பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
02:06
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளதால், வெளியூர் பக்தர்கள் கடந்த சில நாட்களாக கோயிலில் முகாமிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த மூலவர் விநாயகர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில், கருவறை அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். மேலும், ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்பாக, இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த விநாயகர் கோயில் சிறப்பு பெற்று வழங்கி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கோயில் சீரமைக்கப்பட்டும், கோயில் முகப்பில் புதிதாக மண்டபம் கட்டப்பட்டும், நாளை (ஜூன் 8) காலை 10:45 மணிக்கு மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, 11:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 5 ல் விநாயகர் விக்னேஸ்வரர் பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மறுநாள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 9:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்றது. முன்னதாக ராமநாதபுரம் தேவஸ்தான திவான், கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோயிலில் இருந்து யாகசாலை பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக சென்று யாகசாலையில் வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணகுதி தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 7:45 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, நாடீ சந்தானம், ஆகிய பூஜைகளும், மகா பூர்ணாகுதி தீபாரணையும் நடைபெற்று, நாளை காலை 10:45 மணிக்கு மேல் 11:45 மணிக்குள் கோயில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான திவான், ஜமீன்தார், கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில், ராமநாதபுரம் சமஸ்தான ராணி சேதுபதி கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.