பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
05:06
மேட்டுப்பாளையம்: சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோவிலில், 11ம் தேதி மண்டல பூஜை நிறைவடைகிறது. சிறுமுகை பழத்தோட்டத்தில், பவானி ஆற்றின் கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 24ம் தேதி நடந்தது. இதை அடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக பூஜை செய்து வருகின்றனர். இன்று 44ம் நாள் மண்டல பூஜை நடந்தது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகிற, 11ம் தேதி, 48வது நாட்கள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது. அன்று காலை, 5:30 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. பின்பு காலை, 7:30 லிருந்து, 9:00 மணி வரை சிறுமுகை சுற்று வட்டார ஊர்களில் இருந்து, பால்குடம் எடுத்து வந்து, பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்பு, மதியம், 12:00 மணிக்கு,108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருப்பணிகள் குழுவினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.