பதிவு செய்த நாள்
30
மே
2023
03:05
பாகூர்:பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நேற்று நடந்தது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் மூலநாதருக்கு தாராபிஷேகம் நடைபெற்று வந்தது. அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி நேற்று மூலநாதருக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடந்தது. இதனையொட்டி, காலை 6.00 மணிக்கு பால விநாயகர், வேதாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தென்பெண்ணையாற்றில் இருந்து நீர் கொண்டு வரப்பட்டு, காலை 7.00 மணிக்கு கலச ஸ்தாபனம், கலச பூஜைகள் நடைபெற்றது. 12.00 மணிக்கு உலக நன்மை வேண்டி யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கலச தீர்த்தம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.