )
1975. நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க நாளு
மம்பொன் னகரு ளமைந்தேன்மற் றெனக்க மைந்தாள்
கம்பம் மிலாதாள் கமலைக்கு விமலை யென்பாள்
செம்பொன் வியக்கு நிறத்தாடிரு வன்ன நீராள்.
பொருள் : நம்பன்! சிறிதே இடைதந்து இது கேட்க - நம்பனே! சிறிது செவ்வி கொடுத்து இதனைக் கேட்க!; அம்பொன் நகருள் நாளும் அமைந்தேன் - இராசமாபுரத்தில் எப்பொழுதும் இருப்பேன் ; மற்று எனக்கு அமைந்தாள் - இனி எனக்கு வாழ்ககைத் துணைவியாக அமைந்தவள்; கம்பம் இலாதாள் - கற்பில் அசைவில்லாதவள் ; கமலைக்கு - ஆகிய கமலைக்கு, விமலை என்பாள் - விமலை என்னும் பெயரினாள்; செம்பொன் வியக்கும் நிறத்தாள் திருவன்ன நீராள் - நல்ல பொன்னும் வியக்கும் நிறத்தினாள், திருமகளனைய பண்பினாளாக,
விளக்கம் : இப்பாட்டுக் குளகம். நம்பன் : விளி. இடை - செவ்வி. நகர் - இராசமாபுரம். அமைந்தாளாகிய விமலை. கம்பமிலாதாளாகிய விமலை எனத் தனித்தனி கூட்டுக. பொன்னோ என்று வியத்தற்குரிய நிறத்தான் என்க. ( 87 )
1976. பூம்பாவை வந்து பிறந்தாளப்
பிறந்த போழ்தே
யாம்பால வெல்லா மறிவாரன்
றெழுதி யிட்டார்
தும்பியாது மில்லாக் குளம்போன்றதென்
றோமில் பண்டங்
கூம்பாத செல்வக் கொடியேயிது
கேண்மோ வென்றான்.
பொருள் : பூம்பாவை வந்து பிறந்தாள் - பூம்பாவை பேன்றாள் வந்து பிறந்தாள்; அப் பிறந்த போழ்தே - அப்படிப் பிறந்த பொழுதே; ஆம்பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார் - ஆகும் பகுதியின் யாவையும் அறிந்த கணிகள் அன்று பிறந்த குறிப்பு எழுதிவிட்டனர் ; தூம்பு யாதும் இல்லாக் குளம் போன்றது என் தோம் இல் பண்டம் -(அப்பொழுதிருந்தே) போகும் வழி ஏதும் இல்லாத குளம் போல நிறைந்தது என் குற்றமில்லாத பண்டம்; இது கூம்பாத செல்வக் கொடியே - இதுவும் நினக்குக் குறையாத செல்வம் வருவதற்குரிய ஒழுங்கேயாகும்; இது கேள் என்றான் - இது கேள் என்று அக்கணி கூறினான்.
விளக்கம் : கேண்மோ, மோ : முன்னிலையசை. கொடி - ஒழுங்கு ; கொடிக் கூரை (புறநா. 22) என்றார் பிறரும். பூம்பாவை: விமலை. பிறந்த அப்பொழுதே என மாறுக. தூம்பு - ஈண்டு நீர் கழியும் வழி. தோம் - குற்றம். ( 88 )
1977. மங்கைக் குரியான் கடையேறும்வந் தேற லோடும்
வங்கந் நிதிய முடன்வீழுமற் றன்றி வீழா
தெங்குந் தனக்கு நிகரில்லவ னேற்ற மார்ப
நங்கைக் கியன்ற நறும்பூவணைப் பள்ளி யென்றான்.
பொருள் : மங்கைக்கு உரியான் கடைஏறும் - இம்மங்கைக்குத் தக்கவன் நின்கடையில் வந்து அமர்வான்; வந்து ஏறலோடும் - வந்து அமர்ந்த வுடனே; வங்கம் நிதியம் உடன் வீழும் - மரக்கலத்திலே ஈட்டப்பட்ட செல்வம் ஒரு சேர உன்கடையில் தங்கம் ; அன்றி வீழாது-இங்ஙனம் அன்றிப் பொருள் தங்காது; எங்கும் தனக்கு நிகரில்லவன் ஏற்ற மார்பம் - எங்கும் தனக்கு ஒப்பற்ற அவனுடைய தகுதியான மார்பமே; நங்கைக்கு இயன்ற நறும் பூவணைப் பள்ளி என்றான்-விமலைக்குப் பொருந்திய மணமலர் நிறைந்த அணையாகிய சேக்கை என்று கணி கூறினான்.
விளக்கம் : மற்று : அசை. மங்கைக்கு : விமலைக்கு. உரியான் - உரிய கணவன். வங்கம் நிதியம் - மரக்கலத்தாலீட்டப்பட்ட பொருள் என்க. மற்று அன்றி வீழா என்பது அவளுக்குரிய கணவன் வந்தாலன்றிப் பொருள் சேராது என்பதைக் காட்டியது. மார்பம் பூவணைப்பள்ளியாம் என்க. ( 89 )
1978. ஏழாண்டின் மேலு மிரண்டாண்டிரண் டெய்தி நின்றாள்
வீழா நிதியு முடன்வீழ்ந்தது வில்வ லாய்க்கே
யூழாயிற் றொல்கு நுசுப்பஃக வுருத்து வீங்கிச்
சூழாரம் வைத்த முலையாணலஞ் சூழ்க வென்றான்.
பொருள் : வீழா நிதியும் உடன் வீழ்ந்தது - (அவ்வாறே) வராத செல்வமும் இன்று சேர வந்தது ;ஏழாண்டின்மேலும் இரண்டு இரண்டு ஆண்டு எய்தி நின்றாள்- இவளும் பதினொன்றைக் கடந்து பன்னிரண்டாவது ஆண்டைப் பெற்று நின்றாள்; வில்வ லாய்க்கே ஊழாயிற்று - வில்வல்லானாகிய நினக்கு நல்வினையிருந்தது; ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி - நுடங்கும் இடை குறையும்படி உருவங்கொண்டு பருத்து; சூழ்ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான் - சூழ்ந்த ஆரத்தைத் தாங்கின முலையாளின் நலத்தைத் தழுவுக என்றான்.
விளக்கம் : ஏழண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு - பதினோராண்டு ஒல்கு நுசுப்பு - துவளும் இடை. அஃக - குறைய. ஆரம் - முத்துமாலை. ( 90 )
வேறு
1979. ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென வேந்தலைத்
தேற்றி னான்றிரு மாநலஞ் செவ்வனே
தோற்ற மாதருந் தோன்றலைக் காண்டலு
மாற்றி னாடன தாவியுந் தாங்கினாள்.
பொருள் : ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடி தானே வந்து வீழ்ந்த தன்மைபோல; ஏந்தலைத் தேற்றினான் - (நமக்கும் இது வந்தது என்று கருதும்படி அவன்) சீவகனை இவ்வாறு கூறித் தேற்றினான்; திருமா நலம் செவ்வனே தோற்ற மாதரும் - அழகாகிய பெரிய நலத்தை முற்றும் இழந்த விமலையும்; தோன்றலைக் காண்டலும் தனது ஆவியும் தாங்கினாள் - சீவகனைக் கண்ட அளவிலே தன் உயிரையும் போகாமல் தடுத்தாள்; ஆற்றினாள் - தன் தந்தை அவனுக்குக் கூறியதைக் கேட்ட அளவிலே ஆற்றுவதுஞ் செய்தாள்.
விளக்கம் : திரு மா நலம் - திருமகளின் பேரழகு எனினும் ஆம். வீழ்ந்தது என : வீழ்ந்தென : தொகுத்தல் விகாரம். இரத்தற்கு ஏந்திய கையில் இடுவோர் கைத்தொடி வீழ்ந்தாற் போல என்பது கருத்து. ஏந்தலை : சீவகனை. தேற்றினான் என்றது சீவகனுக்குத் தெளிவுண்டாகுமாறு கணித நூலார் கூறியதும் அதன்படியே நிகழ்ந்ததும் கூறினான் என்றதாயிற்று. தோன்றலைக் காண்டலும் திருமாநலந் தோற்ற மாதரும் தந்தை கூறியது கேட்ட அளவின் ஆற்றினாள் ஆவியுந் தங்கினாள் என்க. ( 91 )
1980. அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற்
செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப்
பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ
விம்ப ரில்லாதோ ரின்ப மியற்றினார்.
பொருள் : அம் பொன் கொம்பு அனையாளையும் - அழகிய பொற்கொடி போன்றவளையும்; வார்கழல் செம்பொன் குன்று அனையானையும் - கட்டிய கழலையுடைய பொன்மலை போன்றவனையும்; பைம்பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழு - புதிய பொன்னாலமைத்த பெரிய மனையிலே பல இயங்களும் முழங்கா நிற்க; சீர் பெற - சிறப்புற; இம்பர் இல்லது - இவ்வுலகில் இல்லதாகிய; ஓர் இன்பம் இயற்றினார் - ஒப்பற்ற மணத்தைப் புரிந்தனர்.
விளக்கம் : மணத்தை இன்பம் என்றது கருவி ஆகுபெயர். கொம்பனையாள் : விமலை. குன்றனையான் : சீவகன். பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். இம்பர் - இவ்வுலகம். இன்பம் இயற்றினார் என்றது. திருமணம் இயற்றினர் என்றவாறு. ( 92 )
1981. கட்டி லேறிய காமரு காளையும்
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்
விட்டு நீங்குத லின்மையின் வீவிலா
ரொட்டி யீருடம் போருயி ராயினார்.
பொருள் : கட்டில் ஏறிய காமரு காளையும் - கட்டிலில் அமர்ந்த விருப்பம் வருதற் கான காளையும்; மட்டு வாய் அவிழ் மாமலர்க் கோதையும் - தேன் பொருந்திய வாய் மலர்ந்த பெருமை பொருந்திய மலர்க் கோதையாளும்; விட்டு நீங்குதல் இன்மையின் - விட்டு நீங்கி நுகரும் தன்மை இல்லாமையால்; வீவு இலார் - கெடுதல் இல்லாதவராய்; ஒட்டி ஈருடம்பு ஓர் உயிர் ஆயினார் - மனம் ஒன்றி ஈருடம்பும் ஓருயிரும் என ஆயினார்.
விளக்கம் : கட்டில் ஏறிய - பிணைப்பினையுடைய இல்வாழ்க்கையிலே, சென்ற என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்! கட்டிலேற்றுதல் ஒரு சடங்கு. மட்டு - தேன். கோதை : விமலை. உயிர் ஒன்றெனவே மனமுமொன்றென்பது போதரும். ( 93 )
1982. நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில்
கலவங் கண்புதை யாது கனற்றலி
னுலக மூன்று முறுவிலைத் தென்பவே
புலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே.
பொருள் : நிலவு வெண் கதிர் நீர்மைய பூந்துகில் - நிலவு போல வெண்கதிர் பரப்பும் தன்மையுடைய அழகிய ஆடை; கலவம் கண் புதையாது - மேகலையை மறையாமல்; கனற்றலின் - தானே நெகிழ்ந்து அவனைக் கனற்றுவதாலே; புலவு வேற் கண்ணினாள் முலைப் போகம் - புலால் கமழும் வேலனைய கண்ணினாளின் முலைப்போகமானது; உலகம் மூன்றும் உறுவிலைத்து என்ப - மூன்றுலகையும் பெறுகின்ற விலையுடையது என்பர்.
விளக்கம் : அவள் கொளுத்த அவன் கோடலிற் கனற்றுதல் அவள் மேலாயிற்று. ( 94 )
1983. தேன வாங்கமழ் கண்ணியுந் தெவ்வர்த
மூன வாங்கதிர் வேலுறு காளையுங்
கான வாங்கடி நாறுமென் பள்ளிமேல்
வான வாம்வகை யால்வைகி னார்களே.
பொருள் : தேன் அவாம் கமழ் கண்ணியும் - வண்டுகள் விரும்பும் மணங்கமழ் கண்ணியும்; தெவ்வர் தம் ஊன் அவாம் கதிர்வேல் உறு காளையும் - பகைவருடைய ஊனை விரும்பும் கதிர் வேல் கைக்கொண்ட காளையும்; கான் அவாம் கடிநாறும் மென்பள்ளிமேல் - கானம் விரும்பும் மணங் கமழும் மெல்லிய பள்ளியின் மேல்; வான் அவாம் வகையால் வைகினார்கள் - விண்ணும் விழையும் வகையில் இன்பம் நுகர்ந்தனர்.
விளக்கம் : விண்ணுலகு இன்பம் நுகரும் இடமாகையால் அவரும் விரும்பும் வகையால் என்றார். இத்துணையும் மணம் புரிந்துகொண்ட அன்றைய நுகர்ச்சி கூறப்பட்டது. ( 95 )
வேறு
1984. வெண்மதி நெற்றி தேய்த்து
விழுத்தழும் பிருப்ப நீண்ட
வண்ணனன் மாடத் தங்க
ணகிற்புகை யமளி யேறிப்
பண்ணமை மகர வீணை
நரம்புரீஇப் பாவை பாட
மண்ணமை முழவுத் தோளான்
மகிழ்ச்சியுண் மயங்கி னானே.
பொருள் : வெண்மதி நெற்றி தேய்த்து - வெண்திங்களின் தலை தேய்த்தலின்; விழுத் தழும்பு இருப்ப நீண்ட - சிறந்த தழும்பு இருக்கும்படி நீண்ட; அண்ணல் நல்மாடத்து அங்கண் -நீண்ட அழகிய மாடத்திலே; அகில்புகை அமளி ஏறி - அகிற் புகையுண்ட அணையிலே அமர்ந்து; பண் அமை மகரவீணை நரம்பு உரீஇப் பாவை பாட - பண்ணமைந்த மரக யாழிலே நரம்பினைத் தடவிப் பாவை போல்வாள் பாட; மண் அமைமுழவுத் தோளான் - மண்ணுதலமைந்த முழவினைப் போன்ற தோளினான்; மகிழ்ச்சியுள் மயங்கினான் - இன்பக் களிப்பிலே மயங்கினான்.
விளக்கம் : இதுமுதல் மற்றை நாளைப் புணர்ச்சி கூறுகின்றார். அதுவும் அமளி யேறி என்றதனால், நீங்யிருந்து நாட்கடன் கழித்து எய்தினா ரென்றுணர்க. இங்ஙனம் இரண்டுநாள் ஈண்டுச் சென்றமை தோன்ற, மேலே, நாளிரண்டு சென்ற (சீவக. 1995) என்றார். ( 96 )
1985. இன்னரிச் சிலம்பொ டேங்கிக்
கிண்கிணி யிகலி யார்ப்பப்
பொன்னரி மாலை தாழப்
பூஞ்சிகை யவிழ்ந்து சோர
மின்னிருங் கலாபம் வீங்கி
மிளிர்ந்துகண் ணிரங்க வெம்பித்
துன்னருங் களிகொள் காமக்
கொழுங்கனி சுவைத்து விள்ளான்.
பொருள் : இன்னரிச் சிலம்பொடு ஏங்கிக் கிண்கிணி இகலி ஆர்ப்ப - இனிய பரல்களையுடைய சிலம்புடன் ஒலித்துக் கிண்கிணி மாறுபட்டு ஒலிப்ப; பொன் அரி மாலை தாழ - பொன்னரிமாலை தாழ்ந்திட; பூஞ்சிகை அவிழ்ந்து சோர - பூவையணிந்த முடி அவிழ்ந்து சோர்வுற; மின் இருங் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க - ஒளியை யுடைய பெரிய கலாபம் விம்மிப் பிறழ்ந்து ஒலிப்ப; வெம்பி - காம இன்பத்திலே அனன்று; துன்னருங் களி கொள் - கிடைத்தற்கரிய மகிழ்ச்சியைக் கொண்ட; காமக் கொழுங்கனி சுவைத்து விள்ளான் - காமமாகிய கொழுவிய கனியைச் சுவைத்துப் பகலெல்லாம் பிரியானாயினான்.
விளக்கம் : கனி - சாரம். தாழ்தலானும் சோர்தலானும் ஊற்றினைச் சிறிது நீங்கின கரணமாம். ( 97 )
1986. தொழித்துவண் டிமிருங் கோதை
துணைமுலை முள்கப் பூம்பட்
டழித்துமட் டொழுகுந் தாரான்
மணிவள்ளத் தாய்ந்த தேற
லெழிற்பொலி மாதர்க் கேந்த
வினிதினி னுகர்ந்து காமக்
கொழித்திரை கடலுண் மூழ்கிக்
கோதைகண் டுயின்ற வன்றே.
பொருள் : தொழித்து வண்டு இமிரும் கோதை - சிதறி வண்டுகள் முரலுங் கோதையாளின்; துணை முலை பூம்பட்டு அழித்து முள்க - துணை முலைகள் பூம்பட்டை அழித்து நீங்காமல் முயங்கலின்; மட்டு ஒழுகும் தாரான் - தேனொழுகும் மாலையான்; மணிவள்ளத்து ஆய்ந்த தேறல் - மணிகளிழைத்த கிண்ணத்திலே ஆராய்ந்த மதுவை; எழில் பொலி மாதர்க்கு ஏந்த - அழகினால் விளங்கிய விமலைக்கு ஏந்த; இனிதினின் நுகர்ந்து - இனிதாகப் பருகி; காமக் கொழித்திரை கடலுள் மூழ்கி - காமமாகிய கொழித்து இரைக்குங் கடலிலே மூழ்கி; கோதை கண் துயின்ற - கோதையின் கண்கள் துயின்றன.
விளக்கம் : தொழித்தல் - சிதறுதல். இமிரும் - முரலும். கோதை : விமலை. முள்குதல் - முயங்குதல். ( 98 )
1987. பாசிலை சுருட்டி மைந்தன்
கொடுக்கிய பரந்து மின்னும்
தூசுலா மல்கு றீண்டத்
துயிற்கண்கள் விழித்த தோற்றம்
வாசவான் குவளை மெல்ல
வாய்விடா நின்ற தொக்கு
மேசுவ தொன்று மில்லா
விணைவட முலையி னாட்கே.
பொருள் : பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய - வெற்றிலையை மடித்துச் சீவகன் விமலைக்குக் கொடுத்தற்கு; பரந்து மின்னும் தூசு உலாம் அல்குல் தீண்ட - பரவி மின்னும் ஆடை உலாம் அல்குலைத் தீண்டின அளவிலே; ஏசுவது ஒன்றும் இல்லா இணைவட முலையினாட்கு - குற்றம் சிறிதும் இல்லாத வட மணிந்து இணைந்த முலையாட்கு; துயில் கண்கள் விழித்த தோற்றம் - துயின்ற கண்கள் மலர்ந்த காட்சி; வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும் - மணமுறும் சிறந்த குவளை (முன்பு அலருந் தன்மையின்றி) மெல்ல அலருந்தன்மையை ஒக்கும்.
விளக்கம் : வெற்றிலை மடித்துக் கொடுத்தற் கென்றது இடக்கர். புணர்ச்சிக்கண் நாண் தோன்றலின், தூசு நெகிழ்ந்து மேற்கிடந்தமை தோன்ற உலாவும் என்றார். ( 99 )
1988. கங்குற்பாற் புகுந்த கள்வ
னிவனெனக் கதுப்பிற் றாழ்ந்த
தொங்கலான் முன்கை யாத்துச்
சொல்லுநீ வந்த தென்ன
நங்கையான் பசித்து வந்தே
னெப்பொரு ணயப்ப தென்றாட்
கங்கலுழ் மேனி யாய்நின்
னணிநல வமிழ்த மென்றான்.
பொருள் : கங்குல்பால் புகுந்த கள்வன் இவன் என்று - இரவிலே புகுந்த கள்வன் இவனென்று கூறி; கதுப்பில் தாழ்ந்த தொங்கலான் முன்கை யாத்து - கூந்தலில் தங்கிய மாலையினால் அவன் முன்கையைக் காட்டி; நீ வந்தது சொல்லு என்ன - இனி நீ வந்த வேலையைக் கூறு என்று வினவ; நங்கை! யான் பசித்து வந்தேன் - நங்கையே! யான் பசியால் வந்தேன் (என்று கூற); எப்பொருள் நயப்பது என்றாட்கு - எப்பொருளை நீ விரும்புவது என்றாட்கு; அம் கலுழ் மேனியாய்! நின் அணிநல அமிழ்தம் என்றான் - அழகொழுகும் மெய்யினாய்! நின் அழகாகிய அமிழ்தம் முழுதும் என்றான்.
விளக்கம் : பசித்துண்பார்க்கு உணவுகள் பல என்பது தோன்ற, எப்பொருள் என்றாள். துயில் மயக்கமாதலின் தானறியாமற் புகுந்த கள்வன் என்று அசதியாடினாள். ( 100 )
1989. செயிர்த்தவள் சிவந்து நோக்கிச்
சீறடி சென்னி சோத்தி
யயிர்ப்பதென் பணிசெய் வேனுக்
கருளிற்றுப் பொருள தென்ன
வுயிர்ப்பது மோம்பி யொன்று
முரையலை யாகி மற்றிப்
பயிர்ப்பில்பூம் பள்ளி வைகு
பகட்டெழின் மார்ப வென்றாள்.
பொருள் : செயிர்த்தவள் சிவந்து நோக்கி - (நின்னலம் என்றதனாற் ) சீற்றங் கொண்டவள் கண் சிவந்து பார்க்க; சீறடி சென்னி சேர்த்தி - அவள் சிற்றடியிலே தன் முடியை வைத்து; அயிர்ப்பது என்? - என்னை ஐயுறுதல் ஏன்?; பணிசெய்வேனுக்கு அருளிற்றுப் பொருள் அது என்ன - நின் ஏவல் செய்வேனுக்கு நீ அருளியது யாது ஒன்று அதுவே பொருள் என்ன; பயிர்ப்புஇல் பகட்டு எழில் மார்ப! - அருவருப்பை அறியாத பெருமை பொருந்திய அழகிய மார்பனே!; உயிர்ப்பதும் ஓம்பி - நீ இறந்துபடுதலையும் தவிர்த்து; ஒன்றும் உரையலை ஆகி - ஒன்றும் கூறாமல்; இப்பூம் பள்ளி வைகு என்றாள் - இந்த மலரணையிலே தங்குக என்றாள்.
விளக்கம் : முன்னர் நின்னலம் என்றதனால், பிறர் நலமின்றி நின்னலம் என்பது போதருதலின் அது செயிராயிற்று. நோக்கி - நோக்க. அது பொருள் என்றான், நீ இறந்துபடுக என்று நீ கூறினும் அதுவே எனக்குப் பொருள் என்பது தோன்ற. எனவே, ஊடலும் கூடலும் கூறினாரென்க. ( 101 )
1990. உள்ளிழு துடைய வெம்பி
யுற்பல வுருவு கொண்ட
வெள்ளியிற் புனைந்த கோல
விளக்கொளி வெறுவி தாக
வள்ளிதழ்க் கோதை வல்லான்
வட்டிகை நுதியின் வாங்கிப்
பள்ளிமே லெழுதப் பட்ட
பாவைபோ லாயி னாளே.
பொருள் : வெள்ளியிற் புனைந்த கோல விளக்கு - வெள்ளியாற் செய்த அழகிய விளக்கு; உள் இழுது உடைய வெம்பி - இழுது உடையும்படி தீ மிகுந்து எரிதலின்; உற்பல உருவு கொண்ட ஒளி வெறுவிதாக - அரக் காம்பலின் வடிவைக் கொண்ட ஒளி, விடியற்கால மாதலின் அவ்வொளி கெட; வள் இதழ்க் கோதை - வளவிய இதழையுடைய கோதையினாள்; வட்டிகை நுதியின் வாங்கி - துகிலிகை நுனியாலே வட்டிகைப் பலகையினின்றும் நீக்கி; பள்ளிமேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாள் - பள்ளியின் மேல் எழுதப்பட்ட பாவையாயினாள்.
விளக்கம் : வாங்குதல் ஈண்டு நீக்குதற்பொருளது. இனி, கட்டிலேறிய என்னுஞ் செய்யுள் முதலியவற்றை ஒருநாளைக் கூட்டமாக்கி உரைப்பாருமுளர். ( 102 )
வேறு
1991. மங்கையர் பண்ணிய மருத யாழ்குழ
னங்கையைப் பிரியுமிந் நம்பி யின்றென
வங்கதற் கிரங்கின வாரும் பேதுறக்
கங்குல்போய் நாட்கடன் கழிந்த தென்பவே.
பொருள் : ஆரும் பேதுற - கூடியிருந்தோ ரெல்லோரும் பிரிவை நினைந்து வருந்த; மங்கையர் பண்ணிய மருதயாழ் குழல் - மங்கையர் இசைத்த மருதயாழும் குழலும்; இந் நம்பி நங்கையை இன்று பிரியும் என - இந் நம்பி இவளை இன்று பிரிவான் என்று; அங்கு அதற்கு இரங்கின - அங்கே அதற்காக இரங்கின போன்றன; கலங்குல்போய் நாள் கடன் கழிந்தது - இரவு விலகக், காலைக்கடனும் முடிந்தது.
விளக்கம் : மருதம் - காலைப்பண். போய் - போக. பண்ணிய - இசைத்த. மருதயாழ் - மருதம் என்னும் காலைப் பண்ணை இசையாநின்ற யாழ் என்க குழல் - வேய்ங்குழல். நங்கை : விமலை; நம்பி : சீவகன் அதற்கு - அப்பிரிவிற்கு. ஆரும் - யாரும். பேது - துன்பம். போய் - போக. ( 103 )
1992. ஏந்துபூங் கோதைக டிருத்தி யேர்படச்
சாந்துகொண் டிளமுலை யெழுதித் தையறன்
காந்தள முகிழ்விரல் கையி னாற்பிடித்
தாய்ந்தவட் கிதுசொலு மலங்கல் வேலினான்.
பொருள் : அலங்கல் வேலினான் - மாலையணிந்த வேலினான். ஏந்து பூங்கோதைகள் ஏர்படத் திருத்தி - ஏந்திய பூங்கோதை அழகுறத் திருத்தி; சாந்து கொண்டு இளமுலை எழுதி - சந்தனங் கொண்டு இளமுலையிலே எழுதி; தையல் தன் காந்தள் அம்முகிழ் விரல் கையினால் பிடித்து - தையலின் காந்தளின் அழகிய அரும்புபோலும் விரலைக் கையினாற் பற்றி; அலங்கல் வேலினான் அவளுக்கு ஆய்ந்து இதுசொலும் - மாலையணிந்த வேலினான் அவளும் ஆராய்ந்து இதனைக் கூறுவான்.
விளக்கம் : ஏர் - அழகு. ஏர்படத்திருத்தி என மாறுக. முலையிற்றொய்யிலெழுதி என்க. முகிழ் - அரும்பு. ஆய்ந்து - ஆராய்ந்து துணிந்து என்க. அவட்கு : விமலைக்கு. ( 104 )
1993. பூவினுட் டாழ்குழற் பொன்செ யேந்தல்குன்
மாவினுட் டாழ்தளிர் மருட்டு மேனியாய்
காவினுட் டோழரைக் கண்டு போதர்வே
னேவினுட் டாழ்சிலை யெறிந்த கோலினே.
பொருள் : பூவினுள் தாழ் குழல் - பூவினுள் தங்கிய குழலையும்; பொன் செய் ஏந்து அல்குல் - மேகலையணைந்த அல்குலையும் உடைய; மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்! - மாந்தளிரை மயக்கும் மேனியினாய்!; ஏவினுள் தாழ்சிலை எறிந்த கோலின் - ஏவுந் தோழிற் குறைந்த வில்லெய்த அம்புபோல; காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன் - காவிலே என் தோழரைக் கண்டு மீளுவேன்.
விளக்கம் : செய்பொன் - மேகலை. தாழ்சிலை எறிந்த கோலின் - இதனை அவள் அணித்தே சென்று விரைந்து வருவான் எனக் கூறியதாக நினைத்தற்கும், அவன் வலியிலாதான் எய்த அம்பு அவனிடத்தே திரும்பிவாராமை போலத் தான் வேறிடத்துச் செல்லுதற்கும் உவமையென எண்ணினர். ( 105 )
1994. என்றவ னுரைத்தலு மெழுது கண்மலர்
நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின்
மன்றனா றரிவையைத் தெருட்டி மாமணிக்
குன்றனான் கொடியவள் குழைய வேகினான்.
பொருள் : என்று அவன் உரைத்தலும் - என்று அவன் கூறினானாக; எழுது கண்மலர் நின்ற நீரிடை மணிப்பாவை நீந்தலின் - மை யெழுதிய கண் மலரில் ததும்பி நின்ற நீரிலே கண்மணிப் பாவை நீந்துதலின்; மாமணிக் குன்றனான் மன்றல் நாறு அரிவையைத் தெருட்டி - பெரிய மணிக் குன்றனைய சீவகன் மணங் கமழும் அவளைத் தெளிவித்து; கொடியவள் குழைய ஏகினான் - அவள் வருந்தத் தான் சென்றான்.
விளக்கம் : அவன் : சீவகன். கண்மணியின் கட்பாவை என்க. மன்றல் - மணம். அரிவையை : விமலையை. குன்றனான் : சீவகன். (கொடிவள்) கொடிபோல்பவன் என்க. ( 106 )
விமலையார் இலம்பகம் முற்றிற்று.