பதிவு செய்த நாள்
05
ஜூன்
2023
04:06
அவிநாசி: அவிநாசியில் உள்ள கெங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும் நாயன்மார்களால் பாடல் பெற்றதும் காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்கும் உரிய ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,கடந்த மாதம் 22ம் தேதி இரவு கோவிலில் உள்ள 63 நாயன்மார்கள் கோபுர கலசங்கள் உடைக்கப்பட்டு, உண்டியல்கள் திருட முயற்சி நடைபெற்றும்,கோவில் கருவறையில் உள்ள மூலவர் சிலையின் வெள்ளி காப்புகள் அகற்றப்பட்டும்,வஸ்திரங்கள் கலைந்தும்,செந்திலாண்டவர் சன்னதியில் சிலையின் வலது கை விரல்கள் உடைத்து,சன்னதியில் இருந்த சேவற்கொடி மற்றும் வேல் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து,உலக சிவனடியார்கள் திரு கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகர் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக,ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி 150ம் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது. அதன் பின்பு கோவில் வளாகத்தில் உள்ள தீபஸ்தம்பம் முன்பாக மோட்ச தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பொன் மாணிக்கவேல் சம்பவம் நடைபெற்ற அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பொன்மாணிக்கவேல் கூறும்போது முதலில் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று கோவில் செயல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.இருவருக்கும் குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கு, அரை சம்பளம் மட்டும் தர வேண்டும். மேலும் முழுமையாக விசாரணை முடியும் வரை இருவருக்கும் உண்டான அனைத்து பண பலன்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் அப்போதுதான் மற்ற கோவில்களில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பணியை உணர்ந்து வேலை செய்வார்கள்.சிலையை உடைப்பதற்கு என யாரும் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றுவதில்லை அவிநாசி கோவிலில் நடைபெற்ற சம்பவத்தை பார்க்கும்போது முழுமையாக சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நபர் மனநோயாளி இல்லை என தெரிகிறது அரசு மருத்துவ சைக்கார்டிஸ்ட் தான் முடிவு செய்ய வேண்டும்.கோவிலில் உள்ள ஸ்டராங் ரூம் என சொல்லப்படும் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள உற்சவ மூர்த்திகளின் அறைகள் மிகவும் பலவீனமாக உள்ளது.இந்த கோவிலில் பணியில் உள்ள கோவில் செயல் அலுவலர் எப்படி திறமையற்ற நபராக உள்ளாரோ அதேபோல வெறும் 750 ரூபாய் பூட்டை போட்டு சிலைக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுமார் 7 கோடி மக்களில் 83 சதவீத மக்கள் வழிபடும் வழிபாட்டு தளத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றதற்கு பொறுப்பற்ற அதிகாரிகள் காரணமாக உள்ளார்கள். மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் வரை இந்தச் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். கோவிலில் உள்ள பாதுகாப்பிற்கான செக்யூரிட்டி சிஸ்டம் என சொல்லப்படும் அலாரம் உண்டியல்களில் கொள்ளை முயற்சி நடைபெற்ற போது செயல்படவில்லை அதேபோல கருவறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை.கோவில் காவலாளி முறையாக பிரகாரத்தில் ரோந்து போகாததும், இது போன்ற பல்வேறு குறைபாடுகள் இந்த சம்பவத்தில் முன் உள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்றதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளி மீது உரிய வழக்கை பதிவு செய்த அவிநாசி போலீசாரின் பணியின் 100% திருப்தி அளிக்கிறது.
இந்த கோவிலில் நடைபெற்ற சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தையும் கொள்ளை முயற்சி செய்யும் இனி தமிழகத்தில் எந்த ஒரு தொன்மையான கோயில்களிலும் நடக்கக்கூடாது அரசு துறையின் கீழ் செயல்படும் ரெவென்யு,போலீஸ்,போக்குவரத்து துறைகளைப் போன்று மக்கள் வரிப்பணத்தில் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பதைப் போன்ற நிலை ஹிந்து சமய அறநிலை துறை அதிகாரிகளுக்கு கிடையாது.இது முழுமையாக கோவிலுக்கு சேர வேண்டிய மக்கள் அளிக்கும் நிதியிலிருந்து செயல்பட்டு வருகிறது.இதில் தவறு நடக்கும் பட்சத்தில் உடனடியாக பொறுப்பற்ற அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.