பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
04:06
ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை அருகே, பனப்பாக்கம் காளத்தீஸ்ரவர் கோவில் கும்பாபிஷேகம் முதல்கால யாகசாலை பூஜையுடன், இன்று தொடங்குகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 7ல் நடக்கிறது. இதை முன்னிட்டு முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா இன்று தொடங்குகிறது. இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை தொடக்கம் மற்றும் திருமுறை இன்னிசை நடக்கிறது.
மாலை, 5:00 மணிக்கு திருக்குவளை சகோதரிகள் சுந்தரி – சாவித்ரி மங்கள இசை, இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை சுகி சிவம் நடுவராக பங்கேற்கும் ஆன்மிக பட்டிமன்றம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, மாலை, 5:00 மணிக்கு சுந்தர ஆவுடையப்பனின் ஆன்மிக சொற்பொழிவு, பாம்பே சாரதா ராகவ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. அன்றிரவு, 7:30 மணி முதல், டாக்டர் ராம் சுந்தர் குழுவினரின் தனி வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ௭ம் தேதி காலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 7:00 மணிக்கு, கருவறை விமானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம், 9:30 மணிக்கு மஹா அபிஷேகம், மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை எஸ்.ஆர்.நாட்டிய கலாலயா வழங்கும் பரத நாட்டிய நிகழ்ச்சி, இரவு, 7:00 மணி முதல், சிவன் அருள் ஆதி இசை கலைஞர்கள் திருக்கூட்டத்தினரின் கயிலாய வாத்தியம் நிகழ்ச்சி, இரவு, 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அதிகாரிகள், பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர். விழாவில் நீதிபதி சுதாகர் ராமலிங்கம், அமைச்சர்கள் காந்தி, சேகர்பாபு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்தின் முத்துக்குமார சுவாமி தம்பிரான், பனப்பாக்கம் டவுன் பஞ்., சேர்மன் கவிதா சீனிவாசன், பனப்பாக்கம் பாஸ்கர் குருக்கள், தளவா வாசுதேவ சிவாச்சாரியார், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருக்கழுகுன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.